(சுபத்ரா)
கி.மு 545 – 470 காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் போரியல் வல்லுநரும் தத்துவஞானியுமான, சன் சூ (Sun Tzu) போர்க் கலை (The Art of War) என்ற 13 அத்தியாயங்களைக் கொண்ட தனது நூலில், போரியல் நுட்பங்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
இன்றைய நவீன போர்முறைகளுக்குக் கூட பொருந்தும் வகையில் அமைந்திருக்கிறது அவரது போர்க்கலை நுட்பங்கள். அந்த நூலில் அவர், “போரின் உச்சக் கலை போரிடாமல் எதிரியை அடக்குவது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது முக்கியமானதொரு போர்த்தந்திரம். போர் என்பது எப்போதும் சேதங்களையும், அழிவுகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்தக் கூடியது.
எனவே போரிடவும் கூடாது. அழிவுகளையும் எதிர்கொள்ளக் கூடாது, ஆனால் போரிட வேண்டும். ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும்.
அதனால் தான் போரிடாமல் எதிரியை அடக்குவது தான், உச்சமான போர்க்கலையாக வகைப்படுத்தியிருக்கிறார் சன் சூ.
தமது பண்டைய போரியல் வல்லுநரான சன் சூவின் அறிவுரைப்படியே சீனா வெற்றிகரமாக தனது ஆதிக்க விரிவாக்கத்தை முன்னெடுத்து வருகிறது என்பது தற்கால பாதுகாப்பு மற்றும் மூலோபாய வல்லுநர்களின் கருத்தாகும்.
சீனா அதன் பண்டைய போர்க்கலை வல்லுநரான சன் சூவின் ஆலோசனையை இதுவரை திறம்பட கையாண்டு வருகிறது என்று, அண்மையில் ஒரு ஆய்வில் குறிப்பிட்டிருந்தார், அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியும், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் நேட்டோ மற்றும் இந்தோ-பசிபிக் கட்டளைப் பீடங்களின் இராணுவப் பேராசிரியருமான கலாநிதி பற்றிக் மென்டிஸ்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1962இல் இந்தியாவுடன் சீனா நடத்திய போர் தான் மிகப்பெரியது.
அதற்குப் பின்னர் சீனா பெரியளவிலான போர்களை பிற நாடுகளின் மீது நடத்தவுமில்லை, போர்களில் மிகப்பெரியளவில் பங்கேற்கவுமில்லை. ஆனால் சீனா தனது போராற்றலைப் பெருக்கி வருகிறது.
அமெரிக்கா பல போர்களை நடத்தியிருக்கிறது. ரஷ்யாவும் பல போர்களை நடத்தியிருக்கிறது.
இந்த நாடுகள் தங்களின் ஆதிக்கத்துக்காகவும், தங்களின் ஆதிக்கத்துக்கு குறுக்காக இருக்கும் சக்திகளை அகற்றுவதற்காகவும் போர்களை நடத்தி அழிவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. தங்களுக்கும் பாரிய சேதங்களை சந்தித்தும் இருக்கின்றன.
இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா தனது படைபலத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அதேவேளை, படிப்படியாக சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து, எதிரிகளையும் முடக்கி வருகிறது.
சீனாவுக்கு தென்சீனக் கடலில் பிரச்சினை இருக்கிறது. தாய்வான் விவகாரத்தில் பிரச்சினை இருக்கிறது. சென் காகு தீவுகள் விவகாரத்தில் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவுடன் எல்லைத் தகராறு இருக்கிறது.
ஆனாலும், இவற்றில் எல்லாம் சீனா இதுவரை பெரும்பாலும் போரிடாமலேயே தன் மேலாதிக்கத்தை நிலைநாட்ட முனைந்திருக்கிறது.
தாய்வான் மீது சீனா படையெடுக்கத் தயாராகிறது என்று நீண்டகாலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தாலும், சீனா அந்தப் படையெடுப்பை இன்று வரை தவிர்த்து வருகிறது.
அண்மையில் கூட சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் போருக்குத் தயாராக இருக்கும் படி தனது படைகளை உசார்படுத்தியிருந்தார்.
ஆனாலும், அவர் குறிப்பிட்டது போன்ற போர் ஒன்று விரைவில் உருவாவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே இருக்கிறது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய போது, நவீன போர், இராணுவங்களுக்கிடையிலான மோதல்களாக இல்லை என்றும், அது பொருளாதார, கலாசார ரீதியாக பரந்துபட்டதாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சீனா மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தாலும், இராணுவங்களுக்கிடையிலான மோதலைத் தவிர்க்கிறது. அதற்குப் பதிலாக பொருளாதாரத்தையும், கலாசாரத்தையும், மூலோபாயத்தையும் தனது ஆயுதமாக்குகிறது.
தென்சீனக் கடலில் தொடங்கி, பசுபிக் கடலில் இருந்து சீனா தனது ஆதிக்கத்தை இந்தியப் பெருங்கடல் வரைக்கும் விரிவாக்கியிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங்- 5 அம்பாந்தோட்டையில் தரித்துச் சென்ற பின்னர், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் அச்சுறுத்தலை இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் உணரத் தொடங்கியிருக்கின்றன.
