திமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான், மாரடைப்பால் காலமானதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தவர் மஸ்தான்.
கடந்த 21ஆம் தேதி காரில் செங்கல்பட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், அவரது குடும்பத்தினர் மஸ்தானின் மரணத்தில் சந்தேகமடைந்தனர். தங்கள் தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டுமென காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதையடுத்து மஸ்தானின் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதில் அவர் மூச்சுத் திணறலில் இறந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த மரணம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தது. டிசம்பர் 21ஆம் தேதி டாக்டர் மஸ்தான் தனது தம்பியின் மருமகன் இம்ரான் பாஷா என்பவருடன் செங்கல்பட்டை நோக்கிச் சென்றிருக்கிறார்.
அதற்குப் பிறகு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி கூடுவாஞ்சேரி தீபம் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். ஆனால், கொண்டுவரப்பட்டபோதே, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை கூறியது.
இந்த விவகாரத்தில் காவல்துறை இம்ரான் பாஷா மீது சந்தேகமடைந்தது. செல்லும் வழியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது, போகும் வழியில் இம்ரான் தவிர மேலும் இருவர் காரில் ஏறிக்கொண்டது தெரியவந்தது.
தொடர்ந்து காவல்துறை விசாரணையில் கடன் பிரச்சனையின் காரணமாக இம்ரான் பாஷா, தனது நண்பர்களுடன் சேர்ந்து டாக்டர் மஸ்தானை கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறுகையில், “மஸ்தானிடமிருந்து 15 லட்ச ரூபாயை இம்ரான் பாஷா கடனாகப் பெற்றிருக்கிறார்.
நீண்ட நாட்களாக அந்தப் பணத்தை இம்ரான் திரும்பக் கொடுக்காத நிலையில், அதனைத் திரும்பத் தருமாறு வலியுறுத்தியுள்ளார் மஸ்தான்.
இதையடுத்து செங்கல்பட்டில் உள்ள ஒரு ஃபைனான்சியரிடமிருந்து பணத்தை வாங்கித் தருவதாகக் கூறி, மஸ்தானை காரில் அழைத்துச் சென்றுள்ளார் இம்ரான்,” என்றனர்.
“செங்கல்பட்டை நோக்கிக் கார் செல்லும்போது தன்னுடைய சித்தி மகன் தமீம் என்ற சுல்தான் அகமது, அவரது நண்பர் நஷீர் ஆகியோர் காரில் ஏறிக்கொண்டனர். தௌபீக் அகமது, லோகஸ்வரன் ஆகியோர் வேறொரு காரில் பின் தொடர்ந்து வந்தனர்.
செங்கல்பட்டை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு தனிமையான இடத்தில் காரை நிறுத்தினர்.
நஷீர் மஸ்தானின் கையை பின்னால் பிடித்துக்கொண்ட நிலையில், சுல்தான் அவரது மூக்கையும் வாயையும் பொத்தி மூச்சுத் திணறலை ஏற்படுத்தினார்.
மஸ்தான் உயிரிழந்ததும், அவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாகக் கூறினர். இதற்கு தௌபீக் அகமதும் லோகேஸ்வரனும் உடந்தையாக இருந்தனர்.
மஸ்தானின் மரணம் கொலை எனத் தெரியவந்த நிலையில், இம்ரான், நஷீர், சுல்தான், தௌபீக், லோகேஸ்வரன் ஆகிய ஐந்து பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. ஒரு காரும் இரு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன,” என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.