நெருக்கடியான பொருளாதார காலகட்டத்தில் 2023 ஆம் வருடத்தில் எவ்வாறான நிலைமைகளை இலங்கையில் ஏற்படுத்தப்போகின்றன என்பது சகலருக்கும் முக்கியமான விடயமாக இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது? எவ்வாறான பொருளாதார நிலைமை ஏற்பட போகிறது ? போன்ற பல விடயங்கள் தற்போது பேசுபொருளாக இருக்கின்றன. மிக முக்கியமாக மக்களினால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அதாவது டொலர்கள் நாட்டுக்குள் வருமா? ரூபாவின் பெறுமதி உயர்வடையுமா? சுற்றுலாத் துறையின் ஊடான டொலர் வருகையை அதிகரிக்குமா? மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அதிக அளவு அந்நிய செலாவணியை இலங்கைக்கு அனுப்புவார்களா ? வங்கிகளின் வட்டி வீதம் குறைவடையுமா ? பணவீக்கம் குறைவடையுமா? சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனுதவி இந்த வருடம் ஆரம்பப்பகுதியில் கிடைக்குமா? சீனா கடன் சீரமைப்புக்கு இணங்குமா? பொருட்களின் விலைகள் குறைவடையுமா? போன்ற பொருளாதார ரீதியான பல்வேறு கேள்விகளை மக்கள் தொடர்ச்சியாக எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
பதில் கிடைக்குமா?
2023 ஆம் ஆண்டில் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்பது மிக முக்கியமானதாகவே இருக்கின்றது. அந்த பதில்கள் சாதகமாக அமையுமா என்பது அலசி ஆராயப்பட்டு கொண்டிருக்கின்றது. மக்கள் தமது பொருளாதார ரீதியான முடிவுகளை எடுப்பதற்கு இந்த கேள்விகளுக்கான பதில்கள் மிக முக்கியமாக அமைகின்றன.
எனவே அதுதொடர்பான ஒரு ஆய்வு ரீதியான அணுகுமுறை நோக்கு இங்கு அவசியமாகிறது. ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டில் மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துவிட்டனர். பல துறைகளும் கடந்த வருடம் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்புகளினால் ஏற்பட்ட மக்கள் போராட்டங்களின் காரணமாக ஆட்சி மாற்றம் கூட நாட்டில் ஏற்பட்டது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் மக்கள் பொருளாதாரத்தில் மூச்சு விடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது மிக முக்கியமான கேள்வியாக இருக்கின்றது.
மாறாக தொடர்ந்தும் நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டிவருமா? நெருக்கடிகளை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டி வருமா? அந்த மக்கள் பொருளாதார ரீதியாக சுமையை மேலும் சுமக்க வேண்டுமா என்ற விடயங்களும் இங்கே மிக முக்கியமானதாக இருக்கின்றன.
அரசாங்கம் எவ்வாறு இந்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்க போகிறது என்பது மிக தீர்க்கமானதாகும். அதாவது அரசாங்கம் மக்கள் பொருளாதார ரீதியில் மூச்சு விடுவதற்கான சூழலை உருவாக்குமா? என்ற கேள்வியை பலரும் கேட்கின்றனர்.
கடினமான பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக இந்த விடயங்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார். கடினமான காலத்தை கடந்து வந்து கொண்டிருக்கின்றோம், இந்த வருடத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றார்.
இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து உடனடியாக வெளியே வர முடியாது. இலங்கையின் பொருளாதாரம் படுகுழியில் விழுந்திருக்கின்றது. அதனை மீட்டெடுப்பது என்பது இலகுவான விடயமல்ல. கடுமையான நெருக்கடிகளையும் தியாகங்களையும் செய்தே பொருளாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டியிருக்கின்றது. பாதையிலிருந்து வாகனம் பள்ளத்தில் சரிந்து விட்டது.
அது தரையில் படாமல் தற்போது தடுக்கப்பட்டிருக்கிறது. அதனை மேலே கொண்டு வருவதே தற்போது காணப்படுகின்ற மிக முக்கியமான ஒரு சவாலாகும். அது இலகுவான விடயமல்ல. ஆசியாவிலேயே முதன்முறையாக வங்குரோத்து நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இலங்கையின் சுதந்திர வரலாற்றில் எப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியை 2022ஆம் ஆண்டு இலங்கை சந்தித்தது.
அதாவது எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு 10 மில்லியன் டொலர்களை ஏற்பாடு செய்வதே இலங்கையினால் முடியாத காரியமாக மாறி இருந்தது.
2023 இல் என்ன நடக்கும்?
இனி இந்த வருடத்தில் பொருளாதார ரீதியில் எவ்வாறான விடயங்கள் இடம்பெறலாம் என்பதனை ஆய்வு ரீதியாக பார்க்கலாம்.
2023 ஆம் ஆண்டில் அதாவது இந்த வருடத்தில் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எப்போதும் இல்லாதவாறு வட்டி வீதங்கள் இலங்கையில் கடந்தவருடம் அதிகரித்தன. இதனையடுத்து வங்கி கட்டமைப்பில் வட்டி வீதங்கள் கடுமையாக அதிகரித்தன.
