இரண்டு தசாப்த தமிழர் அரசியலில் தலைமைத்துவம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மௌனமாக்கப்படவுள்ளது.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஒரு கொடிய போரின் முடிவில், ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தனர்.

அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, பங்காளிக் கட்சிகள், நீண்ட முரண்பாடுகளை அடுத்து, இப்போது மௌனிக்கச் செய்யும் முடிவை எடுத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகள் தமக்குப் பின்னர், தமிழரின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைமைத்துவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் விட்டுச் சென்றனர்.

அதற்கான தலைமையை இரா.சம்பந்தன் பொறுப்பெடுத்திருந்தார். அவரது காலத்துக்குப் பின்னர் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகப் போகிறது என்ற கவலை தமிழர் தரப்பிலுள்ள பலரிடம் காணப்பட்டது.

ஆனால் இப்போது, அவர் வாழும் காலத்திலேயே, கூட்டமைப்பை செயலிழக்கச் செய்யும் முடிவு எடுக்கப்பட்டிருப்பது தான் அவரது துரதிஷ்டம்.

அவர் நினைத்தாலும் கூட அதனைத் தடுக்க முடியாதவராக இருப்பது அதைவிடப் பெரிய துரதிஷ்டம்.

2001 பொதுத்தேர்தலின் போது உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலும், 2004இல் இருந்து தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்திலும் – இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல் தவிர்ந்த மற்றெல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக – தேர்தல் ஒன்றில் அதன் கூட்டுச் செயற்பாடு இல்லாமல் ஆக்கப்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

2001இல் தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ். என நான்கு கட்சிகளின் கூட்டணியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆனால், 2004 பொதுத்தேர்தலுக்கு முன்னரே, விடுதலைப் புலிகளுடன் ஆனந்தசங்கரி முரண்படத் தொடங்கினார்.

இதனால் அவரை ஒதுக்கி விட்டு, 2004 பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை விடுதலைப் புலிகள் வகுத்தனர்.

ஆனாலும் ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராக இருந்ததால், அவரது கையெழுத்தில்லாமல் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

அவருடன் விடுதலைப் புலிகள் பேச்சு நடத்திய போதும், கடைசிவரையில் உதயசூரியன் சின்னத்தை விட்டுக்கொடுக்க மறுத்த ஆனந்தசங்கரி, தமிழர் விடுதலைக் கூட்டணியை போட்டியிலும் நிறுத்தினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்ட முக்கியமான முதல் நெருக்கடி அது. அப்போது விடுதலைப் புலிகளே அதற்கான தீர்வையும் முன்வைத்தனர்.

செயலிழந்து கிடந்த தமிழ் அரசுக் கட்சியின் ‘வீடு’ சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பை போட்டியிட வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது தமிழ் அரசுக் கட்சியின் ‘வீடு’ சின்னத்தை குறுகிய காலத்துக்குள் மக்களிடம் கொண்டு சென்று ஆதரவைப் பெற முடியுமா என்ற சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கே காணப்பட்டது.

“செல்வநாயகம் ஐயாவினால் உருவாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சியை அழியவிடக் கூடாது என ‘அண்ணை’ (பிரபாகரன்) நினைக்கிறார், எப்படியாவது கூட்டமைப்பை இந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று, கிளிநொச்சியில் நடந்த ஒரு சந்திப்பில், அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டது இப்போதும் நினைவில் உள்ளது.

கூட்டமைப்பின் சின்னம் உதயசூரியன் என்றிருந்த நிலையை மாற்றி, வீட்டுச் சின்னத்துக்கு மக்களை வாக்களிக்கச் செய்வதற்கு, விடுதலைப் புலிகள் கடுமையாக உழைத்தனர்.

அந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள், வேட்பாளர்களை விட அவர்களுக்காக விடுதலைப் புலிகளே அதிகம் உழைத்திருந்தனர்.

அரசியல்துறையின் பிரசார இயந்திரம் முழுமையாக அதற்காக பயன்படுத்தப்பட்டது. அரசியல்துறை போராளிகளுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பணி முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் வரலாற்றில் தேர்தல் ஒன்றுக்காக தங்களின் வளங்களையும், நேரத்தையும் செலவிட்ட முதலும் கடைசியுமான சந்தர்ப்பம் அது தான்.

