ரணில் விக்கிரமசிங்க நரித்தனமாக தமிழர்களை ஏமாற்றப் போகின்றார். ஜெனிவாவை கையாளும் ஒரு உக்தியாகவே ரணில் ஒரு புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

விடயம் தெரியாமல் தமிழ் தலைமைகள் கொழும்பின் பொறிக்குள் சிக்கப்போகின்றன. இதன் மூலம் சர்வதேச அழுத்தங்கள் பலவீனமடையப் போகின்றது.

இவ்வாறான கருத்துக்களை சிலர் முன்வைப்பதை காணமுடிகின்றது. அரசாங்கத்துடன் பேசுகின்ற ஒவ்வொரு சந்தர்பங்களிலும் இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானது.

ஒரு நம்பிக்கையற்ற சூழலில் இடம்பெறும் அனைத்துமே அவநம்பிக்கையினூடாகத்தான் நோக்கப்படும். அவ்வாறாயின் ரணில் சூழ்ச்சி செய்யமாட்டாரா? இப்படி எவரேனும் கேட்டால் – பதில் சுலபமானது. அவர் நிச்சயம் சூழ்சிகள் புரிவார்.

அதில் நாம் சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. ஏனெனில் அரசியல் என்பது எப்போதுமே அரசியல்தான். அரசியலும் சூழ்ச்சியும் பிரிக்கமுடியாதவைகளாகும்.

அரசாங்கம் – ரணில், சூழ்சிகள் புரிவாரென்றால் அதனை முறியடித்து, தமிழ் மக்களின் நலன்களை வெற்றிகொள்வதுதானே தமிழர்களின் அரசியல் கெட்டித்தனமாக இருக்க முடியும்.

சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல, உலகில் அனைத்து ஆளும் தரப்புக்களும் சூழ்சிகளுடன்தான் வரும். ஒரு அடிப்படையான வேறுபாடுண்டு.

நாம் சூழ்ச்சியாக விளங்கிக்கொள்வது, அவர்களது பார்வையில் ராஜதந்திரமாகும். ராஜதந்திர அரசியலை இரத்தமும் சதையுமாக புரிந்துகொள்வதாயின், தந்திரங்கள் இல்லாமல் ராஜ்யங்கள் இல்லை. தந்திரங்கள் இல்லாமல் அரசியலுமில்லை.

ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் தந்திரங்களிலேயே தங்கியிருக்கின்றது. எனவே உணச்சிகளுக்கு பலியாகாமல் விடயங்களை நோக்கப் பழகுவோம்.

முதலில் சர்வதேச அழுத்தங்களை உற்றுநோக்குவோம். இது தொடர்பில் பல்வேறு சந்தர்பங்களில் இந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் சில விடயங்கள் தமிழ் சூழலில் கூறியது கூறலாகவே இருக்கின்றது. உணர்சிவசப்பட்ட கருத்துக்கள் கூறியது கூறலாக தொடர்வதால், யதார்தங்களையும் திரும்பத்திரும்ப அழுத்தி கூறவேண்டியிருக்கின்றது.

சர்வதேச அழுத்தங்களை ரணில் பலவீனப்படுத்திவிடுவாரென்று நாம் கூறுகின்ற போது, ஒரு விடயத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

அதாவது, ரணில் பலவீனப்படுத்தக் கூடியளவிற்கு, சர்வதேச அழுதங்கள் பலவீனமாக இருக்கின்றன.

அந்தளவிற்கு அவை பலவீனமானவையா? இந்த அடிப்படையில் ஏன் எவரும் சிந்திப்பதில்லை? ரணில் விக்கிரமசிங்க வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள நாடொன்றின் ஜனாதிபதி.

வெளிநாடுகளின் உதவிக்காக கையேந்திக் கொண்டிருக்கும் ஒருவர். இவ்வாறான ஒருவரால் பலம்பொருந்திய நாடுகளின் அழுத்தங்களை எவ்வாறு பலவீனப்படுத்த முடியும்?

ஈழத் தமிழர்களுக்கு உறுதியானதொரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று மேற்குலகம் தீர்மானித்தால் அந்த தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்கவினால் என்ன செய்துவிட முடியும்? நிச்சயமாக முடியாது.

எனவே மனித உரிமைசார்ந்த அழுத்தங்களை ரணில் விக்கிரமசிங்க சூழ்சியால் மடைமாற்றிவிட முடியாது.

அடுத்தது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது சொந்த நலன்களுக்காக காட்டிக்கொடுப்புக்களை செய்கின்றாரென்று எவரேனும் கூற முற்பட்டால், அதுவும் பலவீனமானதொரு வாதமாகும். ஏனெனில் நம் அனைவருக்குமே ஒரு விடயம் தெளிவாகத் தெரியும்.

கூட்டமைப்பினர், இந்தியாவையும் அமெரிக்காவையுமே நம்பி அரசியல் செய்பவர்கள். அவனின்றி அனுவும் அசையாதென்பது போல், அவர்களின்றி கூட்டமைப்பினர் அசையப் போவதில்லை.

உண்மையிலேயே சர்வதேச அழுத்தங்களை இறுக்கமாக பேணிக்கொள்ள அந்த நாடுகள் விரும்பினால், கூட்டமைப்பை அவர்கள் அதற்கேற்பவே கையாண்டிருப்பர். அதில் எந்தவொரு தடையுமில்லை.

ஆனால் அவர்களோ அரசாங்கத்தோடு பேசுமாறு கூட்டமைப்பை ஊக்குவிக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினாலும் ரணில் சர்வதேச அழுத்தங்களை பலவீனப்படுத்தவே, கூட்டமைப்புடன் பேசுகின்றாரென்பது, பலவீனமானதொரு வாதமாகும்.

ஏனெனில், விடயங்களை ஆழமாக நோக்கினால், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடான அழுத்தங்களை பலவீனப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டுக்கள் எவையும் ரணிலிடம் இல்லை. ரணிலால் அது முடியாது.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், ரணில் மற்றும் மங்களசமரவீர போன்றவர்களின் திறமையினால் அல்லது கூட்டமைப்பின் சதியால் விடயங்களில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

தங்களுக்கு விருப்பமான ஆட்சியாளர்கள் பலமடைவதற்கும், முன்நோக்கி பயணிப்பதற்குமான கதவை பலம்பொருந்திய நாடுகள் திறந்துவிட்டன.

உண்மையில் உள்நாட்டில் முன்னேற்றங்களை காண்பிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கினர்.

ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படவில்லை. ஒரு வேளை ரணில்-மைத்திரி அரசாங்கம் முரண்பாடுகளில்லாமல் நகர்ந்திருந்தால், இப்போது நாம் கூறிக் கொண்டிருக்கும் சர்வதேச அழுத்தங்களில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனாலும் ஒரு குறிப்பிட்டளவில் மனித உரிமைசார்ந்த அழுத்தங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

மனித உரிமைசார்ந்த அழுத்தங்கள் முற்றிலும் இல்லாமல் போய்விடாதென்பது சிங்கள ஆட்சியாளர்களுக்கு தெரியாத விடயமுமல்ல.

ஆனால் அந்த அழுத்தங்கள் தங்களால் கையாளக் கூடிய எல்லைக்குள் இருக்க வேண்டுமென்பதுதான் அவர்களது விருப்பமாகும்.

ஏனெனில் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களால் நாடுகளை கட்டுப்படுத்த முடியாது.

ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் பலவீனத்தை புரிந்துகொள்வதற்கு, பேரவையின் முன்னைநாள் ஆணையாளர் நவிப்பிள்ளையின் கூற்றே போதுமானது.

அதாவது, ஜ.நா மனித உரிமைகள் பேரவையானது, புவிசார் அரசியல் நலன்களாலும் குறுகிய தேசியவாத நலன்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதற்கு தனது சொந்த நாடான தென்னாபிரிக்காவும் விதிவிலக்கல்ல.

இந்த யதார்தங்களை புரிந்துகொள்ளாத வாதங்களால் பயனில்லை. சர்வதேச அரசியல் சூழலை இரத்தமும் சதையுமாக நோக்க வேண்டும்.

அடிப்படையில் இந்த உலக அரசியல் ஒழுங்கானது, அரசுகளை பாதுகாக்கும் ஒழுங்காகும். இந்த ஒழுங்கில் அரசல்லாதவர்களிடம் என்னதான் நியாயங்கள் இருந்தாலும் கூட, அது சபையேறாது. இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பே மிகச் சிறந்த உதாரணம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு மேற்குலகிற்கு எதிரான அமைப்பல்ல. இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுடன் ஒரு போதுமே விடுதலைப் புலிகள் அமைப்பை ஒப்பிட முடியாது.

இது மேற்குலகத்திற்கும் தெரியாத விடயமல்ல. எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் யுத்தத்தை நோக்கி நகர்ந்த போது, அதுவரையில் விடுதலைப் புலிகளை கண்டும்காணாமல் விட்டிருந்த ஜரோப்பிய ஒன்றியமும், கடனாவும் விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் (பிரபாகரனின்) யுத்த முடிவை மறுபரீசீலனை செய்வதற்கானதொரு அழுத்தமாகவே மேற்படி தடை பிரயோகிக்கப்பட்டது.

ஆனாலும் அதனை விடுதலைப் புலிகள் அமைப்பு பொருட்படுத்தவில்லை. ஒட்டுமொத்த மேற்குலகத்தினாலும் எதிர்க்கப்பட்ட பின்புலத்தில்தான், விடுதலைப் புலிகள் யுத்தகளத்தில் நிர்மூலமாக்கப்பட்டனர்.

