கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ளார். என்ன நடந்தது?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் றிப்தி அலி சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கு – ஜனாதிபதி செயலகம் வழங்கிய பதிலில் இவ்விடயம் தெரிய வந்துள்ளது.

குறித்த செயலணியை 2020ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்தார். அப்போதே இந்த நடவடிக்கைக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையான வாழும் கிழக்கு மாகாணத்துக்கென அமைக்கப்பட்ட அந்தச் செயலணியில், சிங்களவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டமையே, அந்த எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.

 

இதையடுத்து, அந்த செயலணியில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் உறுப்பினர்களாக பின்னர் சேர்க்கப்பட்டனர்.

‘தொல்பொருள் உள்ள இடங்கள்’ எனத் தெரிவித்து, சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதாக தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றமையின் காரணமாக, கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை தேவையற்ற ஒன்றாகவே சிறுபான்மை மக்கள் கருதினர்.

இந்த நிலையிலேயே கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, மேற்படி செயலணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுறுத்தியுள்ளதாக, தனது விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலில் – ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாக, பிபிசி தமிழிடம் ஊடகவியலாளர் றிப்தி அலி கூறினார்.

இது தொடர்பில் அந்த செயலணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே. ஹேனாதீர அந்தப் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபட்ட செயலணி
ஜனாதிபதி செயலணி

இந்த செயலணி செயற்பட்ட காலப் பகுதியில், தீகவாபி ரஜ மகா விகாரை மற்றும் லஹுகலயிலுள்ள நீலகிரி பௌத்த விகாரை ஆகியவற்றின் தூபிகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொத்துவில் முகுது மஹா பௌத்த விகாரைக்குரிய காணிகள் தொடர்பான சிக்கல்களை தீர்த்து வைக்கும் செயற்பாடுகளிலும், இந்த செயலணி ஈடுபட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை ரணில் விக்ரமசிங்க கலைத்துள்ள நிலையில், அதற்கென வழங்கப்பட்ட கடமைகள் அனைத்தும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட 2289/43ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், குறித்த கடமைகள் மேற்படி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் செயற்பட்டு வந்தபோதும், ஜனாதிபதிக்கு எதுவித அறிக்கைகளையும் இந்தச் செயலணி சமர்ப்பிக்கவில்லை.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தலைமையில் செயற்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் எவருக்கும் சம்பளமோ, கொடுப்பனவுகளோ தம்மால் வழங்கப்படவில்லை எனவும், ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

உறுப்பினர்கள் விபரம்

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டனர்.

1. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன – செயலாளர் பாதுகாப்பு அமைச்சு (செயலணியின் தலைவர்)

2. எல்லாவல மேதானந்த நாயக்க தேரர்

3. பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர்

4. வென்டறுவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரதனபால உபாலி அபிதான அனுநாயக்க தேரர் (அஸ்கிரிய பீடம்)

5. கலாநிதி பஹமுணே சுமங்கல நாயக்க தேரர் (பதிவாளர் – மல்வத்து பீடம்)

6. கலாநிதி மெதகம தம்மானந்த நாயக்க தேரர் (பதிவாளர் – அஸ்கிரிய பீடம்)

7. கலைமாணி அம்பன்வெல்லே ஸ்ரீ சுமங்கல தேரர் (நிருவாக உறுப்பினர் – மல்வத்து பீடம்)

8. பேராசிரியர் கபில குணவர்த்தன (செயலாளர் – புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு)

9. சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க (தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்)

10. கீர்த்தி கமகே (காணி ஆணையாளர் நாயகம்)

11. ஆரியரத்ன திசாநாயக்க தென்னகோன் (நில அளவையாளர் நாயகம்)

12. பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ (சிரேஷ்ட விரிவுரையாளர் – களனி பல்கலைக்கழகம்)

13. தேசபந்து தென்னக்கோன் – சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்

14. எச்.டி. அசிங்சலா செனவிரத்ன (காணி ஆணையாளர் – கிழக்கு மாகாணம்)

15. திலித் ஜயவீர – (தலைவர், தெரண ஊடக வலையமைப்பு)

16. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவகே

17. பத்திநாதன் (ஓய்வுபெற்ற மாகாண பிரதம செயலாளர்)18. முபிசால் அபூபக்கர் (விரிவுரையாளர்)


செயலணியின் கடமைகள்

கிழக்கு மாகாணத்தினுள் அமைந்துள்ள தொல்பொருள் ரீதியிலான பெறுமதிவாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களிலுள்ள தொல்பொருள்களைப் பாதுகாத்தல், அவற்றினை மீள் நிர்மாணித்தல், அந்த தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக பொருத்தமான நடைமுறையொன்றை இனங்காணுதல் மற்றும் செயற்படுத்துதல் இந்த செயலணியின் கடமைகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

அவ்வாறான தொல்பொருள் இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவை அடையாளம் காணுதல் மற்றும் சட்ட ரீதியாக அவ்விடங்களை ஒதுக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தலும் செயலணியின் கடமையாக குறித்தொதுக்கப்பட்டது.

மேலும் தொல்பொருட்கள் உள்ள இடங்களின் கலாசாரப் பெறுமதிகளைப் பாதுகாத்து, இலங்கையின் தனித்துவத்தை தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பிரசாரம் செய்தலும், அவ்வாறான மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான சிபாரிசுகளைச் செய்தலும் மேற்படி ஜனாதிபதி செயலணிக்கான பணிகளாக கூறப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply