தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என்ற பெயர் பெற்றவர் கே பாக்யராஜ். பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். சினிமாவில் ஏராளமான காதல் கதைகளை ரசிகர்களுக்கு விருந்து படைத்த பாக்யராஜ், அவரது முதல் காதலை இன்னும் மறக்க முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

69வது வயதில்
கே பாக்யராஜ் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து சினிமாவில் முகம் காட்டியவர் கே பாக்யராஜ். 16 வயதினிலே படத்தில் சிறு காட்சியில் நடித்திருந்த கே பாக்யராஜ், திரைக்கதை எழுதுவதில் பலே கில்லாடி.

இவரின் திரைக்கதையும் ரசிகர்களுக்கு திரையில் கதை சொல்லும் உத்தியும், தமிழில் இதுவரை வேறு எந்த இயக்குநரும் செய்திடாத சாதனை எனலாம். கதை ஆசிரியர், திரைக்கதை வித்தகர், வசனகர்த்தா, இயக்குர், நடிகர் என அனைத்து துறையிலும் பல மாயாஜாலங்கள் செய்தவர்.

சுமார் 45 ஆண்டு காலம் திரையுலகில் தொடர்ந்து இயக்கிவரும் கே பாக்யராஜ், இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கே பாக்யராஜின் முதல் காதல்
சுவரில்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, பவுனு பவுனுதான், ராசுக்குட்டி, வீட்ல விசேஷங்க என கே பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள் மெஹா ஹிட் அடித்துள்ளன.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தியிலும் படங்களை இயக்கியுள்ளார். தற்போது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கே பாக்யராஜின் முதல் காதல் குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

நினைவில் நிற்கும் மோதிரம்
16 வயதினிலே படத்தில் பணிபுரியும் போதே நடிகை பிரவீனாவுடன் கே பாக்யராஜுக்கு நட்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

கமலின் மன்மத லீலை படத்தில் அறிமுகமான பிரவீனா, ரஜினியின் பில்லா உட்பட மேலும் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில், கே பாக்யராஜ், பிரவீனா இருவரும் நண்பர்களாக இருந்து 1981ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட திரை பிரபலங்களின் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

ஆனால், எதிர்பாராதவிதமாக திருமணம் நடந்த இரண்டே ஆண்டுகளில் பிரவீனா மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

உடைந்துபோன பாக்யராஜ்
இதனால் உடைந்துபோன பாக்யராஜ், அதன் பின்னர் முதல் காதலில் இருந்து மீண்டு வந்து நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் பிரவீனாவை மறக்க முடியாத கே பாக்யராஜ், அவர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை இன்றும் தனது விரலில் அணிந்துள்ளாராம்.

அந்த மோதிரத்தை பாக்யராஜ் இதுவரை எந்த காரணம் கொண்டும் கழட்டியதே இல்லையாம்.

அதுமட்டும் இல்லாமல் அவரது அலுவலகத்தில் பிரவீனாவின் புகைப்படத்தையும் வைத்து இன்றுவரை பாதுகாத்து வருகிறாராம். முதல் காதல், முதல் மனைவியின் நினைவாக 40 ஆண்டுகளாக அதே மோதிரத்துடன் பாக்யராஜ் வலம் வருவது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share.
Leave A Reply