எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி
மாநாட்டிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொது
இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி இம்மாநாட்டுக்கு அழைப்பு
விடுத்திருந்தார்.
சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஏனைய அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு:-
இந்நாட்டில் நிலவும் பிரச்சினையை தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய
வேண்டும். அதற்கு இனப்பிரச்சினை என்பதா அல்லது வேறு ஏதாவது பெயரைச்
சொல்வதா என்பது முக்கியமல்ல. எமக்கு தேவைப்படுவது இப்பிரச்சினைகளுக்கான
தீர்வேயாகும்.
இதற்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று
கூடுவதற்கு பாராளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. அதற்காகவே கட்சித்
தலைவர் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற
உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடியுள்ளனர். இப்பிரச்சினையை இரண்டு
பகுதிகளின் கீழ் கலந்துரையாடலாம்.
முதலாவதாக, காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும்
அவர்கள் தொடர்பில் செய்யப்படும் விசாரணை. பயங்கரவாதத் தடைச் சட்டம், அதே
போன்று காணி தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன.
இரண்டாவதாக, அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்டப் பணிகளைச் செய்வதற்குத்
தேவையான ஏற்பாடு.
இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட
வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கமைய, காணாமல் போனோர்
தொடர்பிலும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் அறிக்கையொன்றை வழங்க
எதிர்பார்த்துள்ளோம். அதன் பின்னர் எம்மால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச
முடியும்.
உயர் நீதிமன்ற நீதிபதி நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கை இன்னும் ஒரு
வாரத்தில் அச்சிடப்படும்.
அந்த அறிக்கையில் பல முன்மொழிவுகள்
உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் கையளிக்கப்பட்ட அறிக்கைகளின்
பரிந்துரைகளையும் நாம் இதன்போது பரிசீலிப்போம்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி……
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல்களும்
இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும்
கலந்துரையாடல்களும் பிரதான இரண்டு விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
அங்கு நாம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, உதுலாகம
ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள்
கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்படி, அனைத்து அறிக்கைகளிலும் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருந்தும் வெளிநாட்டுப் பொறிமுறைகளின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதையே அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இதற்கமைய, உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்திருந்தபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஜனாதிபதி கூறியதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,
நவாஸ் ஆணைக்குழுவை நியமித்தார்.
இதற்கு முன்னைய இருந்த ஆணைக்குழுக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய இப்பொறிமுறையை கொண்டு வருவதற்கு எமக்கு பொறுப்பு உள்ளது.
பாதுகாப்பு தரப்பினரும் கூட இப்பொறிமுறையைக் கொண்டு வருவதில் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
ஒரு சில படைப்பிரிவுகள் பல்வேறு வகையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். சில படைப்பிரிவுகளுக்கு ஐ.நா நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் நிகழ்ந்திருப்பின் அது
தொடர்பில்,சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை
முன்வைத்துள்ளார்கள்.
எவ்வாறானாலும் அதுபோன்றதொரு ஒழுங்குமுறையை இதுவரை எங்களால்
நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது. உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம்
இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான தீர்வுகளை
பெற்றுக்கொள்ள முடியும். தென்னாபிரிக்காவுடனும் இது தொடர்பில் நாம்
கலந்துரையாடியுள்ளோம்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும்
நல்லது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் முன்வைப்போம். இந்தக்
குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் தூதுவர் ஒருவர்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல நல்ல முன்மொழிவுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறை ஒழுங்கு நீதியமைச்சிடமே
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போதும், காணாமல் போனோர் அலுவலகம் நீதி
அமைச்சின் கீழேயே பராமரிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள அனைத்து கோப்புகளையும் அடுத்த ஆண்டு டிசெம்பர் 31ம் திகதிக்குள் முடிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
காணாமல் போனவர்களுக்கான இழப்பீடாக ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. சொத்து இழப்பீடு குறித்தும் தற்போது நாம் பரிசீலித்து வருகிறோம்.
வடக்கில் யுத்தம் காரணமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள
அட்டைகளை இழந்த சுமார் 11,000 பேர் வடக்கில் இருந்தனர்.
அவற்றை நாம் மீண்டும் பெற்றுக் கொடுத்தோம். நீதியமைச்சின் கீழ் வட மாகாணத்தில் பல இணக்கப்பாட்டு மத்தியஸ்த நிகழ்வுகளை நாம் முன்னெடுத்தோம்.
இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள்
இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நாங்கள்
நம்புகிறோம்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தற்போதும் செயற்பட்டு
வருகிறது. இவ்விடயத்தில் எமக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் ஆதரவளித்து
வருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ….
