கடன் மறு சீரமைப்பு என்பதை இலங்கை முதல் தடவையாகவே முன்னெடுக்கின்றது. இதற்கு முன்னர் எமக்கு அந்த அனுபவம் இல்லை.
எனவே அதில் எதிர்பாராத சில தாமதம் நிலவுகின்றது. சீனா ஜப்பான் இந்தியா மற்றும் பரிஸ் கிளப் நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
வாகனம் தற்போது மிகப் பாரியதொரு பள்ளத்தில் சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு சரிந்து விழுந்து கொண்டிருக்கின்ற வாகனம் கீழே விழுந்து விடக்கூடாது. வாகனம் தரையைத் தொடுவதற்கு முன்னர் எப்படியாவது மீட்டெடுத்துவிட வேண்டும். இலங்கையின் பொருளாதாரமும் அந்த நிலையிலேயே இருக்கிறது. பொருளாதாரம் என்ற வாகனம் சரிந்து தரையைத் தொடுவதற்கு முன்னதாகவே அதனை மீட்டெடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைப்பது தொடர்ந்து தாமதமடைந்துகொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் ஒக்டோபர் மாதத்தில் இந்த 2.9 பில்லியன் டொலர் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர் டிசம்பர் மாதத்தில் அதனை பெற முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஜனவரி மாதம்வரை தாமதமடைந்திருக்கின்றது. ஜனவரி மாதத்திற்கு பின்னரும் தாமதமடையுமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கின்ற நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பதற்கு ஏன் இந்தளவு தூரம் தாமத நிலை ஏற்படுகின்றது என்பது ஆராயப்படவேண்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2.9 பில்லியன் உதவியை விரைவாக பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவர் இது தொடர்பாக சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு வருகின்றார். எனினும் இதில் எதிர்பாராத தாமதம் நீடித்துக்கொண்டிருக்கின்றது.
முக்கியமாக இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மிக முக்கியமானதாக அமைந்திருக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் இலங்கையின் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் கட்டத்தை இலங்கை கடந்து சென்றுவிட்டது. எனவே ஏதோ ஒரு வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றாக வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் உதவி கிடைப்பதுடன் இந்த செயற்பாடு நின்றுவிடாது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவி திட்டத்துக்குள் இலங்கை சென்றவுடன் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் மேலதிக புதிய கடன்களை இலங்கை பெற்றுக்கொள்ளமுடியும்.
அப்போதுதான் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து வெளியே வர முடியும். எனவே சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் பெறப்படவுள்ள கடன் என்பவை மிக முக்கியமானவையாக இருக்கின்றன.
அதனை தவிர்த்து புறக்கணித்து செயற்பட முடியாது. அதனை தவிர்த்து புறக்கணித்து செயற்படும் பட்சத்தில் மேலும் நெருக்கடி அதிகரிக்கும். சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியுள்ளமை குறித்து கலவையான விமர்சனங்கள் நாட்டில் காணப்படுகின்றன.
ஒரு தரப்பினர் இதனை வரவேற்கின்றனர். மற்றுமொரு தரப்பினர் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர். எனினும் தற்போதைய சூழலில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நாடாமல் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. எனவே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை எவ்வாறு விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்? அதற்கு காணப்படுகின்ற தடைகள் என்ன? என்பது முக்கியமான விடயங்களாக உள்ளன.
சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் கடந்த ஆறு மாத காலமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற நிலையில் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்டத்திலான தரப்பினருடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இணக்கப்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவில் நிறைவேற்றப்பட வேண்டுமானால் இலங்கை ஒரு கடப்பாட்டை நிறைவேற்றவேண்டியது முக்கியமாகும்.
நாணய நிதியத்தின் கடனை இலங்கை தற்போது பெறவேண்டுமாயின் ஏற்கனவே இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள வேண்டும்.
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் இலங்கையிடம் பிணைமுறிகளை பெற்றுக்கொண்டு கடன் வழங்கிய சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ளப்படாவிடின் இலங்கைக்கு 2.9 பில்லியன் நிதி உதவி கிடைக்காது.
ஏன் கடன் மறுசீரமைப்பு செய்யவேண்டும்?
கடன் மறுசீரமைப்பு என்பது இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பாக ஒரு நிவாரண நடைமுறையை பின்பற்றுவதற்கான இணங்குதலை குறிக்கிறது.
