சீனா, ரஷ்யா ஆகிய கணவன் மனைவியின் அடிமை இந்தியா என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுகிறார்.
சீனா தனது சொந்த நலன்களுக்காக எப்போதும் ‘மனைவி’யைப் பயன்படுத்துகிறது என்றும், கும்பிடு போடுவதைத் தவிர, ‘அடிமை’க்கு வேறு வழியில்லை என்றும் சுவாமி கூறுகிறார்.
இப்போது பல நிபுணர்கள், யுக்ரேன் போரால் ரஷ்யா, சீனாவை அதிகம் சார்ந்து இருப்பதாகவும் இந்தியாவுக்கு நிலைமை மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது என்றும் கருதுகிறார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டின் போது, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் உஸ்பெகிஸ்தானில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில், புதினை ‘அன்புள்ள நீண்ட கால நண்பர்’ என்று ஷீ ஜின்பிங் அழைத்தார். யுக்ரேன் நெருக்கடி குறித்துச் சீன அதிபர் கவலை தெரிவித்ததை புதின் ஏற்றுக்கொண்டார். யுக்ரேன் நெருக்கடியில் சீனாவின் நடுநிலையான அணுகுமுறையை அதிபர் புதின் பாராட்டினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிற்குச் சென்றிருந்தார். அவர் புதினுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்தினார். இது போர்க்காலம் அல்ல என்று பிரதமர் மோதி புதினிடம் கேமரா முன் கூறினார்.
யுக்ரேனுடனான போரைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வருமாறு இந்தியப் பிரதமர் வலியுறுத்தினார். ஆனால் சீன அதிபர் ஷீ ஜின்பிங் அப்படி எதுவும் கூறவில்லை.
யுக்ரேன் மற்றும் உலகின் பிற பகுதிகளில் நடந்து வரும் மோதலில், சீனா மற்றும் ரஷ்யாவின் நலன்கள் ஒன்றோடொன்று மோதுகின்றன, இருந்தாலும், இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவாகவே காணப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தல் குறித்து இரு நாடுகளும் ஒருமித்த பார்வையையே கொண்டுள்ளன.
தத்தம் அதிகாரங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேற்கத்திய ஜனநாயகத்தின் பெயரால் மட்டும் சர்வதேச ஒழுங்கு நிலைத்திருக்க முடியாது என்று சீனாவும் ரஷ்யாவும் கருதுகின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி யுக்ரேன் மீது தாக்குதல் நடத்த புதின் உத்தரவிட்டார். இதற்கு 20 நாட்களுக்கு முன்பு, புதின் மற்றும் ஷீ ஜின்பிங் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
அதில், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டாண்மை, எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும் எந்த பிரதேசமும் இதற்கு விதிவிலக்கன்று என்றும் அறிவித்தனர்.
எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கூட்டாண்மையின் யதார்த்தம்
இந்த அறிக்கைக்குப் பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்பு உடைக்க முடியாததாக மாறுகிறது என்று கூறப்பட்டது. ‘ரஷ்யா மற்றும் சீனாவின் கூட்டு எல்லைக்கு அப்பாற்பட்டது’ என்ற கருத்து சீன வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து வந்தது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு விரிவானது என்றும், எந்தப் பிரிவும் தேவையில்லை என்றும் கூறப்பட்டது. சீனா தனது வெளியுறவுக் கொள்கையை ‘மூன்று இல்லைகளால்’ வரையறுக்கிறது.
அவை- கூட்டணி இல்லை, மோதல் இல்லை மற்றும் மூன்றாம் தரப்பினரை இலக்காக்குவது இல்லை. இந்த மூன்று ‘இல்லை’களும் டெங் சியோபிங்கின் காலத்திலிருந்து தொடர்கின்றன.
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ ஆவணங்களும் கூட்டணிக்கு எதிரான கருத்துகளையே உள்ளடக்கியுள்ளன. சீனாவுடனான கூட்டணி குறித்தும், எந்தவொரு கூட்டணிக்கு எதிராகவும் தாராளமய முறையே சரியானது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
யுக்ரேன் மீதான தாக்குதலில், சீனா தனது நலன்களுக்கு ஏற்ப ரஷ்யாவை ஆதரித்துள்ளது. யுக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவதன் மூலம் அமெரிக்காவும் நேட்டோவும் நெருப்புடன் விளையாடுவதாக சீன அதிகாரிகளும் அங்குள்ள ஊடகங்களும் கூறுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் கூட சீனாவின் நிலைப்பாடு மிகவும் கண்டிப்பானது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து ஐ.நா.வின் இரண்டு தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பைச் சீனா புறக்கணித்தது.
மறுபுறம், கடந்த ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை விலக்குவதற்கான வாக்கெடுப்பு நடந்தபோது, சீனா அதற்கு எதிராக வாக்களித்தது.
மறுபுறம், செப்டம்பர் 16 அன்று, யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்ற அனுமதிக்கும் முன்மொழிவின் மீதான வாக்கெடுப்பிலும் சீனா கலந்து கொள்ளவில்லை.
செப்டம்பர் 21 அன்று, யுக்ரேனில் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக புதின் அறிவித்தபோது, சீன வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று கூறியது.
ரஷ்யாவைப் பயன்படுத்திக்கொள்ளும் சீனா
யுக்ரேன் நெருக்கடியில் ரஷ்யாவை சீனா பயன்படுத்திக்கொள்கிறது என்று தி அட்லாண்டிக் இதழ் குறிப்பிட்டுள்ளது.
அதில், “1960 களில், சீனாவும் ரஷ்யாவும் பனிப்போரின் போது பரம எதிரிகளாக மாறியதால், மேற்கு நாடுகளை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டன.
உலகின் இரண்டு சக்திவாய்ந்த சர்வாதிகார ஆட்சிகள் அமெரிக்கா தலைமையிலான தாராளமய ஒழுங்கிற்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன.
சீனாவின் ஆதரவுடன் ஜனநாயக நாடான யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் தாராளவாத சர்வதேச ஒழுங்கிற்குக் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
வரலாற்று ரீதியாக, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவு மோதலாகவே இருந்து வந்துள்ளது.
1960 களின் பிற்பகுதியில், பனிப்போரின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மிகவும் அதிகரித்து, அணு ஆயுதப் போர் வரை செல்லும் அபாயத்தை எட்டக்கூடிய நிலை கூட உருவானது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி அட்லாண்டிக் அறிக்கையில் மேலும்,”இருப்பினும், இரு நாடுகளும் இப்போது பரஸ்பர நலன்களுக்காக ஒன்றிணைந்துள்ளன.
இருவருக்கும் இடையே பொருளாதார ரீதியாக வளரும் வர்த்தகம் பரஸ்பர நன்மை பயக்கும்.
சீனாவிற்கு, எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் பிற மூலப்பொருட்கள் மூலம் தன் தொழிலின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும், இது ரஷ்யாவால் வழங்கப்படுகிறது. புதினும் ஷீ ஜின்பிங்கும் நெருங்கிய நண்பர்களாகக் காணப்படுகின்றனர்.
2019 இல், ஷீ ஜின்பிங் புதினைச் சிறந்த நண்பர் என்று அழைத்தார். இருவரும் அமெரிக்காவின் உலகளாவிய அந்தஸ்தினால் எரிச்சலடைந்துள்ளனர்.
இருவருமே தங்களது உலகளாவிய நோக்கத்தில் அமெரிக்காவை மிகப்பெரிய தடையாக கருதுகின்றனர். மேற்குலகின் மேலாதிக்கம் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் நீடிக்குமா என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கு நாடுகள் கடுமையாக முயன்றன, ஆனால் சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்து வருவதால், அது பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை.
2022 ஆம் ஆண்டில், சீனா மற்றும் ரஷ்யாவின் வர்த்தகம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து 172 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவுடனான ரஷ்யாவின் வர்த்தகம் பாதிக்கு மேல் குறைந்துள்ளது.
கார்னகி மாஸ்கோ என்ற மதியுரையகத்தின் மூத்த சிந்தனையாளர் அலெக்சாண்டர் காபுவேவ் கூறுகிறார், “ரஷ்யா இப்போது போர்க்காலத்தில் நிதி நெருக்கடி ஏற்படாத அளவுக்கு அதிகபட்ச வருவாயைப் பெற விரும்புகிறது. ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவு இருதரப்பிலும் சேதமைடந்துள்ளது.
இப்போது ரஷ்யாவின் வருமான ஆதாரம் மேற்குக்குப் பதிலாகக் கிழக்கு என்றாகி விட்டது, இதிலும் சீனா மிகப்பெரிய ஆதாரமாக உருவெடுத்துள்ளது.
யுக்ரேன் போரின் முடிவைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் ஆழமடைந்துள்ளன.
ஷீ மற்றும் புதின் இருவரும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவர்களின் ஆசியக் கூட்டாளிகளின் மீது தங்கள் பொருளாதாரம் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் முதலீடு செய்துகொள்கிறார்கள்.”
ராணுவக் கூட்டாண்மை
சமீபத்தில் அமெரிக்காவின் கடற்படைப் போர்க் கல்லூரி மதிப்பாய்வில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.
ரஷ்யா மற்றும் சீனா இடையே ராணுவ ஒத்துழைப்பும் பெரிய அளவில் அதிகரித்து வருவதாக அது தெரிவிக்கிறது.
ரஷ்ய துறைமுகத்தில் இருக்கும் அதன் போர்க்கப்பல்கள் வரை சீனா அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர கடலுக்குள் போர் செய்வது தொடர்பான தொழில்நுட்பத்தையும் ரஷ்யா சீனாவுக்கு வழங்க முடியும். இருவரது ஒத்துழைப்பும் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரிக்கலாம் என்று இந்த மதிப்பாய்வில் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நட்பு சமமானவர்களின் நட்பு அல்ல என்பது பலரின் கருத்து. இவ்வாறான நிலையில் ரஷ்யா சீனாவைச் சார்ந்து இருப்பது எந்த வகையிலும் சரியல்ல.
யுக்ரேனுடனான போர் இழுபறியாக நடந்து வரும் விதம், ரஷ்யாவின் வல்லரசு அந்தஸ்து ஆட்டம் கண்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்குலகம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்திய விதத்தில், சீனாவை நெருங்குவதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை.
ரஷ்யாவிடம் இருந்து சீனா குறைந்த விலையில் எண்ணெய் பெறுகிறது. ரஷ்யாவிற்கு டாலர்களில் வணிகம் செய்வது கடினமாகிவிட்டது.
இத்தகைய சூழ்நிலையில், சீன நாணயமான யுவானில் ரஷ்ய வர்த்தகம் அதிகரித்து வருகிறது. டாலர் சாம்ராஜ்யத்தை வலுவிழக்கச் செய்வதும் அதன் நாணயத்தின் பரவலை அதிகரிப்பதும் நீண்ட காலமாக சீனாவின் திட்டமாக இருந்து வருகிறது.
ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவால் சீனா பயனடைகிறது என்று அலெக்சாண்டர் காபூவ் தி அட்லாண்டிக்கிடம் கூறியுள்ளார்.
கார்னகி மாஸ்கோ மதியுரையகத்தின் இயக்குநர் டிமிட்ரி ட்ரெனின், தி டிப்ளமேட்டுக்கு அளித்த பேட்டியில், “மேம்பட்ட இராணுவ தொழில்நுட்பத்தில் சீனாவை விட ரஷ்யா முன்னணியில் உள்ளது.
மறுபுறம், சீனா பொருளாதார சக்தியின் முன்னணியில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு, உயர்மட்டத் தலைமையின் கீழ் ஒருவருக்கொருவர் போதுமான நம்பிக்கை உள்ளது.” என்று கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு அதிகரிக்கும் அபாயம்
சீனா மற்றும் ரஷ்யாவின் நெருக்கம் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்? டிமிட்ரி ட்ரெனின் அதே நேர்காணலில், “ரஷ்யாவைப் பொருத்தவரை, சீனாவைப் போலவே இந்தியாவும் கொள்கையளவில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாகும்.
ஆனால் ரஷ்யா மற்றும் இந்தியாவின் வர்த்தகம் சீன- ரஷ்ய வர்த்தகத்தில் பத்தில் ஒரு பங்கு தான். இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கி வருகிறது, ரஷ்யாவுக்கு இது ஒரு பிரச்சினையாக மாறிவிடக் கூடாது. இந்தியா தனது வெளிநாட்டு உறவுகளை எந்த ஒரு நாட்டுடனும் மட்டுப்படுத்த விரும்பவில்லை.”
“ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்து வருகிறது.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவில் இரண்டு பிரச்சனைகள் உள்ளன. முதலாவதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் போதுமான நம்பிக்கை இருந்தாலும், அரசு மட்டத்தில் ஒத்துழைப்பு அதிகமாக உள்ளது.
இது தனியார் துறையில் விரிவுபடுத்தப்படாவிட்டால், இந்த உறவு மிகவும் பரவலாக இருக்காது.
இப்போது இந்தியப் பொருளாதாரத்தின் மீது தனியார் துறையின் கட்டுப்பாட்டைப் போல் அரசிடம் இல்லை.
அத்தகைய சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அதிகாரப்பூர்வ வரம்பிற்கு வெளியே வர வேண்டும்.
இரண்டாவது பிரச்சனை, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் ரஷ்யாவின் நெருங்கிய பங்காளிகள் ஆனால் ரஷ்யா மத்தியஸ்தம் செய்யும் நிலையில் இல்லை.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஏப்ரல் 2022 முதல் 27 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, ஆனால் அது முற்றிலும் ஒரு தரப்பானது. இந்த உண்மையை ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பவன் கபூரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த மாதம் கடைசி வாரத்தில், பவன் கபூர், ரஷ்யா-இந்தியா வர்த்தக உரையாடல் மன்றத்தில், 27 பில்லியன் டாலர்களில், இந்தியாவின் ஏற்றுமதி 2 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்று கூறியிருந்தார்.
2021-22 நிதியாண்டில், இந்தியா மற்றும் ரஷ்யாவின் இருதரப்பு வர்த்தகம் 13 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியாவின் எண்ணெய் மற்றும் உர இறக்குமதிகள் 13 பில்லியனில் இருந்து 27 பில்லியன் டாலர்கள் வரை மிகப்பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது, அதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மலிவாக எண்ணெய் பெறத் தொடங்கியது.
மனோகர் பரிக்கர் இன்ஸ்டிடியூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸின் ஐரோப்பா மற்றும் யூரேசியா மையத்தின் அசோசியேட் ஃபெலோ டாக்டர் ஸ்வஸ்தி ராவ், “ரஷ்யா, யுக்ரேன் போரில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அது பலவீனமடையும் என்பது உறுதி.
ரஷ்யா எவ்வளவு பரந்து விரிந்திருக்கிறதோ, எவ்வளவு இயற்கை வளங்கள் இருக்கிறதோ, அந்த நாட்டின் ஆட்சியும் உண்மைக்கு முற்றிலும் புறம்பாக இருக்கும் ஒருவரின் கையில்தான் இருக்கிறது.
புதின் யுக்ரேனைப் புண்ணாக்கிவிட்டார், இதை சீனா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து எரிசக்தி இறக்குமதியை கிட்டத்தட்ட குறைத்துவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், நிர்ப்பந்தத்தின் பேரில் புதின், சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு மலிவாக எண்ணெய் விற்கிறார்.”
“புதினின் இந்த நிர்பந்தம் வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும். ரஷ்யா எப்போதும் சீனாவின் இளைய பங்காளியாக இருந்து வருகிறது.
யுக்ரேன் போருக்குப் பிறகு, சீனா வலுக்கட்டாயமாக எண்ணெய் பெறும் நிலையில் ரஷ்யா வந்துவிடும். அதாவது புதின் தனது எண்ணெயைப் பாதி விலைக்கு சீனாவுக்கு கொடுப்பார்.
ரஷ்யா பொருளாதாரத்தில் நலிவடைந்து வருகிறது. ஆற்றல் உள்ளது ஆனால் வணிகத்திற்கான உள்கட்டமைப்பு இல்லை.
சீனாவும் தனது தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் ஏற்றுமதி தொடரும் வரை மட்டுமே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பெறும்.
ஆனால், யுக்ரேன் நெருக்கடியால் உருவாகி வரும் சூழ்நிலையில் இருந்து, சீனா உடனடி சாதகமாக இருந்தாலும், நீண்டகாலத்தில் நஷ்டத்தை சந்திக்கப் போகிறது என்றே தோன்றுகிறது.
அமெரிக்காவுடனான சீனாவின் இருதரப்பு வர்த்தகம் 500 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகும். சீனாவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தான், ரஷ்யா அல்ல.