வடக்கில் காணி தொடர்பில் பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆலோசகர்,
காணி அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஆகியோர்
அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து இது தொடர்பான
தீர்வுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
தற்போது, இங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கலந்துரையாடல்கள் தொடர்ந்தும்
முன்னெடுத்துச் செல்லும்போது கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதனால்தான் அனைத்து கட்சிகளதும் கருத்துக்களை அறிய இம் மாநாடு ஏற்பாடு
செய்யப்பட்டது. இது தொடர்பில் நாம் ஒரு தீர்வுக்கு வர வேண்டும் என்று
நான் பரிந்துரைக்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் …….
தமிழ் மக்கள் தரப்பில் இருந்து இப்பிரச்சினையை பார்த்தால், போது அதில்
எமக்கு மூன்று கட்டங்கள் உள்ளன. அவை காணி, காணாமல் போனவர்கள் மற்றும்
அம்மாகாணங்களில் அதிகளவில் படையினர் குவிப்பு.
பல்வேறு திணைக்களங்களுக்காக காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு பிரச்சினை உள்ளது. அது தொடர்பில் ஆராய வேண்டும். எமது மக்களுக்காக நாம் முதலிலும் உடனடியாகவும் செய்ய வேண்டிய விடயம் அதுவேயாகும்.
இரண்டாவதாக, எங்களுக்கு சில சில உரிமைகளை வழங்கும் சட்ட விதிகள் உள்ளன.
மாகாணசபையின் தேவை எம்மைப் பொறுத்தவரை மிகவும் அதிகம் ஆகும். இது மிக
விரைவாக செய்யப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். இதுவரையில் ஏராளமான காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் சட்டத்துக்கு மாறாக நடந்தவை.
இது தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, காணி உரிமைப் பிரச்சினை ஆராயப்பட வேண்டும்.
எனவே முதல் கேள்வி நிலத்தின் நிலைமை பற்றியது. இரண்டாவது தற்போதும்
நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உரிமைகள் பற்றியது. மூன்றாவது
அரசியலமைப்பைப் பற்றியது.
ஆனால் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி என ஜனாதிபதி வழங்கிய காலப்பகுதிக்குள் இச்செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு மேற்படி அனைத்து விடயங்கள் தொடர்பில் ஒரே நேரத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இவை செய்ய முடியாத விடயமல்ல. எங்களிடம் ஏற்கனவே இது தொடர்பிலான ஆவணங்கள், போதுமானளவான ஆணைக்குழு அறிக்கைகள் மற்றும் பல்வேறு சட்டமூலங்கள் உள்ளன.
எனவே, இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் மூலம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உரிமைகளை வழங்க முடியும் என்பதை நாம்
பார்க்க வேண்டுமானால், நாம் செய்ய வேண்டியது எல்லாம் உட்கார்ந்து இறுதி
முடிவை எடுப்பதாக மட்டுமே இருக்க முடியும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களாகிய எமக்கு 3,000 வருடங்களுக்கும் மேலான
வரலாறு உண்டு என்பதை இறுதியாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
எங்களுக்கு எங்களுக்கென்றே கூறும்படியான காணி இருக்கிறது போன்றே எமக்கென
ஒரு மொழி மற்றும் கலாச்சாரமும் உள்ளது.
அதற்கான உரிமையை இந்த நாட்டில் எமக்கு வழங்கப்பட வேண்டும். எமக்கு மரியாதை, சமத்துவம் மற்றும் எதிர்காலத்தில் ஒரே நாடாக ஒன்றாகச் செல்லக்கூடிய வகையிலான அரசியலமைப்பு ஒன்று இருக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்
ஜனாதிபதி அவர்களே, உங்களது அழைப்பின் பிரகாரம் நாங்கள் பாராளுமன்றத்தில்
ஐந்து கட்சிகளுடன் இது பற்றி கலந்துரையாடி மூன்று பகுதிகளை அடையாளம்
கண்டோம்.
காணிப் பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. ஆனால்
கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் நீதி வழங்கும் பொறிமுறைக்கான
தேவை அவசியமாகும். இது குறித்து கலந்துரையாடுவதற்கு இரு அமைச்சர்களையும்
அழைத்தமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களை எவ்வித திருத்தமும் இன்றி அமுல்படுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
அதனுடன், புதிய அரசியலமைப்பு அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
கூறியது போன்று 13+ தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.
கடந்த பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த போது
2019 ஜனவரிக்குள் அரசியலமைப்பு வரைபை முன்வைக்கும் நிலைக்கு நாம்
முன்னேறினோம்.
