(இராஜதுரை ஹஷான்)
24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் மின்சார சபைக்கு வழங்க வேண்டும்.
நிதி திரட்டலில் பாரிய நெருக்கடி காணப்படுகிறது. நிலக்கரி இறக்குமதிக்கு நிதியில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மின்கட்டமைப்பு சேவையை வினைத்திநனாக பேணுவதற்கும், 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை வழங்கும் வகையில் 20 கொள்கை திட்டங்களை மின்சாரத்துறை அமைச்சிடம் முன்வைத்தோம்.
அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் காலத்திலும்,வறட்சியான காலத்திலும் மின்னுற்பத்தியை தடையின்றி முன்னெடுத்தல், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டங்கள் என 20 திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.
இந்த 20 திட்டங்களை செயற்படுத்த வேண்டுமாயின் அதற்கான வளத்தை உரிய தரப்பினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நிலக்கரி கொள்வனவிற்கான நிதியை திரட்டிக் கொள்வது பாரிய நெருக்கடியாக உள்ளது.பணம் செலுத்தி 21 கப்பல்களில் இருந்து நிலக்கரியையும், கடன் பற்று பத்திரரம் ஊடாக 12 கப்பல்களில் இருந்து நிலக்கரியையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் அந்த கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத காரணத்தினால் நிலக்கரியை தரையிறக்க முடியாத நிலை காணப்படுகிறது.
மின்னுற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்ய ஒரு சதம் கூட இனி வழங்க முடியாது என அரசாங்கம் கடந்த முதலாம் திகதி தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்கு தேவையான மூல பொருட்களை இறக்குமதி செய்ய நிதியை திரட்டிக் கொள்வது சிரமமாக உள்ளது.
24 மணித்தியாலமும் தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் உரிய தரப்பினர் அதற்கான வளத்தை வழங்க வேண்டும்.இல்லாவிடின் எதிர்வரும் நாட்களில் பாரிய நெருக்கடி ஏற்படும் என்றார்.