சீனா ஒரு பெரும் பொருளாதார சக்தியாக மாற விரும்பினால், அது ரஷ்யாவை நம்பியிருக்க முடியாது, மாறாக அது தனது பொருட்களை மேற்கு நாடுகளுக்கு விற்க வேண்டும்.”
“யுக்ரேன் நெருக்கடியால் ரஷ்யாவின் பலவீனம் மற்றும் சீனாவின் மீதான தனது சார்பு ஆகியவை இந்தியாவுக்கு ஆபத்தான சூழ்நிலையாக இருக்கலாம்.
இந்தியாவின் மூலோபாய சுயாட்சியில் ரஷ்யா வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். சீனாவுடன் நெருக்கடி அதிகரிக்கும் போதெல்லாம், ரஷ்யா மூலம் இந்தியா அதைச் சமாளித்து வந்தது.
இந்த விஷயத்தில், ரஷ்யாவை விட இந்தியாவுக்கு நம்பகமான துணை யாரும் இல்லை. சீனாவை நம்பியிருக்கும் ரஷ்யாவின் நிலை அதிகரித்தால், அதனால், இந்தியாவின் நலன்களைக் கவனிக்க முடியாது.
மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் இந்தியாவின் நலன்களுக்கு ரஷ்யா மிக முக்கியமான நாடு.
பலவீனமான ரஷ்யாவால் இங்கு இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க முடியாது. இனிவரும் காலம் மிகவும் சிக்கலானதாக இருக்கும். ரஷ்யா பலவீனமாகும்போது இந்தியா என்ன செய்யும் அல்லது ரஷ்யாவை எப்படிச் சமாளிக்கும் என்பதற்கு இப்போதே பதில் சொல்வது கடினம்.”
“ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துள்ள வர்த்தகத்தின் மிகப்பெரிய பகுதியாக எண்ணெய் உள்ளது.
ஆனால் வணிகம் என்பது எண்ணெய்க்கு மட்டும் அல்ல. இந்த வர்த்தகம் மாறிய சூழ்நிலைகளின் விளைவாகும், நிரந்தரமானது அல்ல.
ரஷ்யாவை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது சீனாவுக்குத் தெரியும். ரஷ்யா பலவீனமாக இருந்தால், சீனாவுடனான அதன் பழைய போட்டியும் அதிகரிக்கும்.” என்பது ஸ்வஸ்தியின் கருத்து.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மத்திய-ஆசியா மற்றும் ரஷ்ய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் ராஜன் குமார், “ சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் பலவீனமான ரஷ்யா இந்தியாவுக்கு மிகவும் பாதகத்தை ஏற்படுத்தும்.
இதன் பொருள், சீனா சொல்வதை எல்லாம் ரஷ்யா ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும், மேலும் பாகிஸ்தானை ஒத்துழைக்குமாறும் கேட்கலாம்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா எந்த வர்த்தகம் செய்தாலும் அது மத்திய ஆசியா மற்றும் ஈரான் வழியாகத்தான். ரஷ்யா வலுவாக இருக்கும் வரை மட்டுமே மத்திய ஆசியாவில் இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும்.
சர்வதேச அரங்கில் கூட இந்தியாவின் நலன்களை ரஷ்யா பாதுகாத்து வருகிறது. ரஷ்யாவின் பலவீனம் BRICS, SCO, G-20 மற்றும் UNSC ஆகியவற்றில் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை ரஷ்யா வெளிப்படையாக ஆதரிக்கிறது, ஆனால் சீனாவின் கட்டுப்பாட்டில் ரஷ்யா வந்தால் இது நடக்காது.”
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, மேற்குலகின் ஆதிக்கத்தில் உள்ள உலக ஒழுங்கு ஆபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தைவானை வலுக்கட்டாயமாக இணைக்க சீனா முயற்சித்தால், தைவானுடன் அமெரிக்கா நிற்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவைத் தனது போட்டியாளர் என்று அழைக்கிறது. சீனாவை அச்சுறுத்தலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற விவாதமும் பிரிட்டனில் நிலவி வருகிறது.
இனிவரும் காலங்களில், உலக அரசியலின் படி இது மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தச் சிக்கலில் இருந்து இந்தியா மீள்வது எளிதானது அல்ல.