பணி நேரத்தில் மருத்துவமனையில் பணியில் இல்லாத மருத்துவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

 

அக்டோபர் மாதம் அமைச்சர் துரைமுருகன் அவரின் சொந்தத் தொகுதியான காட்பாடியில் உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் ஆய்வு செய்தார்.

அப்போது மருத்துவமனையில் உள்ள இரு மருத்துவர்கள் சரியாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதை விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரு மருத்துவர்களையும் பணியிடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மருத்துவர்கள் உள்ளூரிலேயே இருப்பதால் சரியாகச் செயல்படவில்லை. அதனால் பணியிடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.

 

இந்நிலையில், இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுராந்தகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனையில் பணியாற்றி வந்த 4 மருத்துவர்களில் ஒருவரும் பணியில் இல்லை. இதனால் பணி நேரத்தில் பணியில் இல்லாத 4 மருத்துவர்களையும் பணியிடைநீக்கம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார்.

 

மேலும், மருத்துவமனை உரிய முறையில் செயல்படுகிறதா என ஆய்வு செய்யாத மருத்துவ இணை இயக்குநரையும் பணியிடமாற்றம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

ஒழுங்காகப் பணி செய்யாத அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு அமைச்சர்களின் இந்த திடீர் ஆய்வு பயத்தைக் கொடுக்கும் வேளையில், பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Share.
Leave A Reply