ஆனால் இறுதி முடிவை நாம் எவ்வாறு பெறுவது? ஜனாதிபதியே
நிர்ணயித்த கால வரையறைக்குள் இவை அனைத்தும் நடக்கும் என்று நான்
எதிர்பார்கிறேன். எமக்கு தெளிவாக அரசியலமைப்பை நிறைவேற்ற
முடியாவிட்டாலும் இது தொடர்பில் என்ன செய்ய முடியும் என்பது குறித்த
உடன்பாட்டுக்கு வரலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…
இங்கு நிறைவேற்றுஅதிகாரம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு
பணிகள் இருக்கின்றன நான் நினைக்கிறேன்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்து 12 வருடங்கள் நிறைவடைந்திருந்தாலும் இதுவரை சந்தேக நபர்கள் மற்றும் அரசியல் கைதிகள் இருக்கின்றனர்.
எண்ணிக்கை எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் ஏதோவொரு தீர்வு
வழங்கப்பட வேண்டும்.
நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம். காணாமல்போனோர்
தொடர்பான விசாரணை, பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் காணிகள் என்பன தொடர்பில் நிறைவேற்று அதிகாரம் என்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அது தொடர்பில் எவ்வித விவாதங்களும் இல்லை.
ஆனால் சூழல் பாதுகாப்பு பிரதேசங்கள் மற்றும் தொல்பொருள் பிரதேசங்கள்
இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டும்.
அடுத்த்தாக, சட்டம் இயற்றுதல் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படல்
வேண்டும்.
அதற்கமைய இப்போது இருக்கும் வகையிலேனும் மாகாண சபைத் தேர்தல்
நடத்தப்பட வேண்டும். அல்லது பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்றின் மூலம்
மாகாண சபை சட்டத்தை மறுசீரமைத்து ஏனைய விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறானதொரு வேலைதிட்டத்தை நாம் 2015 இலும் நடைமுறைப்படுத்த
முயற்சித்தோம்.
அது தொடர்பில் இணக்கப்பாடொன்றுக்கு வரும் வரை மாகாண சபைத்
தேர்தலை நடத்துவதா அல்லது இல்லையா என நாம் தீர்மானிக்க வேண்டும்.
என்னுடைய கருத்து என்னவென்றால் மாகாண சபைத் தேர்தலுக்குள்ள தடைகள்
நீக்கப்படல் வேண்டும் அல்லது மீண்டும் தெரிவுக்குழு ஒன்றின் மூலம்
சென்றால் மேலும் காலதாமதம் ஏற்படும்.
அப்போது தேர்தலொன்றை எப்போதும் நடத்த மடியாத நிலை தோன்றலாம். இதனை முன்னெடுத்தால் அரச துறையில் உள்ள ஒரு சில மறுசீரமைப்புகளை செய்ய முடியுமென உங்களுக்கு நான் ஆலோசனை கூறுகின்றேன்.அனைத்து கட்சி தலைவர்களிடமும் கலந்துரையாடி அந்த மூலோபாய வேலைதிட்டத்தை முன்னெடுக்க முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர….
எல்லாம் கலந்து விட்டாலும் பெரிய பிரச்சனையாகிவிடும். தற்போது தடுத்து
வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க ஏற்பாடுகளைச் செய்து, உண்மையைக்
கண்டறியும் ஆணைக்குழு மூலம் மேலதிக பணிகளை மேற்கொள்வது முக்கியம் ஆகும்.
அப்போதுதான் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க…..
இன்று ஒருதலைப்பட்சமான வேலைத்திட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்றே நம்ப
தோன்றுகிறது. சர்வகட்சி மாநாட்டின் ஊடாக நீங்கள் இனப்பிரச்சினைக்கு
தீர்வு காண முயற்சிப்பதை நாம் காண்கிறோம்.
ஆனால் இது 75 வருடங்களாக
தொடரும் பிரச்சினை. இதை 75 நாட்களில் தீர்க்க முடியுமென நான்
நினைக்கவில்லை.
இன்று ஒன்பது மாகாண சபைகள் ஒன்பது பேரின் கட்டுப்பாட்டில்
உள்ளன. எனவே மாகாண சபை முறைமையை சீர்செய்ய முயற்சிக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்….
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக, குறைந்தபட்சம் ஆரம்ப கட்ட
நடவடிக்கையாக, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக
அமுல்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு, அனைத்துக் கட்சி மாநாடு மற்றும், தேவைப்பட்டால், சிவில்
அமைப்புகளும் பங்கேற்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு செல்ல்லாம்.
