கார்வண்ணன்

இலங்கை இப்போது பூகோள அரசியலின் முக்கியமானதொரு கேந்திரமாக மாறியிருக்கிறது.

இங்கு ஆட்சியைத் தீர்மானிப்பதிலும், ஆட்சியாளர்களைத் தீர்மானிப்பதிலும், வாக்காளர்களைத் தாண்டிய, சர்வதேச சக்திகளுக்கு கணிசமான பங்கு இருக்கிறது.

2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை பல சர்வதேச சக்திகள் விரும்பவில்லை.

அமெரிக்க, இந்திய புலனாய்வுப் பிரிவுகள் தன்னை தோற்கடித்தன என்று மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ பலம்வாய்ந்த தலைவராக இருந்த போதும், அவருக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைத்து, பொதுவேட்பாளரை, அவரது அணியில் இருந்தே உருவியெடுத்து, அவரைத் தோற்கடிப்பதில் சர்வதேச சக்திகளுக்கு வெற்றி கிடைத்தது.

ஆனால், 2019 ஜனாதிபதி தேர்தலில் அவ்வாறான நிலை இருக்கவில்லை. 2019 ஏப்ரல் 21ஆம் திகதி நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் அதனை வைத்து கட்டியெழுப்பப்பட்ட பாதுகாப்பு பற்றிய அச்சம் என்பன, மீண்டும் ராஜபக்ஷவினருக்கான கதவுகளைத் திறந்து விட்டது.

ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச சக்திகளே அந்த தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தன என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்களும் இருந்தனர்.

ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக, சர்வதேச சக்திகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தனவா என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

ஆனால், இந்த தாக்குதலை ராஜபக்ஷவினர் தங்களின் மீள் எழுச்சிக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்பதில் ஐயமில்லை. அவர்களின் அரசியல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த அடுத்தடுத்த மணித்தியாலங்களிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

கடுவாப்பிட்டிய தேவாலய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் வீட்டுக்குச் சென்ற நாமலிடம், அப்பாவை மீண்டும் ஆட்சிக்கு வரச் சொல்லுங்கள், அப்போது தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்று பெண்கள் சிலர் கதறியது ஊடகங்களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பட்டது.

அங்கேயே, ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் அரசியல் திட்டத்துக்கு விதை போடப்பட்டது.

அது எதேச்சையான சம்பவமா, திட்டமிட்ட ஒன்றாக என்ற விவாதங்களுக்குள் செல்வது இந்தப் பத்தியின் நோக்கமன்று.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவினால் தான் நாட்டைப் பாதுகாக்க முடியும், அவரால் மட்டும் தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தக் கட்டத்தில் அவருக்கு எதிராக மற்றொரு பொதுவேட்பாளரை நிறுத்தி, தோற்கடிப்பதற்கான வியூகங்களை சர்வதேச சக்திகளால் வகுக்க முடியவில்லை.

அத்துடன் ராஜபக்ஷவினரின் வெற்றியையும் அவர்களால் தடுக்க முடியவில்லை. ராஜபக்ஷவினரின் வெற்றியை பாதகமானதாக கருதிய சர்வதேச சக்திகளுக்கு இந்த தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது.

அவர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும் வகையிலேயே கோட்டாபய ராஜபக்ஷவும் ஆட்சி செலுத்தினார்.

அவர் சீனாவுக்காக கதவுகளைத் திறந்து விட்டு,அமெரிக்க, இந்திய நலன்களை கேள்விக்குட்படுத்தினார்.

இந்தியா, அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளின் முக்கியமான பல வர்த்தக முதலீட்டு உடன்பாடுகளை கிழித்தெறிந்து, சீன விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

அது தான் கோட்டா செய்த மிகப்பெரிய தவறு.  அவர் சிங்கள மக்களின் மிகப்பெரிய ஆணையுடன் பதவிக்கு வந்தவர் என்ற கர்வத்துடன், தீர்மானங்களை எடுத்தார்.

அது சர்வதேச சக்திகளுக்கு ஆபத்தான சமிக்ஞையை வெளிப்படுத்தியது. அதற்குப் பின்னரும் அவரை விட்டு வைக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் எல்லாம் உயர் பதவியில் நீடித்துவிட முடியாது என்பதற்கு அவர் உதாரணமானார். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், 5 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்ற நம்பிக்கையே அவருக்கும் எல்லோருக்கும் காணப்பட்டது.

ஆனால், அவரது ஆட்சி பாதிக்காலத்திலேயே முடிந்து போனது. மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டே ஓடிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த நினைத்திருந்தால், அதனை செய்திருக்கலாம்.