மேற்குலகம் ஒட்டுமொத்தமாகவே விடுதலைப் புலிகளுக்கு எதிராக திரும்பிய போது, புலம்பெயர் சமூகத்தினால் அதனை தடுக்க முடியவில்லை.

இந்தக் காலத்தில் மேற்குலக ராஜதந்திரி ஒருவருடன் பேசிய அனுபவத்தை ஒரு நண்பர் பின்னர் பதிவு செய்திருந்தார்.

அதாவது, மகிந்த ராஜபக்ச அடிப்படையிலேயே மேற்குலகிற்கு எதிரான பார்வைகொண்டவர்.

அவ்வாறான ஒருவர் முன்னெடுக்கும் யுத்தத்ததை நீங்கள் ஏன் ஆதரிக்கின்றீர்கள்? இதற்கு அந்த ராஜதந்திரியின் பதில், பிரபாகரனை இப்போது மகிந்த பார்த்துக் கொள்ளட்டும் பின்னர் நாம் மகிந்தவை பார்த்துக் கொள்வோம்.

பலம்பொருந்திய நாடுகளின் சிந்தனையை புரிந்துகொள்வதற்கு இது ஒரு சிறந்த கூற்றாகும்.

ஏனெனில் தங்களது நலன்களை பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களிடம் பல வழிமுறைகள் உண்டு.

இறுதி; யுத்தத்தின் போது, பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்படுவர் என்பதை அனைவருமே அறிந்திருந்தனர்.

உண்மையிலேயே அப்பாவி ஈழத் தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமென்று எண்ணியிருந்தால், உலகின் பலம்பொருந்திய நாடுகள் அழிவை தடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு யுத்த நிறுத்தம் ஏற்பட்டால் புலிகள் தப்பிவிடுவார்கள் – முக்கியமாக பிரபாரனும் தப்பிவிடுவார் – என்னுமடிப்படையில்தானே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

சாதாரண மக்களின் உயிர்களை கருத்தில் கொண்டு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. ஏன் இவ்வாறு நடந்தது?

ஏனெனில் சாதாரண அப்பாவி ஈழத் தமிழர்களின் உயிர்கள் உலகின் மூலோபாய நலன்களுக்கு தேவைப்படவில்லை.

ருவாண்டா இனப்படுகொலையின் போது, ருவாண்டாவின் ஜ.நா அமைதிப் படை நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த மேஜர் ஜெனரல் ரோமியோ டலாரி – இவ்வாறானதொரு இனப்படுகொலையை உலகம் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும்.

ஆனால் உலகம் தடுக்கவில்லை ஏனெனில் உலகின் மூலோபாய நலன்களுக்கு இந்தச் சிறிய ஆபிரிக்க நாட்டின் ஏழை மக்களின் உயிர்கள் தேவைப்பட்டிருக்கவில்லையென்று எழுதியிருந்தார்.

முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த ஈழத் தமிழ் மக்களின் நிலையும் இதுதான். இறுதி யுத்தத்தின் போது, ஜ.நாவின் பேச்சாளராக இருந்த கோடன் வைஸ், 2011இல், புலிகளின் இரத்தம் என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

புலிகள் இல்லாத உலகம் முன்னரை விடவும் இப்போது சிறப்பாக இருக்கின்றதென்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஒரு மேற்கு நாட்டவரின் பார்வையின் எல்லை இதுதான். இதனை புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது நமது பணியாகும்.

இந்த பின்புலத்தில் நோக்கினால் சர்வதேச அழுத்தங்களின் எல்லைகளை கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு துருப்புச்சீட்டும் எவரிடமுமில்லை.

அவர்களுக்கு தேவையென்றால் அதனை குறைக்கவும், கூட்;டவும் அவர்களால் முடியும். அவர்களால் மட்;டும்தான் அது முடியும்.

அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் அமைதியாக இருக்க வேண்டுமென்பதல்ல மாறாக, பாதிக்கப்பட்ட தரப்பினர் என்னதான் நியாயங்களை கூறினாலும் கூட, அந்த நியாயங்கள் மட்டும், உலகின் தீர்மானங்களை மாற்றுவதற்கு போதுமானதல்ல.

ஆனால் இவ்வாறான அழுத்தங்களின் எல்லையை புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயற்பட வேண்டியது நமது கடமையாகும்.

அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசத்தான் வேண்டும். அதனை கையாளத்தான் வேண்டும்.

சூழ்சிகளை எதிர்கொள்வதற்கு, சூழ்சியை எதிகொள்ளாமல் தப்பியோடுவது ஒரு உபாயமாகவே இருக்கவே முடியாது.

-யதீந்திரா-

Share.
Leave A Reply