நான்கு நாட்கள் பயணமாக இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார் இரண்டு நாடுகளின் படைகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடனும், படைத் தளபதிகளுடனும் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

இந்திய கடற்படைத் தளபதி கொழும்பு வந்தடைந்த சற்று நேரத்திலேயே, இந்தியக் கடற்படையின் பாரிய ஏவுகணைப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சாயத்ரி கொழும்புத் துறைமுகத்துக்குள் நுழைந்தது.

அவர் புறப்பட்டுச் சென்றபோது கூடவே அதுவும் வெளியேறியது. இந்த இரண்டு பயணங்களும், ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை எனக் கூற முடியாது. அண்மைக்காலமாக சீனாவுடனான இலங்கையின் உறவுகள் விவகாரத்தில், இந்தியா மனக்கசப்புகளைக் கொண்டிருக்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சீன கடற்படையின் யுவான் வாங் -5 என்ற செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தடக் கண்காணிப்புக் கப்பல் தரித்துச் சென்றதும், அதன் பின்னர் ஆழ்கடலில் சீன போர்க்கப்பல்களுக்கு இலங்கை எரிபொருள் நிரப்புவதாக வெளியான தகவல்களும், இருதரப்பு உறவுகளில் சந்தேகங்களுடன் கூடிய இடைவெளியை உருவாக்கியுள்ளது.

இவ்வாறான வெளி, பாதுகாப்பு ரீதியாக இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் புது டில்லி உறுதியாக உள்ளது.

யுவான் வாங்-5 கப்பல் அம்பாந்தோட்டைக்கு வரவிருந்த நிலையில், இந்திய கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் கோர்மடே கொழும்பு வந்து, கடல் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்படும் டோனியர் விமானத்தை இலங்கையிடம் கையளித்திருந்தார்.

தங்களது சொல்லையும் மீறி அந்தக் கப்பலை அம்பாந்தோட்டைக்குள் அனுமதிப்பதை, புதுடில்லி கோபத்துடன் அணுகியிருந்தால், அந்த நிகழ்வு குறிப்பிட்ட நாளில் இடம்பெறாமல் போயிருக்கலாம். ஆனால் இந்தியா அந்த நிலையிலும் நிதானமான போக்கை கடைப்பிடித்தது.

பாதுகாப்பு ரீதியான ஒத்துழைப்புகள், உறவுகளுடன் முரண்படாமல் அரசியல் ரீதியாக அந்த வெறுப்பை வெளிப்படுத்தியது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஐந்து மாதங்களாகியும் அவருக்கு இன்னமும் புதுடில்லி அழைப்பு விடுக்காமல் இருப்பது அதன் ஒரு கட்டம் தான்.

அதேவேளை பாதுகாப்பு ஒத்துழைப்புகள், உறவுகளைப் பலப்படுத்துவதற்கான முழுமையான நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாகத் தான், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் தலைவரான சமந்த் குமார் கோயல் கடந்த மாதம் 21ஆம் திகதி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டவர்களை ‘றோ’ தலைவர் சமந்த் குமார் கோயல் மூடிய அறைக்குச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தப் பேச்சுக்களின் விபரங்கள் ஏதும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

1987இற்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் அளித்த, சமஷ்டி உள்ளிட்ட அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தினார் என்றும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

ஆனால் எல்லாமே உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகத் தான் இருக்கின்றன. ‘றோ’ தலைவர், கொழும்பு வந்தாரா? ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினாரா? என்ன பேசினார் என்றெல்லாம், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர், ‘றோ’ தலைவர் ஜனாதிபதியைச் சந்தித்தாரா என்பது தனக்குத் தெரியாது என்றும், அவ்வாறு சந்தித்திருந்தால், பேசப்பட்ட விடயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வெளிப்படுத்துவார் என்றும் கூறியிருந்தார்.

கடந்த வாரமும் இந்த சந்திப்புக் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் பந்துல குணவர்த்தன அளித்த பதில் வேறுவிதமானதாக இருந்தது.

“றோ தலைவரைச் சந்தித்து என்ன பேசினீர்கள் என்று ஊடகவியலாளர்கள் கேட்கிறார்கள் என ஜனாதிபதியிடம் கேட்டேன்.

அதற்கு, புலனாய்வுத்துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வாராந்த பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி கூறினார்,” என அமைச்சர் பந்துல குணவர்தன பதிலளித்திருந்தார்.

அதாவது, ‘றோ’ தலைவருடனான சந்திப்பை அரசாங்கம் ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கப்படுத்த தயாராக இல்லை. பாராளுமன்றத்துக்கு அதுபற்றி அறிவிக்க – வெளிப்படைத்தன்மையுடன் கூறுவதற்கு ஜனாதிபதி தயாரில்லை.

