`மதியத்திலிருந்து அவள் சாப்பிடவில்லை, என்னிடம் பணமும் இல்லை. அதனால் அவளுக்கு சாப்பாடு வாங்க முடியாமல் போனது. நான் அவளை என் மார்பில் இறுக்கமாகப் பிடித்துக் கொன்றேன்.” – கைதான தந்தை
பெங்களூரூவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ராகுல் பரமர் என்பவர், அழுதுகொண்டிருந்த தன் மகளுக்கு சாப்பாடு வாங்க காசு இல்லாததால், மகளைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் குற்றம்சாட்டப்படும் ராகுலுக்கு கடன்தொல்லை இருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக நவம்பர் 15-ம் தேதியன்று பள்ளிக்குச் செல்வதாகக் கூறி மகள் ஜியாவை, ராகுல் வெளியே அழைத்துச் சென்றிருக்கின்றார். ஆனால் அதன் பிறகு ராகுல் வீடுதிரும்பவேயில்லை.
பின்னர் ராகுலின் மனைவி பவ்யா, கணவன் ராகுலும் மகளும் காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார்.
அடுத்தநாள் பெங்களூரு-கோலார் நெடுஞ்சாலையிலுள்ள கெந்தட்டி ஏரியில் சிறுமி ஜியாவின் உடல் மிதந்திருக்கிறது.
பின்னர் மகள் ஜியாவைக் கொன்று உடலை வீசிய குற்றச்சாட்டின் பேரில் கோலார் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ராகுல், கடந்த வெள்ளிக்கிழமையன்று சம்பவம் நடந்த ஏரிக்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அங்கு போலீஸாரிடம் வாக்குமூலமளித்த ராகுல், “என் மகளை கொலைசெய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ளும் திட்டத்துடன் காலையில் வீட்டைவிட்டு வெளியேறினேன்.
ஆனால் நேரம் செல்ல செல்ல, நான் குழப்பமடைந்தேன். நான் வீட்டுக்குச் சென்றுவிட நினைத்தேன். ஆனால் கடன் கொடுத்தவர்களின் துன்புறுத்தல் மற்றும் போலீஸ் வழக்குகளின் எண்ணங்கள் என்னை தடுத்து நிறுத்தின.
மாலை வேளையில் ஏரிக்கரையை அடைந்த நான். அங்கு ஏரிக்கரை அருகே காரை நிறுத்திவிட்டு, ஒரு சிறிய கடைக்குச் சென்று, இருந்த கொஞ்ச பணத்தில் என் மகளுக்கு பிஸ்கட், சாக்லேட் வாங்கிக்கொடுத்தேன்.
சில நேரம், அவளுடன் காரின் பின் இருக்கையில் அமர்ந்து விளையாடினேன். பின்னர் அவள் பசியால் அழ ஆரம்பித்தாள். மதியத்திலிருந்து அவள் சாப்பிடவில்லை,
என்னிடம் பணமும் இல்லை. அதனால் அவளுக்கு சாப்பாடு வாங்கமுடியவில்லை. பிறகு அவளை நான் என் மார்பில் இறுக்கமாகப் பிடித்துக்கொன்றேன்.
அதையடுத்து அவளைப் பிடித்துக்கொண்டே தற்கொலைசெய்ய நானும் ஏரியில் குதித்தேன், ஆனால் தண்ணீர் குறைவாக இருந்ததால் உடலை தண்ணீரில் விட்டுவிட்டு, ரயில் முன் குதிக்க நான் முடிவு செய்தேன்” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ந்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.