டாஸ்மாக் கடையின் கம்பி வலை மீது கையில் ஒரு அடி நீளமுள்ள பட்டா கத்தியால் ஓங்கி வெட்டிவிட்டு தான் கேட்ட மதுபானங்களை கொடுக்குமாறு சொல்கிறார்.

திருவானைக்காவல் கடை எண் -10409- ல் சில இளைஞர்கள் டாஸ்மாக் கடை பணியாளர்களை அருவாளை காட்டி மிரட்டி மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்ற வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவானைக்காவலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 19ம் தேதி இரவு வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

அந்த கடையில் 50 வயது மதிக்கத்தக்க 2 விற்பனையாளர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது வெள்ளை டி சர்ட், பேண்ட் மற்றும் மாஸ்க் அணிந்த ஒரு வாலிபர் சில மதுபானங்களின் பெயரை சொல்லி அவற்றை கொடுக்குமாறு கேட்கிறார்.

அதற்கு விற்பனையாளர்கள், காசு கொடுங்கள் என்று கேட்க உடனடியாக அந்த வாலிபர் காசு தரமாட்டோமா என்று சொல்லி பட்டா கத்தியுடன் கடைக்குள் நுழைந்து சத்தம்போடுகிறார்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையின் கம்பி வலை மீது கையில் ஒரு அடி நீளமுள்ள பட்டா கத்தியால் ஓங்கி வெட்டிவிட்டு தான் கேட்ட மதுபானங்களை கொடுக்குமாறு சொல்கிறார்.

மேலும் அருகில் சரக்கு இருந்த பெட்டியின் மீதும் ஓங்கி வெட்டுகிறார். அதன்பிறகு காசு காசுன்னு கேட்குறீங்க, காசு தரமாட்டோமோ என்று கேட்க, பயந்து போன ஊழியர்கள் வாங்கிக்கிடலாம் அண்ணா என்று சொல்லி அவர் கேட்கும் அனைத்தையும் எடுத்து கொடுக்கின்றனர்.

ஆனாலும் அவர் கோபம் தணியாதவராய், ஒவ்வொரு சரக்குகளிலும் சில பாட்டில்களை எடுத்து வைக்கும்படி கூறினார்.

அதன்படி, விற்பனையாளர்கள் எடுத்து வைத்தனர். அதை வெளியே இருந்த அந்த வாலிபரின் கூட்டாளிகள் வாங்கி வைத்துக் கொண்டனர்.

பின்னர் அருகில் இருந்த பெட்டியில் இருந்து ஒரு பாட்டிலையும் எடுத்துக்கொண்டார். மொத்தம் எவ்வளவு ஆச்சு என கேட்டார் அந்த வாலிபர், அதற்கு 1120 ரூபாய் என விற்பனையாளர் கூறினார்.

இதையும் சேர்த்து நாளைக்கு தர்ரோம் என்று கூறிவிட்டு சிரித்துக்கொண்டே போய் விட்டார் அந்த வாலிபர்.

 

அரசு மதுபானக் கடையில் புகுந்து வாலிபர் செய்த இந்த அட்டகாசத்தால் விற்பனையாளர்கள் அதிர்ந்து போயினர். ஆனால் அதே நேரம் கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் வாலிபரின் செயல்கள் அனைத்தும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலசங்க நிர்வாகிகள் சார்பில் காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு அந்த இளைஞர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Share.
Leave A Reply