அவரிடம் படைபலமும், தேவையான அதிகாரங்களும் இருந்தன. ஆனால் அவரால் அந்த அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியவில்லை. அல்லது அவர் பிரயோகிக்க முயன்ற அதிகாரங்கள் பயனற்றுப் போனது.

கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் புரட்சியை படைபலத்தின் மூலம் அடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.

காரணம் இந்த விடயத்தை கண்மூடித்தனமாக அணுகினால் பிற்காலத்தை அமெரிக்காவில் தனது மகன், பேரப்பிள்ளையுடன் கழிக்கும் வாய்ப்பு கிட்டாமல் போய் விடும் என்று பயந்தார்.

அத்தகைய நம்பிக்கை அமெரிக்க அதிகாரிகளால் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதனால் ஒரு கட்டத்தில் ஆட்சியைத் தொடர முடியாமல் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் சில வாரங்கள் அஞ்ஞாத வாசத்துக்குப் பிறகு, நாடு திரும்பிய கோட்டா இப்போது வீட்டுக்குள் அடைப்பட்டுக் கிடக்கிறார்.

இடையில் அவர் கடந்த மாத இறுதியில் டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்ற போது, அமெரிக்காவுக்குச் செல்வதாக தகவல் வெளியானது.

ஆனால் டுபாயில் 9 நாட்கள் விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் நாடு திரும்பியிருக்கிறார். அவர் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாது. அமெரிக்கா விசா வழங்கவில்லை.

அதேவேளை உள்நாட்டு அரசியலிலும் அவர் பெறுமதியற்ற ஒருவராகவே மாறிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு, சக்திவாய்ந்த நாடு ஒன்று முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சக்திவாய்ந்த நாட்டின் தூதுவர் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து, அதற்கான சூழலை உருவாக்க முனைகிறார் என்றும், அவ்வாறு கோட்டாவைப் பிரதமர் ஆக்கினால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக காத்திருக்க வேண்டியதில்லை, தாங்களே கடன் நெருக்கடியில் இருந்து வெளியேற உதவுவதாக உறுதியளித்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

குறித்த நாடு எது என்ற தகவல் ஊடகங்களில் வெளிவரவில்லை. ஆனால் அது சீனாவே என்பதை ஊகிப்பது கடினமானதல்ல. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது சீனாவுக்குச் சாதகமான முடிவுகள் பலவற்றை எடுத்திருந்தார்.

அதற்காக அவர் மீது மீண்டும் மீண்டும் பந்தயம் கட்டுகின்ற நிலையில் சீனா இருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் கோட்டாபய ராஜபக்ஷ ஓடக்கூடிய குதிரை அல்ல என்பது ஏற்கனவே நிரூபணம் ஆகி விட்டது.

அவரை மீண்டும் பிரதமர் ஆக்குவதன் மூலம் சீனாவினால் எதையேனும் சாதிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தை எதிர்பார்த்திராமல், நெருக்கடியை தாங்களே தீர்ப்பதாக சீனா உறுதி கூறியிருந்தால், நிச்சயமாக, அவரது ஆட்சியைக் கவிழாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.

கோட்டா ஆட்சியில் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கிய போது, இந்தியாவே உதவியது. சீனா உதவவில்லை. சீனா அப்போது பெரியளவில் உதவியிருந்தால், கோட்டாவின் ஆட்சி தப்பியிருக்கும்.

இப்போதும் கூட சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு சீனாவே தடையாக இருக்கிறது. சீனா கடன் மறுசீரமைப்புக்கு இணங்கினால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறான நிலையில் சீனா மீண்டும் ராஜபக்ஷவினரை அதிகாரத்தில் அமர்த்துவதற்கு முயற்சிக்கிறது என்பது மிகையான கற்பனையாகவும் இருக்கலாம்.

இந்தக் கட்டத்தில் ஒரு விடயத்தை சீனா மறந்து விடாது, ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்த போது தான், அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது.

துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தப்பட்ட போதும் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

எனவே ரணில் விக்கிரமசிங்கவை சீனா பாதகமான ஆட்சியாளராக கருதாது. ஒப்பீட்டளவில் ராஜபக்ஷவினருடன் அதிக நெருக்கத்தை கொண்டிருந்தாலும், அவர்கள் தற்போதைக்கு ஓடக் கூடிய குதிரைகளா என்பதை கவனத்தில் கொள்ளாமல் இருக்காது.

-கார்வண்ணன்-

Share.
Leave A Reply