ராசிபுரம் அருகே, இரண்டு குட்டிகளை ஈன்ற ஆடு இறந்துவிட, தாய் இல்லாமல் தவித்த ஆட்டுக் குட்டிகளுக்கு பசு மாடு ஒன்று பால் கொடுத்து அரவணைத்துக் கொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர், பசு மாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு, இவர் வளர்த்து வந்த ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது. சில நாட்களில் அந்த தாய் ஆடு இறந்து விட்டது. இதையடுத்து ராமசாமி, பாட்டிலில் பசும்பாலை ஊற்றி அந்த குட்டிகளுக்கு புகட்டி வந்தார்.
இந்நிலையில் ஒருநாள், ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு தனது வயலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, அவர் வளர்த்து வரும் ஒரு பசுவின் மடியில் அந்த ஆட்டுக் குட்டிகள் இரண்டும் பால் குடித்துக் கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தார்.
அதன் பின்னர், தினந்தோறும் அந்த ஆட்டுக்குட்டிகள் பசுவின் மடியில் பால் குடித்து வர, தாயில்லாமல் தவித்த குட்டிகளுக்கு அந்தப் பசுவே தாயாகிப் போனது.
இந்த காட்சியை சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, சுற்று பகுதிகளைச் சேர்ந்த பலரும் வந்து, இந்த அற்புத காட்சியை நெகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.