அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 34 பேர் பனிப்புயலுக்கு உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.

நியூயார்க் மாகாணத்தில் பஃபல்லோ நகரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மெரிட் நகரில் பனிபடர்ந்த சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாயினர்.

பனிப்புயலின் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் கனடாவில் இருந்து வட அமெரிக்க கண்டத்தின் தென்கோடியில் உள்ள ரியோ கிராண்டே வரையிலும் காணப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் பனிப்புயலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனினும், அத்தியாவசியம் அல்லாத பயணங்களை தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பனிப்புயலின் தாக்கம் சில நாட்கள் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பல இடங்களிலும் மின்சார விநியோகம் சீரமைக்கப்பட்டுவிட்டது.

அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 லட்சத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மின்சாரம் இல்லை.

இது ஒரு கட்டத்தில் 17 லட்சம் என்கிற அளவில் உச்சத்தில் இருந்தது. ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாமல் தவித்துப் போயினர்.

அமெரிக்காவில் 5.5 கோடி பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதிகள் இன்னும் கடுங்குளிர் எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் ஏற்பட்ட பனிப்புயல் எதிரொலியாக நிலவும் கடும் பனி, பலத்த காற்று காரணமாக அமெரிக்கா முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காணம் ஹம்பர்க்கில் பனி மூடிக் கிடக்கும் வீடு மற்றும் கார்

பஃபல்லோ நகரை பூர்விகமாகக் கொண்ட நியூயார்க் மாகாண ஆளுநர் கேத் ஹோச்சுல், “பஃபல்லோ நகரின் மிக மோசமான பனிப்புயலாக இது வரலாற்றில் பதிவாகும்”, என்று கூறுகிறார்.

“சாலையின் இருபுறமும் கார்கள் முடங்கிக் கிடப்பதை பார்க்கும் போது ஏதோ போர்க்களத்திற்குச் செல்வது போல இருக்கிறது” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

உயிருக்கே ஆபத்தான மிக மோசமான காலநிலை நிலவுவதால் மக்கள் தொடர்ந்து வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நியூயார்க் மாகாணம் ஹம்பர்க்கில் ஈரி ஏரிக்கரை

ஈரி கவுண்டியில் மட்டும் 12 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அவர்களில் சிலர் கார்களில் இருந்தபடியே மரணத்தைத் தழுவியுள்ளனர்.

வெர்மாண்ட், ஒஹாயோ, மிசோரி, விஸ்கான்சின், கான்சாஸ், கொலராடோ ஆகிய மாகாணங்களிலும் பனிப்புயல் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

தெற்கு ஃபுளோரிடாவில் பல்லி இனங்களில் ஒன்றான இகுவானாக்கள் உறைந்து, மரங்களில் இருந்து கீழே விழும் அளவுக்கு வெப்பநிலை மிகவும் குறைந்துவிட்டது.

அமெரிக்காவின் மேற்கு மாகாணமான மொன்டனா குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு வெப்பநிலை -50F (-45C) என்னும் அளவுக்கு சரிந்துள்ளது- கனடாவில் ஓன்டோரியோ, கியூபெக் ஆகிய மாகாணங்களில் பனிப்புயலில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

கியூபெக் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 1.2 லட்சம் வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

சில வீடுகளுக்கு மின் இணைப்பை மீண்டும் கொடுக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply