“நான் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அப்போது அறுவை சிகிச்சைக்கு ரூ. 36,000 செலவானது. அறுவை சிகிச்சை நடந்து 14 வருடங்கள் கடந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டேன்.’’

இந்திய சமூகத்தில் ஆண் – பெண் என்ற இரு பாலினத்தவர்களில் சமூக அங்கீகாரத்தில் ஆண்களின் கையே ஓங்கியிருக்கிறது.

பெண்களின் உரிமைகள் பல இன்றுவரை பெரும்பாலும் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில், திருநர் சமூகத்தின் நிலை இன்னும் மோசமாகப் பின்தங்கியிருக்கிறது. அவர்களும் இயற்கையின் அங்கம் என்பதை சமூகம் பெரும்பாலும் புரிந்துகொள்வதில்லை.

ஓர் ஆண் திருநங்கையான பின், அவரால் ஆண் உடலிலேயே தொடர முடியாது. அதேபோல் ஒரு பெண் திருநம்பியான பின்னர், தன் உடலையும் அவர் ஆணாக மாற்ற விரும்புவார்.

இப்படி, மனதால், எண்ணத்தால் குறிப்பிட்ட ஒரு பாலினமாக தங்களை உணர்பவர்கள், உடலால் வேறொரு பாலினத்தின் உறுப்புகளையும், செயல்முறைகளும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாவர்.

அதனால், திருநர்களுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். இந்த அறுவை சிகிச்சை மூலம் திருநங்கை, திருநம்பி என அவர்கள் விரும்பும் பாலினத்துக்கு ஏற்ப பாலுறுப்புகள் மாற்றியமைக்கப்படும்.

இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ள, தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும். ஒரு சில அரசு மருத்துவமனைகளில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

ஆனால், இந்த பாலின மாற்று அறுவை சிகிச்சை நடைமுறையில் சிக்கல் இருக்கிறது என்கிறார், திருநர் செயல்பாட்டாளர் கிரேஸ் பானு. இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர், இரண்டாவது முறையாக(ரீசர்ஜரி) பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட கிரேஸ் பானுவிடம் பேசினோம்.

“இந்தியாவில் இதயத்திற்கென தனி ஸ்பெஷலிஸ்ட் இருக்கிறார்கள். நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனி ஸ்பெஷலிஸ்ட் உள்ளனர்.

ஆனால், திருநர் பாலின சிகிச்சைகளுக்கு என ஸ்பெஷலிஸ்ட் இல்லை. மேலும் திருநர்கள் சாதாரணமான உடல்நிலை பிரச்னைக்காக மருத்துவமனையை அணுகினால்கூட, எச்.ஐ.வி டெஸ்ட் எடுத்து வரச் சொல்லும் அவலநிலை உள்ளது.

ஒரு சில திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவார்கள் என்பதற்காக, திருநர் சமூகத்தையே அதே கண்ணோட்டத்தோடு பார்க்கும் சமூகத்தையும் மருத்துவர்களையும் என்ன செய்வது?

சாதாரண சிகிச்சைக்கே இந்த நிலை எனில், பாலின மாற்று அறுவை சிகிச்சை பற்றி சொல்லவே வேண்டாம்.

மேலும் அந்த அறுவை சிகிச்சை, தமிழ்நாட்டில் எங்கும் சரியாகச் செய்யப்படவில்லை. பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை முடிந்து 10, 15 வருடங்களுக்குப் பிறகு உடலில் பின்விளைவுகள் ஏற்படுவதை பல திருநர்களும் எதிர்கொண்டுவருகிறார்கள்’’ என்றவர், தன் அறுவை சிகிச்சை அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

’’நான், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அப்போது அறுவை சிகிச்சைக்கு ரூ. 36,000 செலவானது.

அறுவை சிகிச்சை நடந்து 14 வருடங்கள் கடந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டேன். பிறப்புறுப்பு பாதிக்கப்பட மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.

தமிழ்நாட்டில் எங்குமே ரீசர்ஜரி செய்வதற்கான வாய்ப்பு இல்லை. பெங்களூரில் ரீசர்ஜரி செய்வதற்கான வாய்ப்பு இருந்தாலும் எந்தளவு பாதுகாப்பானது என்பதற்கு உத்தரவாதமில்லாத நிலை.

பாங்காக்கில் உள்ள ஹட்யாய் என்னுமிடத்தில், ரூ. 8 லட்சம் செலவில் நான் ரீசர்ஜரி செய்துகொண்டேன்.

அங்குள்ள மருத்துவர், ’வாழ்நாள் முழுவதும் இந்த சர்ஜரியினால் எந்தப் பிரச்னையும் வராது, வந்தால் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்றார்.

8 லட்சம் ரூபாய் என்பது பெரிய தொகை. வேலைக்குச் செல்லும் என்னாலேயே சமாளிக்க முடியவில்லை. நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது. வேலைக்கு செல்லாத திருநர்களால், இந்தத் தொகையை எப்படி சமாளிக்க முடியும்?’’ என்றவர்,

’’இந்தியாவில் திருநர்களின் சமூக, பொருளாதார நிலை மோசமாக உள்ளதால் அவர்களால் அதிகப் பணம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவதில்லை.

அறுவை சிகிச்சை செய்யாமலும் மாற்றுப் பாலினத்தவர்களால் நிம்மதியாக வாழ முடிவதில்லை.

அவர்களது உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற, தனி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும்.

திருநர்களுக்கான அறுவை சிகிச்சைகளில் பின்விளைவுகள் ஏற்படாதவாறு அரசு மருத்துவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போது, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதர அரசு மருத்துவமனைகளிலும் இதனை விரிவுபடுத்த வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் திருநர்களுக்கு, தரமான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்ற நிலை மாற வேண்டும். மருத்துவர்கள், திருநர்களை பிரச்னைகளையும், மனதையும் புரிந்துகொண்டு சிகிச்சையளிக்க வேண்டும்’’ என்றார் கிரேஸ் பானு.

Share.
Leave A Reply