ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே வைப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரமாக செயற்படுகின்றமையினாலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தலை குறுகிய காலத்துக்கு மீண்டும் ஒத்திவைப்பதற்கான முயற்சிகளை ஆளுந்தரப்பு எடுத்துள்ளது.

அவ்வாறு முன்கூட்டி வைக்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை களமிறக்குவதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் நவம்பர் இறுதி வாரத்தில் அல்லது டிசம்பர் மாதம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான இயலுமை குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பல்வேறு அறிவிப்புகள் விடுத்துள்ளதுடன் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதில் பல்வேறு சவால்கள் உள்ளதெனவும் தற்போது தேர்தலொன்றுக்கு சென்றால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என்றும் ஆளுங்கட்சி கூறிவருகிறது.

அரசாங்கத்தின் முழு முயற்சியும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கான செயற்பாடுகளாகவே உள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பொன்று வெளிவரவுள்ளது.

ஆனால், உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கான அரசாங்கத்தின் பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் காணப்படுவதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் அரசியலமைப்பு ரீதியில் ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடாத்துவதற்கான அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு கிடைக்கிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி டிசம்பர் இறுதியில் அல்லது அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்தின் உயர் மட்டம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கான அரசியல் செயற்பாடுகளை ஐக்கிய தேசிய கட்சி மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட பல பிரதான கட்சிகளுடன் இவ்வாரத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது. ஏற்கனவே பிரதான கட்சிகள் பல முன்கூட்டி வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்றும் அதற்கான வாய்ப்பை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இதற்கான பேச்சுவார்த்தைகள் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. மறுபுறம் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, இதில் பிரதான இலக்கை மையப்படுத்தி அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது.

பொது வேட்பாளர் திட்டத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள கட்சிகளது கோரிக்கைகளின் பிரகாரம், பொதுவான புதிய சின்னம் மற்றும் புதிய அரசியல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகளை ஐ.தே.க முன்னெடுத்து வருகிறது.

இதனடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் கட்சிகள், சுயாதீன குழுக்கள் உட்பட வெளியிலிருந்து ஆதரவு வழங்கும் தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

ஆளும் பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலில் பொதுவான புதிய சின்னம் மற்றும் புதிய அரசியல் கூட்டணி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலானது உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையப்படுத்தியதாக இருந்த போதிலும், அந்த தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான முழு முயற்சிகளையும் கலந்துரையாடலில் ஈடுபட்ட இரு தரப்புமே முன்னெடுத்து வருகிறது.

எனவே, வருட இறுதிக்குள் முன்கூட்டிய ஜனாதிபதி தேர்தலுக்கான முயற்சியில் அரசாங்கத்தின் உயர் மட்டம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply