”எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் நடத்தியிருக்கும் சந்திப்புகளும் பேச்சுக்களும், அரசியல் விவகாரங்களை ஒட்டியதாக காணப்படுகிறது”
”அரசுடனான பேச்சுக்கள் சர்வதேச மத்தியஸ்தம், இந்தியாவின் மத்தியஸ்த்துடன் தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பில் வலியுறுத்தப்படும் நிலையில் தான், எரிக் சொல்ஹெய்மின் உள்நுழைவு அரங்கேறுகிறது”
கடந்த ஒக்டோபர் மாதம் கொழும்பு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை தங்கியிருந்து விட்டுச் சென்ற எரிக் சொல்ஹெய்ம், கடந்த வாரம் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரிலேயே தாம் கொழும்பு வந்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்த முறை அவர் கொழும்பு வந்திருப்பதற்கும் காலநிலை மாற்றம் தொடர்பாக அவருக்கு வழங்கப்பட்ட பதவிக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
கடந்த ஒக்டோபர் மாதம் அவரை அழைத்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலநிலை தொடர்பான, ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகராக நியமித்திருந்தார். கூடவே மாலைதீவின் சபாநாயகர் முஹமட் நஸீட்டையும் தனது ஆலோசகராக ஜனாதிபதி ரணில் நியமித்திருந்தார்.
காலநிலை தொடர்பான ஆலோசனைகளுக்கு ஏன் எரிக் சொல்ஹெய்ம், அவருக்கு ஏன் வெளிநாட்டு நாணயத்தில் ஊதியம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு எரிக் சொல்ஹெய்ம், தாம் ஊதியத்துக்காக பணியாற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். எரிக் சொல்ஹெய்மும், ரணில் விக்கிரமசிங்கவும் பழைய நண்பர்கள்.
2001ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக நோர்வே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதுவர் அவர்.
அந்த அமைதி முயற்சியில் எரிக் சொல்ஹெய்மின் வகிபாகம் குறித்த சந்தேகங்கள் இரண்டு தரப்பிலும் காணப்பட்டது.
அமைதி முயற்சிகளைக் குழப்புவதற்கு முயன்ற சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள், அவரைப் புலிகளின் ஆதரவாளராகச் சித்திரித்தன.
வரிப்புலி சீருடையுடன் அவரது படங்கள் கொழும்பு நகரெங்கும் ஒட்டப்பட்டு, அவருக்கு எதிரான கருத்து சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டது.
எரிக் சொல்ஹெய்மும் நோர்வேயும் நாட்டைப் பிளவுபடுத்த முயல்வதாக, புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது.
அதேவேளை, தமிழ் மக்கள் மத்தியிலும், எரிக் சொல்ஹெய்ம் அமைதி முயற்சி என்ற பெயரில் தமிழர் தரப்பை ஆபத்தான பொறிக்குள் தள்ளிச் செல்கிறார் என்ற கருத்தும் காணப்பட்டது.
அந்த அமைதி முயற்சியின் முடிவில், ஆரம்பித்த போர், தமிழர் தரப்புக்கு பேரழிவைக் கொடுத்தது.
இன்று வரை இட்டு நிரப்ப முடியாத தலைமைத்துவ வெற்றிடத்தையும் அது ஏற்படுத்தியது. அதனால் எரிக் சொல்ஹெய்ம் தான், தமிழர்களை தவறான வழிக்கு இட்டுச் சென்றார் என்ற கருத்து இன்னமும் பலரிடம் காணப்படுகிறது.
எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அமைதி முயற்சிகளுக்குப் பின்னர், நோர்வே அரசியலிலும் பின்னர் ஐ.நா பணிகளிலும் ஈடுபட்டு விட்டு இப்போது விலகியிருக்கிறார்.
இவ்வாறான நிலையில் தான், அவரை ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அழைத்து வந்திருக்கிறார். முதலில் அவரை அழைத்து வந்த போது காலநிலை மாற்றம் பற்றிய ஆலோசனைகளை வழங்குவதற்கு வந்தார் என்று கூறப்பட்டது.
இப்போது அவர் மீண்டும் வந்திருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரிலேயே வந்ததாக கூறியிருக்கிறார் எரிக் சொல்ஹெய்ம்.
வந்தவுடன் அவர் மனோ கணேசனைச் சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்திருக்கிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினருடனும் பேச்சுக்களை முன்னெடுத்திருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை, எரிக் சொல்ஹெய்ம் சந்திக்க விரும்பியே அந்தச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
காலநிலை மாற்றம் குறித்து ஆலோசனை வழங்க வந்ததாக முதலில் கூறப்பட்ட எரிக் சொல்ஹெய்ம் இந்தமுறை வந்தவுடன் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற பசுமை முதலீடுகளை கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்த வந்திருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அவர் கொழும்பில் நடத்தியிருக்கும் சந்திப்புகளும் பேச்சுக்களும், அரசியல் விவகாரங்களை ஒட்டியதாக காணப்படுகிறது.
அண்மையில் நடந்த சர்வகட்சி கூட்டத்தை வரவேற்றுக் கருத்து வெளியிட்டிருக்கும் அவர், இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் குறித்தும் பேச்சுக்களை முன்னெடுத்திருக்கிறார்.
அவரது உண்மையான இலக்கு காலநிலை தொடர்பான விடயங்களுக்கு அப்பாற்பட்டதாக- அரசியல் விவகாரங்களுடன் தொடர்புடையதாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது.
எதற்காக ஆரம்பத்திலேயே ரணில் விக்கிரமசிங்க, எரிக் சொல்ஹெய்மை களமிறக்கிய போது இந்த விடயத்தை வெளிப்படுத்தவில்லை?எரிக் சொல்ஹெய்ம் தொடர்பான எதிர்மறையான விம்பம் ஒன்று சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருப்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியாத ஒன்றல்ல.