விக்டர் ஐவன் போன்ற சிவில் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே எம்மை சந்தித்து
பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள்
தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அந்த மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கான பிரதான பிரச்சினை அவர்களின் காணிகள் வேறு சிலரால் கையகப்படுத்தப்பட்டமையாகும்.
இராணுவம் மட்டுமன்றி ஏனைய அரச நிறுவனங்களும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன. குறிப்பாக வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் இவ்வாறு காணிகளை கையகப்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல, சிங்கள சமூகத்திற்கும் ஒரு பிரச்சினை ஆகும்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரத்தில், சில மத ஸ்தலங்களின்
சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சித்தது.
சில இடங்களில் பொலிஸார் தங்கியுள்ளனர். இவ்விடயத்தில் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது.
எனவே இது சஹரான் அல்லது அவரது குழுவினருக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல,
அவை ஏனைய மத ஸ்தானங்களுக்கு சொந்தமானவை.
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா…..
இப்போது நல்லிணக்கம் என்ற வார்த்தை தேசிய நல்லிணக்கமாக இருக்க வேண்டும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு அரசியலுக்கு
வந்தேன்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு தமிழ் சமூகத்திற்கு
போதிய வாய்ப்புகள் கிடைத்தன.
துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை. அதை அவர்கள் தவறாக பயன்படுத்தினார்கள். அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இருக்கிறது. கடந்த 35 வருடங்களாக, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருந்து ஆரம்பித்தல் என்றும் அரசியல் தீர்விலிருந்து ஆரம்பியுங்கள் என்றே நாம் கூறிவந்தோம்.
முதலில் அனைத்து சமூகங்களுடனும் நல்லிணக்கத்தை ஆரம்பிக்கிறோம். பிறகு
மேலும் செல்லலாம்.
எனது பாராளுமன்ற சகாக்களான சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடேக்கலநாதன் ஆகியோர் ஆரம்பம் முதலே அதற்காக உழைத்தனர்.
அவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். 13வது திருத்தத்துடன் இந்த
செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
நாங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதில்லை. ஏனெனில் புதிய அரசியலமைப்புக்குச் செல்வதற்கு பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையும் மக்கள்
வாக்கெடுப்பும் தேவை.
இந்த நேரத்தில் இந்த நாட்டுக்கு அது சாத்தியமற்றது.
முதலில் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம்
ஆரம்பிப்போம். அதன் மூலம் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.
ஜனாதிபதி அவர்களே, இந்த சர்வகட்சி மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக நான்
உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ….
எந்த மத ஸ்தலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் எங்களுக்குத்
தெரிவிக்கவும். தற்போது சில முஸ்லிம் அமைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம்.
சில அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுத்து
வருகிறோம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்….
போரினால் எங்கள் வீடுகள் காட்டுக்குள் சென்றுவிட்டன. ஆனால் தற்போது
எங்களுடைய காணிகள் வனவிலங்கு திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அவர்களே, முப்பது வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற போது அந்தப்
பிரதேசங்களில் மக்கள் இருக்கவில்லை.
அதனால் அந்த பகுதிகள் காடுகளாக மாறிவிட்டன. எனவே, எங்களுடைய அந்த காணிகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …..
காணி அமைச்சும் வனஜீவராசிகள் அமைச்சும் இணைந்து அந்தப் பிரச்சினைக்கு
தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சித்து வருகின்றன.
ஆனால் இலங்கையில் முப்பத்திரண்டு வீதம் காடுகள் இருக்க வேண்டும். அதற்கு வெளியே உள்ள பகுதிகளைக் தேடிக் கண்டுபிடித்து வழங்க நடவடிக்கை முடியும். 75 ஆவது
சுதந்திர தினத்தை கொண்டாடும் சந்தர்ப்பத்தில் நாம் ஒரே தேசமாக முன்னேற
வேண்டும்.
மீண்டும் ஒரு போர் ஏற்படுமா என்ற சந்தேகம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு உள்ளது. தமிழ் எம்.பி.க்கள் போரை கைவிட்டுள்ளதாக கூறுகின்றனர். அதனால்தான் இப்பிரச்சனையை ஒரே மேடையில் இருந்து பேசித் தீர்க்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க…..
இந்த சிக்கலை தீர்க்க, முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். சட்டக்கல்லூரி
மாணவர்களின் தாய்மொழியில் சட்டம் படிக்கும் உரிமை பறிக்கப்படுவது சிறந்த
உதாரணம். இந்த சூழ்நிலையில் தீர்வு காண முடியுமா?