அந்தக்கப்பல் அம்பாந்தோட்டைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பைத் தெரிவித்த போதும், அதனை தடுக்க முடியவில்லை. மீண்டும் அந்தக் கப்பலுக்கு இடமளிக்க கூடாது என்று எச்சரித்து விட்டு ஓய்ந்து போயிருக்கிறது இந்தியா.
கடந்த மாத தொடக்கத்தில் சீனாவின் யுவான் வாங்- 6 கப்பலும், பின்னர் யுவான் வாங் -5 கப்பலும் இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது இந்தியா பெரிதும் பதற்றமடைந்தது.
காரணம், இந்தியா 8000 கிலோ மீற்றர் தூரம் செல்லும் அக்னி-5 (AGNI-V ICMB) ஏவுகணைச் சோதனைகளை குறித்த காலப்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தது.
சீனாவின் கிழக்குப் பகுதி மற்றும் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை எட்டக் கூடிய திறன்கொண்டது இந்த ஏவுகணை.
இதனைப் பரிசோதிப்பதற்காக, கடந்த மாத தொடக்கத்திலும், மூன்றாவது வாரத்திலும், இந்தோனேஷியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விமானப் பறப்புகளை தவிர்க்குமாறு- இரண்டு முறை சர்வதேச விமானப் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு இந்தியா அறிவித்திருந்தது.
ஆனால் சீனாவின் ஏவுகணை வழித்தடக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் நடமாடியதால், இந்தியா அந்தச் சோதனைகளை நடத்தாமல் ஒத்திப் போட்டது.
கடந்தவாரம் யுவான் வாங்-5 மற்றும் 6 ஆகிய சீனக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியை விட்டு வெளியேறியதை உறுதி செய்த பின்னரே, அக்னி- 5 ஏவுகணையை இந்தியா கடந்த வியாழக்கிழமை ஏவிப்பரிசோதனை நடத்தியது.
இந்தியாவுடன் சீனா போரை நடத்தவில்லை. ஆனால் இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனைச் செயற்பாட்டை சீனா முடக்குகிறது. இது தான், சன்சூ குறிப்பிட்ட உச்சக்கட்ட போர்த் தந்திரம்.
இதேபோக்கில் இந்தியப் பெருங்கடலில் சீனா தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினால், மிகவும் ஆபத்தானதாக அமைந்து விடும் என்பது இந்தியாவினதும், அமெரிக்காவினதும் கவலையாகும்.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடயத்தில் மேற்குலகம் அதிக கரிசனையுடன் இருக்கிறது.
இந்தப் பிராந்தியத்தில் மேற்குலகம் முக்கியமான அச்சுறுத்தலாக கருதுவது ரஷ்யாவை அல்ல, சீனாவைத் தான்.
அதனால் தான், அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட தேசிய பாதுகாப்பு கொள்கையில் இந்தியாவுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுதந்திரமான, வெளிப்படையான அணுகலை உறுதி செய்வதற்கும் இந்தியாவின் திறனை மேம்படுத்தவும் அதனுடன் முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மையை அமெரிக்கா வலுப்படுத்தும் என்று அமெரிக்க பாதுகாப்பு மூலோயம்- 2022இல் கூறப்பட்டிருக்கிறது.
அண்மையில் கனடா வெளியிட்ட இந்தோ -பசுபிக் பாதுகாப்பு மூலோபாயக் கொள்கை அறிக்கையிலும், சீன அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு இந்தியாவைப் பலப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பாதுகாப்புக் கொள்கையிலும் அதே மூலோபாயம் தான் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் பலமடைவதை, மேற்குலகமும் இந்தியாவும் ஆபத்தான சமிக்ஞையாக நோக்குகின்றன.
ஆனால், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவோ, மேற்குலகமோ நேரடியாக சீனத் தலையீட்டை தடுப்பதை விட, பிராந்தியத்தின் ஆதிக்க சக்தி ஒன்றைப் பலப்படுத்துவதன் மூலம் அதனை தடுக்க முனைவது தான் சிறந்த திட்டமாக மேற்குலகம் கருதுகிறது.
சீனாவின் திடீர் கடற்படை பல அதிகரிப்பு, இந்தோ பசுபிக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு கடுமையான சவால்களைத் தோற்றுவித்திருக்கிறது.
சொலமன் தீவுகளில் சீனா தளம் ஒன்றை அமைக்கத் தயாராகி வருகிறதும், டியாகோ கார்சியாவுக்கு அருகே தளம் ஒன்றை அமைக்கத் திட்டமிடுவதும், சீனாவின் பிந்திய மூலோபாயங்களாகும். இந்த இரண்டும் நிறைவேறினால், அது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு பெரும் சவாலாக அமையும்.
இந்தப் பிராந்தியத்தில், அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தலைவலியாக அமையும்.
அதற்கு சீனா கையாளுவது ஒன்றும் படையினரைக் களமிறக்கும் போரையல்ல. போரின்றி எதிரிகளை அடங்கும் தந்திரத்தை.
அது என்னவென்று மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
-சுபத்திரா–