நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வாரியப்பொல -வெலவ பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது உயிரிழந்தவர் 33 வயதுடைய ரம்புக்கன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
உயிரிழந்தவரின் உறவினர் ஒருவருடைய மகனை தாக்கியமை தொடர்பில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இந்நிலையில் குறித்த மோதலின் போது பெண் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தள்ளதுடன் அவர்கள் அனைவரும் நிகவெரட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் வாரியப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சர்பன்டையின் தொடர் மாடி குடியிருப்பின் 3 ஆவது மாடியில் உள்ள வீடொன்றில் கணவன் மூலம் மனைவி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய சர்பக்டையின் தொடர்மாடி குடியிருப்பை சேர்ந்தவராவார்.
இந்நிலையில் கணவர் குறித்த தொடர் மாடி குடியிருப்பின் 3 ஆம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார்.
இதன் போது பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை பொரளை – சிரிசர உயன தொடர்மாடி குடியிருப்பில் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காயமடைந்த நபர் 43 வயதுடைய சிரிசர உயன தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த நபராவார்.
சம்பவம் தொடர்பில் 59 வயதுடைய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.