ஏற்கனவே வழங்கிய கடன்களுக்கான வட்டி வீதங்களை குறைத்தல், கடனை செலுத்துவதற்கான காலத்தை மேலும் அதிகரித்தல் மற்றும் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிய கடன்களிலிருந்து ஒரு தொகையை கழித்துவிடுதல் போன்றவற்றை செய்வதே கடன் மறுசீரமைப்பு எனப்படுகின்றது.
இதற்கு முன்னர் இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவிகளை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஆனால் அப்போது இவ்வாறு கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ளவில்லை. முக்கியமாக யுத்தம் நிறைவடைந்ததும் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் டொலர் கடனுதவி பெற்றுக்கொண்டது.
அப்போது கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ளவில்லை. அப்படியானால் ஏன் தற்போது மட்டும் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. காரணம் இலங்கை தற்போது தன்னால் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாது என்ற நிலையை பிரகடனம் செய்துவிட்டது.
அதாவது வங்குரோத்து நிலையை பிரகடனம் செய்துவிட்டது. எனவே தற்போது வங்குரோத்து அறிவிப்பின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறவேண்டும் என்றால் ஏற்கனவே இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் தரப்புக்களுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வது மிக அவசியமாகும்.
என்ன தடை ?
இந்நிலையில் இலங்கைக்கு கடன் வழங்கிய சகல நாடுகள், நிறுவனங்கள், வங்கிகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான பேச்சுக்கள் இலங்கையினால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன. பல தரப்புக்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
ஆனால் சீனா இன்னும் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கு தயார் என்று அறிவிக்கவில்லை.
ஆனால் சீனா உட்பட சகல நாடுகளும் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ளும் பட்சத்தில் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு புதிய நீண்டகால கடனை வழங்கும்.
எனினும் சீனா இன்னும் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள தயக்கம் காட்டிவருகின்றது.
சீனா அவ்வாறு தயங்குவதற்கு காரணம் என்ன? பொதுவாக சீனா தான் கடன் வழங்கிய எந்தவொரு நாட்டுடனும் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்வதில்லை.
இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற தயங்குகிறது.
எப்படியோ சீனா உட்பட சகல நாடுகளுடனும் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ளும் பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை பெற்று மீண்டுவர முடியும்.
இந்நிலையில் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் மற்றும் சர்வதேச நாணயத்துடனான பேச்சுவார்த்தைகள், கடன் பெறுவதன் தாமதம் என்பன குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்பார்த்ததை விட சற்று தாமதம் காணப்படுகின்றது.
காரணம் நாங்கள் சகல தரப்பினருடனும் கடன் மறு சீரமைப்பு செய்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
கடன் மறு சீரமைப்பு என்பதை இலங்கை முதல் தடவையாக வே முன்னெடுக்கின்றது. இதற்கு முன்னர் எமக்கு அந்த அனுபவம் இல்லை. எனவே அதில் எதிர்பாராத சில தாமதம் நிலவுகின்றது.
சீனா ஜப்பான் இந்தியா மற்றும் பரிஸ் கிளப் நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இருதரப்பு கடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது.
அதனடிப்படையில் டிசம்பர் மாத முடிவில் இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தம் உருவாக்கப்படும் என்றும் அதன் அடிப்படையில் ஜனவரி மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை செய்து கொள்ள முடியும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வது மிக முக்கியமாக அமைகின்றது. அவ்வாறு செய்தால்தான் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே சீனாவின் முடிவு மிக முக்கியமாக இருக்கிறது. ஜப்பான், இந்தியா மற்றும் பரிஸ் கிளப் நாடுகள் ஏற்கனவே கடன் மறுசீரமைப்பு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன. சீனா மட்டுமே இன்னும் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிடவில்லை.
இந்த நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவது தாமதமடைந்து கொண்டு செல்கிறது. அந்தக் கடனை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லாவிடின் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கலாம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதத்தின் பின்னர் நாட்டின் இந்த பொருளாதார பதற்றத்தை ஓரளவு சமாளித்து இருக்கின்றார்.
குறிப்பிடத்தக்க வகையில் சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை விரைவாக பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஓரளவு நாடு மீண்டு வெளியே வர முடியும்.
எனவே தொடர்ந்து இந்தக் கடன் பெறும் செயற்பாட்டை தாமதிக்க இடமளிக்க்கூடாது. இதில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் அர்ப்பணிப்பான அணுகுமுறை அவசியமாகின்றது. அதனால் பொருளாதாரம் என்ற வாகனம் கீழே விழுந்துவிடாமல் தடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ரொபட் அன்டனி
2