பிரசாரங்களுக்குப் பக்க பலமாக இருந்தது தொடக்கம், தங்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இருந்து வாக்காளர்களை ஏற்றிச் சென்று, முகமாலை, ஓமந்தை சோதனைச் சாவடிகளில் இறக்கி விட்டு வாக்களிப்பு மையத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று திரும்பவும், வீடுகளுக்கு கொண்டு சென்று இறக்கியது வரை -அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாத்திரமன்றி, உதயசூரியன் சின்னம் இல்லாதமையால் தோற்றுப் போய் விடக் கூடாது, சின்னம் எதுவாக இருந்தாலும் ஒற்றுபட்ட முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதனாலும் தான் அவர்கள் அவ்வாறு உழைத்தனர்.

தமிழ் அரசுக் கட்சிக்கு புத்துயிர் கொடுத்து, கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் சூழலையும் அவர்களே ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

இவையெல்லாம், அப்போது கட்சிக்கு வந்திராத, கட்சிக்காக உழைத்திராத தமிழ் அரசுக்கட்சி மற்றும் கூட்டமைப்பினருக்குத் தெரியாது.

ஆயுதப் போராட்டத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழல் ஏற்பட்டால், கூட்டமைப்பு அதற்குத் தலைமை வகிக்க வேண்டும் என்ற சிந்தனை அப்போதே புலிகளிடம் காணப்பட்டது.

ஆனால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த கடப்பாட்டை சரியாக நிறைவேற்றவில்லை.

தமிழ் அரசுக் கட்சி மேலாதிக்க மனப்போக்கில் செயற்பட்டதும், பங்காளிக் கட்சிகள் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டதும், சில திடீர் தலைவர்கள், தன்னலத்துடன் செயற்பட முனைந்ததும், ஒவ்வொரு தரப்பாக கழன்று போகும் நிலையை உருவாக்கியது.

முதலில் கஜேந்திரகுமார், அடுத்து சுரேஸ் பிரேமச்சந்திரன், பின்னர், சி.வி.விக்னேஸ்வரன் என்று கூட்டமைப்பை வலுப்படுத்தியவர்கள் ஒவ்வொருவராக தனித்து இயங்கத் தொடங்கினர்.

அவர்கள் வெளியே சென்று வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை விட, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் இலட்சியத்தை சிதைத்தனர் என்பதில் சந்தேகம் இல்லை.

அவர்களை வெளியே தள்ளி விட்டு தாங்கள் தான் கூட்டமைப்பு என்று கொண்டாடியவர்களே இன்று அதனை விட்டு வெளியே போய் தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள்.

பிரிந்து போன கட்சிகளும், தலைவர்களும் கூட்டமைப்புக்குள் இருந்து அதனைப் பலப்படுத்தியிருந்தால், அதன் அதிகாரத்துக்கான கடும் போட்டியை உருவாக்கியிருந்தால், இந்த நிலை வந்திருக்காது.

ஒவ்வொருவரும் தங்களின் கட்சி, தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தியதால் இன்று தமிழ் அரசுக் கட்சி, கூட்டமைப்பை மௌனிக்கச் செய்யும் முடிவை எடுத்திருக்கிறது,

புளொட்டும், ரெலோவும் வேறு வழியின்றி அதற்கு தலையாட்டியிருக்கின்றன.

இது கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்டிருக்கும் பெரியதொரு துரோகம். இதற்கு வெவ்வேறு நியாயங்கள் பல கூறப்படலாம். அவை எதுவும், நியாயமானதாகி விடாது.

தமிழரின் ஒற்றுமையே பலம் என்ற ரீதியில் தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த முயற்சியில் இன்று பெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், வேறு கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு விட்டு, மீண்டும் கூட்டமைப்பாக ஒன்றுபட முடியாது.

அது புதிய கூட்டுக்குச் செய்யப்படும் துரோகமும் கூட. தேர்தலுக்குப் பிந்திய கூட்டு என்பது கொள்கை சார்ந்த கூட்டு அல்ல.

அது வெறுமனே தந்திரோபாயக் கூட்டு. ஆட்சியமைப்பதற்கான கூட்டு. அத்தகைய கூட்டுகள் கூட்டமைப்பை வலுப்படுத்தாது, வலுப்படுத்த வேண்டிய கட்டாயமும் இல்லை.

கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடுவதில்லை என எடுக்கப்பட்டுள்ள முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடிக்கப்பட்டுள்ள சவுமணி தான்.

அது இரா.சம்பந்தனின் காலத்திலேயே கேட்கும் என்று தமிழர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சாவுமணியை அடித்தவர்கள், வரலாற்றுப் பழியில் இருந்து தப்பிவிடவும் முடியாது.

என்.கண்ணன்.

Share.
Leave A Reply