ஏற்கனவே, சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்பாட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகள் கேட்டபோது, அதனை இப்போது முன்வைக்க முடியாது என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.

இப்போது ‘றோ’ தலைவர் சமந்த் குமார் கோயலுடனான சந்திப்பு விபரங்களை வெளிப்படுத்தவும் அவர் மறுத்திருக்கிறார்.

பாதுகாப்பு இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் சந்திப்பு நடந்ததை, பொதுவாக சில விடயங்கள் பேசப்பட்டன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மீது சந்தேகம் கொள்வதை தடுத்திருக்கும்.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி ‘றோ’ தலைவரான சமந்த் குமார் கோயல் இதுபோன்றதொரு பயணத்தை நேபாளத்துக்கு மேற்கொண்டிருந்தார்.

இரகசியமாக தனி விமானத்தில் சென்ற அவர், அப்போது பிரதமராக இருந்த ஷர்மா ஒலியைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அந்த தகவல் வெளியான போது, எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அந்த நிலையில், நேபாள பிரதமர் அலுவலகம், “நேபாளம் – இந்தியா இடையேயான நட்புறவை நிலைத்திருக்க செய்யவும், இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கவும், இருதரப்பு ஒத்துழைப்பிற்கும் ‘றோ’ தலைவர் உறுதியளித்தார்” என செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இரகசியமாக பேசப்பட்ட எந்த விடயத்தையும் நேபாள பிரதமர் அலுவலகம் வெளியிடவில்லை. எனினும், வெளிப்படைத்தன்மை பேணப்பட்டதாக காட்டிக் கொண்டது.

இந்த விவகாரத்தில் நேபாளத்துடன் ஒப்பிடும் அளவுக்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை. சந்திப்புக் குறித்து அதிகாரபூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவுமில்லை. தகவல்கள் வெளியிடப்படவுமில்லை.

இராணுவ மற்றும் புலனாய்வு தொடர்பான தகவல்களை தேசிய பாதுகாப்புச் சபையில் மாத்திரம் வெளியிடுவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

பாதுகாப்புடன் தொடர்புடைய எல்லா தகவல்களும் இரகசியமானவை அல்ல. பாராளுமன்றத்துக்கு வெளிப்படுத்தப்பட வேண்டிய விடயங்களும் உள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பவராக இருந்தால், அதுபற்றி அவர் பாராளுமன்றத்துக்கு தகவல் வெளியிட்டிருப்பார். பாதுகாப்புச் சபைக்குக் கூட அவர் சந்திப்பு விபரத்தை வெளிப்படுத்தினாரா என்ற சந்தேகம் உள்ளது.

ஏனென்றால், பாதுகாப்புச் சபையில் விளக்கமளிப்பேன் என்று கூறியிருக்கிறாரே தவிர, பாதுகாப்புச் சபைக்கு தெரியப்படுத்தியிருக்கிறேன் என்று கூறவில்லை.

இந்தளவுக்கும் பாதுகாப்புச் சபைக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் கூட்டப்படுகிறது. சந்திப்பு இடம்பெற்ற பின்னர், குறைந்த்து 3 முறையாவது அது கூடியிருக்கும்.

இந்தியப் புலனாய்வுத் துறை தலைவர், கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு சந்திப்பை நடத்தியது சாதாரண விடயமாக இருக்காது என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அரசாங்கம் எதையோ மறைப்பதற்கு முனைகிறது.

சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவுகள் மீது இந்தியாவுக்கு இருக்கும் சந்தேகங்களும், இந்தியப் பெருங்கடலை நோக்கிய சீனாவின் முனைப்புகளும், இந்திய- சீனா எல்லையில் காணப்படும் பதற்றங்களும், புதுடில்லியை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்க தூண்டுகிறது.

இவ்வாறான நிலையில், சீனா விவகாரத்தில் இலங்கை எடுத்து வைக்க கூடிய ஒவ்வொரு காலடியும் கவனமானதாக இல்லாவிட்டால், புது டில்லி கடிவாளம் போடத் தயங்காது.

‘றோ’ தலைவர் கொழும்பு வந்து, ஒரு மாதத்துக்குள் இந்தியக் கடற்படைத் தளபதியின் பயணம் இடம்பெற்றிருக்கிறது. இதனை வெறும் சம்பிரதாயபூர்வமானது என வரையறுத்துக் கொள்ள முடியாது.  அதற்கும் அப்பால் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கரிசனைகளையே வெளிப்படுத்துகிறது.

(ஹரிகரன்)

Share.
Leave A Reply