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்….
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
மாகாண சபைகளின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவது அவசியம் என்பதே
எமது நிலைப்பாடாகும். முதலில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம்
நல்லிணக்கத்தை ஆரம்பிப்போம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ……
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரச்சினைக்கு முன்னர் இங்கு
பேசப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போமா? இந்தப் பிரச்சினைக்குத்
தீர்வு காண பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது. அப்படியானால், அதன் பின்னர்
ஏனைய பிரச்சினைகளைப் பற்றி பார்ப்போம்.
இதேபோன்றே, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான கொடுக்கல்
வாங்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளோம் என்பதையும்
இங்கே குறிப்பிட வேண்டும்.
எல்லோரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான்
பார்க்க வேண்டும். ஏற்கவில்லை என்றால் பிரச்சினை உள்ளது. சர்வதேச நாணய
நிதியமும் உலக வங்கியும் எமது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
அவர்கள் கொடுத்த திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து உங்களுக்கு
அறிவிக்க எதிர்பார்க்கின்றோம்.
மேலும், நமது வங்கி கட்டமைப்பின் நிலைக் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்க உள்ளோம். கடன் மறுசீரமைப்பும் இவ்வாறு தான். அனைத்து விடயங்கள் குறித்தும் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க நாம் எதிர்பார்கின்றோம்.
அதேநேரம் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது அனைத்துக் கட்சி
மாநாட்டின் மூலம் மக்களுக்கு தீர்வுகளை வழங்க முடியுமா என்பதை
பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பது அவசியம். இதுபற்றி கலந்துரையாடவே அனைத்து
கட்சி மாநாடு நடத்தப்படுகிறது.
பொருளாதாரமும் மிக முக்கியமானது. பொருளாதாரம் தொடர்பான விடயங்களுக்காக
இதேபோன்ற மாநாட்டை நடத்தலாம். அதே சமயம் அத்தகைய தேசியக் கொள்கையை
உருவாக்குவோம். பாட்டலி எம்.பி கூறியது போன்று நிறைவேற்று அதிகாரத்தின்
ஊடாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வு மற்றும் 13 ஆவது திருத்தம் குறித்து நாம் கலந்துரையாடுவோம். அடுத்த அமர்வை ஜனவரியில் நடத்த ஏற்பாடு செய்வோம்.
அங்கு சர்வகட்சி தீர்வுக்கு வருவதா? இல்லையா? என்ற உடன்பாட்டுக்கு
வருவோம். அடுத்த பெப்ரவரியில் பொருளாதார விடயங்களைப் பற்றி பேசலாம். இதை
நாடும் தெரிந்து கொள்ள வேண்டும். வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எனது
நன்றிகள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச……
இந்த கலந்துரையாடல் இன்று மிகவும் முக்கியமானது. இந்த கலந்துரையாடலுக்கு
காலக்கெடு கிடைத்ததில் மகிழ்ச்சி. இத்தகைய இலக்குகளைக் கொண்ட திட்டங்கள்
நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன.
ஒரு நாடு ஒற்றுமையாக இருக்க, ஒற்றுமை இருக்க வேண்டும். மக்கள் சமூகத்தின் ஒற்றுமையின் மூலமே நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும். நம் நாட்டின் சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்கள் சமமாக வாழ்கின்றனர்.
எனவே, அரசியல் அமைப்பில் சாதி, மதத்தை பயன்படுத்தக் கூடாது. அந்த விஷ விதையை அகற்ற வேண்டும். இனம், மதம் என்று அரசியலில் ஈடுபடுபவர்களை ஒழிக்க வேண்டும். அத்தகைய சமூகம் புனரமைக்கப்பட வேண்டிய காலகட்டமே இது. அதன் மூலம் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். இனவாதத்தை சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
இனவாத கருத்துக்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் வேறு நாட்டை உருவாக்க முடியாது.
இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகங்கத்துக்கும் நாம் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
இந்த பிரச்சினைகளை நமது உள்நாட்டுப் பொறிமுறையில் தீர்க்க முடியும். இந்த திட்டத்தை தொடங்குவதுடன், அதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது.
எனவே ஜனாதிபதி ஆரம்பித்து வைத்த சர்வகட்சி மாநாட்டை வெற்றிகரமாகத் தொடர
தேசிய நல்லிணக்கம் மூலம் இனப்பிரச்சினக்கு தீர்வு காண்பது தொடர்பில்
சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஆளும் கட்சி,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது
பாராட்டுகளை தெரிவித்தனர்.