♠9 மாதங்கள் கழித்து சிறுவனின் பெற்றோர் டாக்டரை பார்க்க வந்துள்ளனர். ♠பெற்றோரிடம் மகன் எப்படி இருக்கிறான் என்று டாக்டர் விசாரித்து இருக்கிறார்.

அம்மா… நான் சீக்கிரமே செத்துவிடுவேன். ஆனால் நான் உயிரோடு இருக்கும் வரை நீ வேதனைப்பட கூடாது. உன் கண்ணில் நான் கண்ணீரை பார்க்க கூடாது என்று 6 வயது மகன் தன் வேதனையை தனக்குள் அடக்கி கொண்டும், மகனே உன்னை என் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க என்ன தவம் செய்தேனோ…?

எங்கள் முகத்தில் சிரிப்பை பார்க்க நீ மனதுக்குள் அழுகிறாயே…! என்று ஒரே வீட்டுக்குள் ஒருவருக்கொருவர் எதையும் வெளிக்காட்டாமல் தவித்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாத 6 வயது மகனை அழைத்து கொண்டு பெற்றோர் சென்றனர்.

அந்த சிறுவனை பரிசோதித்த டாக்டர் சுதிர் அவனுக்கு வந்திருப்பது உயிர் கொல்லி நோயான புற்றுநோய்.

அதுவும் 4-வது நிலையில் இருக்கிறது. ஆபத்தான கட்டத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார்.

பெற்றோரிடம் விஷயத்தை சொல்லி மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அறுவை சிகிச்சை அவசியம் என்பதை தெரிவித்துள்ளார்.

எப்படியாவது மகனை காப்பாற்ற வேண்டும் என்று தவித்த அந்த பெற்றோர் ஆபரேஷனுக்கு சம்மதித்தனர்.

இதற்கிடையில் தனக்கு வந்திருப்பது புற்றுநோய். நான் நீண்ட நாள் உயிர் வாழ முடியாது என்பதை ஐ-பேட் மூலம் தேடுபொறியில் தேடி அறிந்து இருக்கிறான் சிறுவன்.

மரணம் தன்னை துரத்துகிறது என்பதை அறிந்தும் அந்த பாசக்கார சிறுவனின் இதயம் பெற்றோரை நினைத்து தவித்து இருக்கிறது.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நம் மீது எவ்வளவு பாசம்? நாம் செத்துப்போவது தெரிந்தால் அவர்கள் அழுவார்களே… மிகவும் வேதனைப்படுவார்களே..

. அம்மா உங்களுக்கு பிள்ளையாக பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் உங்களோடு வாழத்தான் எனக்கு கொடுத்து வைக்கவில்லை என்று மனதுக்குள் வேதனைப்பட்டுள்ளான்.

ஆஸ்பத்திரிக்கு சென்ற நாளில் இருந்து அடிக்கடி தாயின் முகத்தை ஒருவிதமான ஏக்கத்தோடு பார்த்து இருக்கிறான்.

அதைப்பார்த்த தாய் ‘ஏண்டா அப்படி பார்க்கிறாய்? உனக்கு ஒன்றுமில்லை. சீக்கிரம் குணமாகிவிடும்’ என்று ஆறுதல்படுத்தி வந்துள்ளார்.

ஆறாத் துயரத்தோடு அம்மா நீ என்னை ஆறுதல்படுத்துகிறாய் என்பது எனக்கு தெரியும் என்று அந்த சிறுவனும் பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டு மனதுக்குள் தவித்து இருக்கிறான்.

அதேநேரம் மகனுக்கு ஏதேனும் பயம் வந்துவிடக் கூடாது என்பதற்காக பெற்றோரும் கண்ணீரை உள்ளத்தில் அடக்கி உதட்டு சிரிப்போடு மகனிடம் நடந்து கொண்டனர்.

குறிப்பிட்ட நாள் ஆபரேஷன் முடிந்தது. கீமோதெரபியும் கொடுக்கப்பட்டது. உடல்நிலை சீராகி டிஸ்சார்ஜ் ஆகும்போது சக்கர நாற்காலியில் டாக்டரை பார்க்க அழைத்து சென்றுள்ளார்கள். பெற்றோரும் உடன் சென்று இருக்கிறார்கள்.

மருத்துவரும் ‘சிறுவனிடம், இனி உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை’ என்று தைரியம் ஊட்டியிருக்கிறார்.

டாக்டரிடம் ஆலோசனை கேட்டு திரும்பிய போது அந்த சிறுவன் ‘அம்மா நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள். நான் டாக்டரிடம் தனியாக பேச வேண்டும்’ என்று கூறியிருக்கிறான்.

அதை கேட்டதும் பெற்றோர் வெளியே சென்றுவிட்டனர். பின்னர் அந்த சிறுவன் டாக்டரிடம், ‘டாக்டர் எனக்கு வந்திருப்பது கேன்சர். நான் வாழப்போவது இன்னும் சில மாதங்கள் தான். எல்லா விபரங்களையும் ஐ-பேட் வழியாக படித்து தெரிந்து கொண்டேன்.

இப்போது உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் டாக்டர். எனக்கு புற்றுநோய். நான் சீக்கிரம் செத்துவிடுவேன் என்ற விபரத்தை என் பெற்றோரிடம் சொல்லி விடாதீர்கள்.

அவர்களுக்கு என்மீது ரொம்ப பாசம். உண்மையை அறிந்தால் அவர்களால் தாங்க முடியாது டாக்டர்.

பிளீஸ் டாக்டர் என்று கெஞ்சி இருக்கிறான். அவனை கைகுலுக்கி அனுப்பிய டாக்டரும் சில நிமிடங்கள் தவித்து போயிருக்கிறார்.

அந்த சிறுவனின் மனநிலையை அறிந்து டாக்டராலும் தாங்க முடியவில்லை. பெற்றோரை அழைத்து எல்லா விசயங்களையும் அவர்களிடம் தெரிவித்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

9 மாதங்கள் கழித்து அந்த சிறுவனின் பெற்றோர் டாக்டரை பார்க்க வந்துள்ளனர். அவர்களிடம் மகன் எப்படி இருக்கிறான் என்று விசாரித்து இருக்கிறார். ‘அவன் இல்லை டாக்டர்! டிஸ்னிலேன்ட் பார்க்க ஆசைப்பட்டான் அங்கும் அழைத்து சென்றோம்.

8 மாதங்கள் நன்றாக இருந்தான். அதன்பிறகு திடீரென்று இறந்துவிட்டான் என்று விபரத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

சில விநாடிகள் நிசப்தத்துக்கு பிறகு அந்த பெற்றோர் டாக்டரிடம் ‘உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தோம் டாக்டர்.

எங்கள் பிள்ளையை கூடுதலாக 8 மாதங்கள் எங்களோடு வாழ வைத்துள்ளீர்கள்’ என்று கண்ணீர் மல்க நன்றி கூறியிருக்கிறார்கள்.

 

Share.
Leave A Reply