நோர்வேயின் அமைதி முயற்சிகளைக் குழப்புவதற்காக, அப்போது ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் அந்த வேலையை கனகச்சிதமாக முன்னெடுத்திருந்தன.அப்போது ஜேவிபியில் இருந்த விமல் வீரவன்ச, ஜாதிக ஹெல உறுமயவில் இருந்த அதுரலியே ரத்தன தேரர், சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில, எல்லாவெல மேதானந்த தேரர் போன்றவர்கள், எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வேக்கு எதிரான மிகமோசமான- கீழ்த்தரமான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
அந்தப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டது கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னர். ஆனாலும் அதனை சிங்கள மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். அப்போது புலிகளுடன் பேச்சு நடத்திய ரணில் விக்கிரமசிங்கவையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும் மீண்டும் எரிக் சொல்ஹெய்மை அழைத்து வருகிறார் என்றதும், சிங்கள மக்கள் குழம்பிப் போவார்கள்.
ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது என்பதால், ஆழம் பார்க்கும் முயற்சியாகவே, காலநிலை தொடர்பான ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டிருக்கலாம்.
சிங்கள மக்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராத நிலையில்- எரிக் சொல்ஹெய்மையே அவர்கள் பெரிதும் கண்டுகொள்ளாத நிலையில், மெதுவாக தனது வேடத்தைக் கலைக்கத் தொடங்கியிருக்கலாம். இந்த முறை அவர் சிங்களத் தலைவர்களிடம், தயங்கித் தயங்கிச் செல்ல வேண்டிய நிலை இருக்கவில்லை.
வெளியே போ என்று நோர்வேயின் கழுத்தைப் பிடித்து தள்ளிய மஹிந்த ராஜபக்ஷவே, கடந்த முறை வந்திருந்த எரிக் சொல்ஹெய்மை சிரித்துக் கொண்டு வரவேற்றிருந்தார்.
காரணம், எரிக் சொல்ஹெய்மின் அமைதி முயற்சி, சிங்களத் தரப்பினருக்கு சாதகமான விளைவுகளையே எற்படுத்தியிருந்தது.
அரசியல் ரீதியாக ராஜபக்ஷவினரைப் பலப்படுத்தி, கிட்டத்தட்ட அவர்கள் அதிகாரம் செலுத்துவதற்கு வழியை ஏற்படுத்தியது.
அத்துடன், போரை முன்னெடுத்து விடுதலைப் புலிகளை ஓரம்கட்டி ஒழித்துக் கட்டவும் வழிவகுத்துக் கொடுத்தது.
இந்த இரண்டுக்கும் காரணமாக அமைந்தது, எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த அமைதிப் பேச்சுக்கள் தான்.
ஆரம்பத்தில் சிங்கள மக்கள் நோர்வேயையும் சொல்ஹெய்மையும் வெறுப்புடன் பார்த்ததற்கும் இப்போது அவரை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் அதுவே காரணம். இந்த கட்டத்தில் தமிழர் தரப்புடன் சொல்ஹெய்ம் இப்போது மெதுவாக ஊடாடத் தொடங்கியிருக்கிறார்.
அவரது இந்தமுறை கொழும்பு பயணம், பேச்சுவார்த்தைகளில் அவரது ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைத் தீர்வு என்று உறுதி கொடுத்திருக்கிறார்.
இரா.சம்பந்தன் முன்னர் தீபாவளிக்குள் தீர்வு வரும் என்றும், பொங்கலுக்குள் தீர்வு வரும் என்றும் குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கைகள் இன்று வரை பரிகாசம் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோல, ரணில் விக்கிரமசிங்கவின் சுதந்திர தினத்துக்குள் தீர்வு வரும் என்ற வாக்குறுதியின் நிலையும் என்னவாகும் என்ற கேள்விகள் உள்ள நிலையில் – சொல்ஹெய்மும் இதற்குள் காலடி எடுத்து வைக்க முனைகிறார்.
தமிழர் தரப்பு அவரை வேண்டி விரும்பி அழைத்து வரவில்லை. அத்தகைய துணிச்சல் யாருக்கும் இல்லை.
அரசுடனான பேச்சுக்கள் சர்வதேச மத்தியஸ்தம், இந்தியாவின் மத்தியஸ்த்துடன் தான் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பில் வலியுறுத்தப்படும் நிலையில் தான், எரிக் சொல்ஹெய்மின் உள்நுழைவு அரங்கேறுகிறது.
இது சர்வதேச தலையீடு அல்லது கண்காணிப்பை தவிர்ப்பதற்கான தடுப்பதற்கான சிங்கள அரசியல் சக்திகளின் உத்தியாக இருக்குமா என்ற சந்தேகங்கள் உள்ளன.
எவ்வாறாயினும் தாம் மத்தியஸ்தரம் வகிக்கப் போவதில்லை என எரிக் சொல்ஹெய்ம் கூறியிருந்தாலும், அது எந்தளவுக்கு உண்மையானதென்ற சந்தேகம் உள்ளது.
விடுதலைப் புலிகளின் காலத்தில் எரிக் சொல்ஹெய்ம் அமைதி முயற்சிகளில் எத்தகைய வகிபாகத்தை கொண்டிருந்தார் என்ற கேள்விகளுக்கு அப்பால், இப்போது அவர் விடயத்தில் தமிழர் தரப்பு முன்னெச்சரிக்கையாகவே இருந்து கொள்ளும். ஏனென்றால், அவர்கள் சூடு கண்ட பூனையல்லவா?
-ஹரிகரன்–