குறிப்பாக திறைசேரி வெளியிடுகின்ற பிணைமுறிகளுக்கான வட்டி 30 வீதத்தை தாண்டி பதிவாகியது.
அதேப்போன்று பொதுமக்கள் வங்கிகளில் பெறுகின்ற கடன்களுக்கான வட்டி வீதமும் அதிகரித்தது. இதனால் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடன் தவணை பணம் அதிகரித்ததன் காரணமாக நெருக்கடிகளை எதிர் கொண்டனர். எனவே இவ்வருடம் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் அதிகரித்திருக்கின்ற பணவீக்க வேகத்தை கட்டுப்படுத்தவே வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது பணவீக்கம் தொடர்ச்சியாக குறைவடைந்துவருகின்றது. அதனால் வட்டி வீதங்கள் நிச்சயமாக இவ்வருடம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வட்டி வீதங்கள் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியும் அண்மையில் அறிவித்திருக்கிறது.
தற்போது உள்நாட்டில் அரசாங்கம் பெற்றுக் கொள்கின்ற கடன்களுக்கான வட்டி வீதம் அதிகமாக காணப்படுகின்றது. அது இலங்கைக்கு ஆரோக்கியமானதாக அமையாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் உள்நாட்டு கடன் செயற்பாடுகள் ஸ்திரமானதாக அமையவேண்டும். திறைசேரி பெறுகின்ற கடன்களுக்கான வட்டி வீதங்கள் குறைய வேண்டும்.
ஐ.எம்.எப். தாமதம்?
அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை இந்த வருடத்தில் எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஜனவரி மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடனுதவி தற்போது மார்ச் மாதம் அளவிலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் இந்த கடனை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே கடன் வழங்கியவர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்.
அந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு கடன் வழங்கிய பல்வேறு நாடுகளும் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. இந்தியா ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்து இருக்கின்றன.
ஆனால் இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள சீனா இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு இன்னும் முழுமையான இணக்கத்தை தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடு தாமதமடைந்து வருகின்றது. இல்லாவிடின் இந்த கடனை இதற்கு முன்னரே பெற்றிருக்க முடியும்.
ஆனால் தொடர்ந்து இலங்கை பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவாக கடன் மறுசீரமைப்பு செய்து சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீண்ட கால திட்டத்துக்குள் இலங்கை வந்தவுடன்அதிக கடன்களை சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு கடன்களை பெற ஆரம்பித்ததும் இலங்கையின் நெருக்கடியிலிருந்து மீண்டு வர முடியும்.
மேலும் நம்பிக்கை தரும் வகையில் சுற்றுலாத்துறை தற்போது முன்னேற்றம் அடைந்து வருகின்றது.
சுற்றுலாத்துறை ஊடாக கடந்த 2022ஆம் ஆண்டில் இலங்கைக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கின்றனர்.
எனவே இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை வருமானமாக 4.4 பில்லியன் டொலர்கள் கிடைத்தன.
இதனை 6 பில்லியன்களை கடந்து அதிகரித்துக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இவ்வருடத்தில் இந்த வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் சரியான முறையில் இலங்கைக்கு டொலர்களை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் எடுத்துள்ளது. எனவே இந்த அந்நிய செலாவணி வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஏற்றுமதி வருமானத்தை பொறுத்தவரையில் இலங்கை வருடம் ஒன்றுக்கு 12 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்கின்றது.
10 முதல் 12 பில்லியன் டொலர்கள் கிடைப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அது போதுமானது அல்ல.
காரணம் இலங்கையின் இறக்குமதியானது 22 பில்லியன்களாக காணப்படுகின்றது. எனவே ஏற்றுமதி வருமானம் கிட்டத்தட்ட 15 பில்லியன் டொலர்களை நெருங்கவேண்டும். இவ்வருடத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சவாலான கட்டம்?
மிகவும் சவாலான நெருக்கடியான கால பகுதியை கடந்துகொண்டிருக்கின்றோம். முற்கள் மீதான ஒரு பயணத்தையே மேற்கொள்ளவேண்டியுள்ளது.
எனவே இந்த விடயத்தில் சகலருக்கும் ஒரு பொறுப்பு காணப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் சட்ட ரீதியாக தமது அந்நிய செலாவணியை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு ஒரு குறிப்பிடத்தக்க அளவில் தீர்வு காண முடியும்.
எப்படியும் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு உரியவாறான முகாமைத்துவம் அவசியமாகின்றது.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதன் ஊடாகவே மீண்டு வரலாம்.
2023ஆம் ஆண்டு சவால்மிக்க ஆண்டாக இருந்தாலும் கூட பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையும் காணப்படுகிறது.
இதற்கு முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெற்றுக் கொண்டு ஏனைய சர்வதேச கடன்களைப் பெற்றுக் கொள்வதற்குமான ஒரு சூழல் உருவாக வேண்டும். கடன் பெற்று முன்னேற முடியாது. ஆனால் தற்போதைய சூழலில் எமக்கு வேறு வழியில்லை.
மேலும் நாட்டில் பணவீக்கம் குறைந்து மக்களின் பொருளாதார சுமையை தளர்த்தப்பட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மூச்சு விடுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். என்ன நடக்கும் என்பதனை மக்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
-ரொபட் அன்டனி-