இந்தியா-சீனா இடையேயான உறவுகள் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமாகி வருகின்றன.
இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லையின் பல பகுதிகளில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுகிறது.
இந்த விஷயத்தில் இரு நாடுகளும் அவற்றின் எல்லை நிலைப்பாட்டில் உறுதிகாட்டி வருகின்றன. இதில் சமீபத்திய மோதல் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.
இதன் பின்னணியை மற்றும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கே சுருக்கமாக வழங்குகிறோம்.
இரு நாடுகளுக்கும் இடையேயான 3,440 கி.மீ நீண்ட எல்லை பகுதியில்தான் இரு நாடுகளுக்கும் இடையேயான தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் தங்களுக்கென சொந்தம் கொண்டாடுகின்றன.
இந்த பகுதியின் சூழல் என்பது ஆறுகள், ஏரிகள், மலை சிகரங்களைக் கொண்டும் பனியால் சூழப்பட்டும் இருக்கின்றது. எல்ஏசி எனப்படும் அசல் கட்டுப்பாட்டுக் கோடு பற்றி இரு நாடுகளுக்கும் இடையே தகராறு உள்ளது.
சில நேரங்களில் இந்த பகுதியில் உள்ள இருநாட்டு வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர். எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளுமே பகட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன.
உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட விமான தளம் வரையிலும் இந்தியா சாலை அமைத்துள்ளது. இதற்கு பல முறை சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பகுதியில் இந்தியா மற்றும் சீன படையினர் நேருக்கு நேராக மோதிக் கொண்ட சம்பவத்தில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் தங்களது நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை பல மாதங்கள் கழித்தே சீனா ஏற்றுக் கொண்டது.
கல்வான் மோதலுக்கு பிறகு மற்றும் அதற்கு முன்பு,இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் பலமுறை நடைபெற்றுள்ளன. இன்னும் நடைபெற்று வருகிறது. ஆனால், பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
இப்போதைய தகராறு என்பது மிகவும் அண்மை காலத்தில், அதாவது கடந்த 9ஆம் தேதி நடந்ததாகும். அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங்க் பகுதியில் இருநாட்டின் வீரர்களும் மோதிக்கொண்டனர்.
இந்த சண்டையில் இரு நாடுகளைச் சேர்ந்த சில வீரர்கள் காயமடைந்தனர் என இந்திய ராணுவம் கூறியுள்ளது. ஆனால், இது குறித்து இதுவரை சீனா எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை.
2020ஆம் ஆண்டு மோதலின் போது தடி மற்றும் ஏனைய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை.
1996ஆம் ஆண்டில் எல்லையில் இரு நாடுகளும் துப்பாக்கி அல்லது வெடி பொருட்களை உபயோகிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் செய்திருந்தன.
மோதலில் தனது வீரர்கள் கொல்லப்பட்டதை இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால், பல மாதங்களாக சீனா தனது வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசுவதை தவிர்த்து வந்தது.
எனினும், இது குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த மோதலுக்கு இந்திய ராணுவ வீரர்களே பொறுப்பு என கூறியிருந்தது.
சமீபத்திய மோதல் சம்பவம் நடந்த டிசம்பர் 9ஆம் தேதியும் இரு தரு தரப்பில் மோதல் நடந்ததை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13ஆம் தேதி உறுதிப்படுத்தினார்.
ஆனால், காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர், இந்திய தரப்பில் என்னென்ன சேதம் ஏற்பட்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. நடந்த மோதலில் இந்திய தரப்பில் ஒரு வீரர் கூட இறக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.