கிராண்ட்பாஸ், சுவர்ண சைத்திய வீதியைச் சேர்ந்த 52 வயதான முருகையா பத்திராஜா எனும் 3 பிள்ளைகளின் தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ் தினமான கடந்த 25 ஆம் திகதி, புறக்கோட்டையில் தான் வேலை செய்யும் ஆடை விற்பனை நிலையத்துக்கு வேலைக்கு சென்றுள்ள முருகையா பத்திராஜா வீடு திரும்பவில்லை என, அவரது மனைவி இந்திராணி பத்திராஜாவினால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.பி. 328/236 எனும் இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாடு தொடர்பில், ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த புறக்கோட்டை பொலிஸார் தகவல் எதுவும் வெளிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இறுதியாக வெள்ளை நிறத்துடன் கூடிய இளம் நீல நிற ரீ சேட் மற்றும் காற் சட்டை அணிந்திருந்த குறித்த நபர் தொடர்பில் எவரேனும் தகவல் அறிந்தால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் 011 2421515 அல்லது கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் 011 2436258 எனும் இலக்கத்துக்கு அறியத்தருமாறு கோரப்படுகின்றனர்.