டெல்லி: தலைநகர் டெல்லியில் இளம் பெண் ஒருவர் சுமார் 4 கிமீ தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர வைப்பதாக உள்ளது. இதனிடையே இது குறித்து அப்பெண்ணின் தயார் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் நேற்றைய தினம் புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புத்தாண்டு தினத்தன்று தலைநகர் டெல்லியில் மிகக் கொடூரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இளம் பெண் ஒருவர் காரின் அடியே இழுத்துச் செல்லப்பட்டார்.
இதேபோல அந்த பெண் சுமார் 4 கிமீ தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காரின் உள்ளே இருந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
கொடூர சம்பவம்
தலைநகர் டெல்லியில் 20 வயதே ஆன அஞ்சலி சிங் என்ற பெண் தான் இந்தச் சம்பவத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
காரை யூடர்ன் எடுக்கும்போது, பெண் ஸ்கூட்டியில் கார் இடித்துள்ளது. இதில் நிலைதடுமாறிய பெண் கீழே விழுந்துள்ளார்.
அப்போது பெண்ணின் உடல் வாகனத்துக்கு அடியே சிக்கிய நிலையில், அந்த உடலுடன் அவர்கள் சுமார் 4 கிமீ சென்றுள்ளனர்.
அங்குக் கடை வைத்திருந்த ஒருவர் இந்தச் சம்பவத்தைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நபர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு அந்த காரை பின்தொடர்ந்தும் சென்றுள்ளார்.
இழுத்துச் செல்லப்பட்ட பெண்
இருப்பினும், அவர்கள் சுமார் 4 கிமீ தூரத்திற்குப் பெண்ணை இழுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு டெல்லி லெப்டினன்ட்-கவர்னர், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள், மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் பெண்ணின் தயார், இது தொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். காரின் அடியே சிக்கிய பெண்ணின் உடலில் ஆடைகள் களைந்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய அவர்கள், போலீசார் உடலை தங்களிடம் காட்ட மறுப்பதாகவும் சாடியுள்ளார்.
உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்த அஞ்சலி ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்தார்..
அப்படி அவர் பணிபுரிந்த நிறுவனம் அரேஞ் செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண்ணும், இதில் கைது செய்யப்பட்டவர்களும் சுல்தான்புரிக்கு அருகில் வசிக்கின்றனர்.
இருப்பினும் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்தப் பெண் தனது தாய் மற்றும் 6 சகோதர சகோதரிகளுடன் வசித்து வந்தார். அந்தப் பெண்ணின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.
ஆடைகள்
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து உயிரிழந்த அஞ்சலியின் தயார் ரேகா கூறுகையில், “அஞ்சலி ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
புத்தாண்டு அன்று நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்வதாகவும் திரும்பத் தாமதமாகும் என்றும் அவர் கூறினார்.
அவருக்காக நான் காத்திருந்தேன். ஆனால், இப்படி ஆகும் என்று ஒருபோதும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
காரில் மட்டும் சிக்கியிருந்தால்.. அவரது உடைகள் எல்லாம் எப்படிக் களையும்? போலீசார் அவரது உடலைக் கூட எங்களுக்குச் சரியாகக் காட்டவில்லை. என் மகளுக்கு நீதி வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். உடலை காட்டவில்லை
உடலை காட்டவில்லை
இது தொடர்பாக அவரது தாய் மாமா பிரேம் சிங் கூறுகையில், “காலை 7-8 மணியளவில் விபத்து குறித்து எங்களுக்குக் கால் வந்தது.
எனது சகோதரியை (அஞ்சலியின் தாய்) அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
இருப்பினும், உடலைக் காட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அந்த காருக்கு அடியில் நிறைய ரத்தம் இருந்தது…” என்றார். இந்தச் சம்பவம் நடந்த போது, அவர்கள் மதுபோதையில் இருந்தார்களா என்பதைக் கண்டறிய அவர்களின் ரத்த மாதிரிகளை போலீசார் எடுத்துள்ளனர்.
விசாரணை
டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, “இன்று காலை நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலால் நான் வெட்கத்தில் தலை குனிகிறேன், டெல்லி போலீசார் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து விவகாரங்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தப்படும்” என்றார். இந்தச் சம்பவத்தை டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.