இந்தியாவில், தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஐசியூவில் மகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியையும், இரண்டு மணி நேரத்தில் தாய் உயிரிழந்தது சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலம் பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார். இவருடைய மனைவி பூனம் வர்மா. இந்தத் தம்பதியின் மகள் சாந்தினி குமாரி. இவருக்கும், சேலம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வித்யுத் குமார் என்பவரின் மகன் சுமித் கவுரவ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த சாந்தினியின் தாய் பூனம் வர்மாவின் உடல்நிலை 26 ஆம் திகதி திங்கட்கிழமை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஐசியூவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘பூனம் வர்மாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. எந்நேரத்திலும் அவர் உயிரிழக்கலாம்’ என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட பூனம் வர்மா, தான் இறப்பதற்குள் மகள் திருமணத்தை பார்க்க வேண்டும் என தனது ஆசையை கூறியுள்ளார்.
பூனம் வர்மாவின் கடைசி ஆசை குறித்து மணமகன் சுமித் கவுரவ் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு வீட்டாரும் பரஸ்பர சம்மதத்துடன் பூனத்தின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சாந்தினி குமாரியும் சுமித் கவுரவ்வும் ஐசியூவில் உள்ள பூனம் வர்மாவின் கண்முன்னே மாலைமாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
மகளின் திருமணத்தைப் பார்த்த 2 மணி நேரத்தில் பூனம் வர்மா உயிரிழந்தார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.