முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, கடற்படைப் புலனாய்வு அதிகாரியான கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி ஆகியோருக்கு எதிராக கனடா இலக்கு வைத்த தடைகளை அறிவித்திருக்கிறது.

மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டவர் சுனில் ரத்நாயக்க.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கியமான சந்தேக நபராக பெயரிடப்பட்டவர் கடற்படையின் கொமாண்டர் சந்தன ஹெற்றியாராச்சி.

இவர்கள் இருவரும் மீறல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட போதும், தண்டனை விலக்கு கலாசாரத்தினால் இப்போது சுதந்திரமாக இருக்கின்றனர்.

அமெரிக்க அரசாங்கம், கடந்த டிசம்பர் 10ஆம் திகதி மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராக தடைகளை அறிவித்திருந்தது.

அந்த தடைவிதிக்கப்பட்டு, ஒரு மாதம் கழித்து, கனடாவின் தடை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவை விட மேலும் ஒரு படி முன்னே சென்று, மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தடைகளை விதித்திருக்கிறது கனடா.

அமெரிக்கா ஏற்கனவே 2020இல் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தடைகளை அறிவித்தது.

2021இல் கொமாண்டர் சந்தன ஹெற்றியாராச்சிக்கு எதிராக தடைகளை விதித்தது.

கடந்த டிசம்பரில் மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராக தடைகளை அறிவித்திருந்தது.

அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இராணுவ அதிகாரிகள். ஆனால் கனடா தடை செய்துள்ளவர்களில் இருவர், முன்னாள் ஜனாதிபதிகள்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது தான், இறுதிக்கட்டப் போர் இடம்பெற்றது,

விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் இறுதிக்கட்டப் போரில், இடம்பெற்ற மீறல்கள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு அரசியல் ரீதியாகத் தலைமை வகித்தவர்கள் தான் இவர்கள்.

போரில் பங்கெடுத்த இராணுவ அதிகாரிகள் மாத்திரமன்றி, அரசியல் தலைமை வகித்து, அதற்குக் காரணமாக இருந்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் அதனை வலியுறுத்தி வந்தன.

ஆனால், அரசியல் தலைமைகளுக்கு எதிராக இதுவரை எந்த காத்திரமான சர்வதேச தடைகளோ நடவடிக்கைளோ எடுக்கப்படாத நிலையில் கனடா திடீரென அவர்களுக்கு எதிராக தடைகளை அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் 51/1 தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதே, கனடாவும் பிரித்தானியாவும், கடுமையான தடைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தாமதமாகவே கனடா நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு செய்தி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்பிப்பதை கனடா தொடர்ந்து அனுமதிக்காது என்பதற்கான சமிக்ஞையாகவே இந்தத் தடை அறிவிக்கப்பட்டிருப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது.

ஆனாலும், கனடாவுக்குள் நுழைவதற்கும், கனடாவில் சொத்துக்களை கொண்டிருந்தால் அதனை முடக்குவதற்கும், கனடாவில் உள்ளவர்கள், நிதி மற்றும் தொடர்புகளை பேணுவதற்கும் தான் இந்த தடைகள் பொருந்தும்.

இவர்கள் எவருக்கும் கனடாவில் சொத்துக்கள் இல்லாமல் இருந்தால் அல்லது கனடாவுக்குச் செல்லும் தேவை இல்லாமல் இருந்தால், ராஜபக்ஷவினர் அதையிட்டுக் கவலைப்படப் போவதில்லை.

அமெரிக்கா இவ்வாறான தடையை அவர்கள் மீது விதித்திருந்தால், அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் ராஜபக்ஷவினருக்கு அங்கு சொத்துக்கள், நலன்கள் உள்ளன.

அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, இப்போது அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முயற்சிக்கிறார். ஆனால் அமெரிக்கா அவருக்கு வீசா வழங்கவில்லை.

அதனால் தான், அமெரிக்காவில் உள்ள அவரது மகன் குடும்பத்துடன் வந்து அவரைப் பார்த்து விட்டு டுபாய்க்கு அழைத்துச் சென்றார்.

கனடாவின் தடை என்பது, ராஜபக்ஷவினருக்கு விழுந்திருக்கின்ற ஒரு கரும்புள்ளி. அது நேரடியாக அவர்களை பாதிக்காது. ஆனால் முறைமுகமாக அது நெருக்கடிகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கள் உதவியைப் பெறுவதற்கு இலங்கை முயற்சிப்பது போல தான் இது. அந்த உதவித் தொகை இலங்கையின் கடனை தீர்ப்பதற்கு உதவாது.

ஆனால் இலங்கை கடனை திருப்பிச் செலுத்தும் திறனைப் பெற்றுள்ளது என்ற அங்கீகாரத்தைக் கொடுக்கும்.

அதுபோலத் தான், கனடாவின் தடை, ராஜபக்ஷவினருக்கு நேரடியான அழுத்தங்களைக் கொடுக்காவிட்டாலும், அவர்கள் ஏனைய நாடுகளுக்குச் செல்ல முனையும் போது, இந்த தடை- அல்லது கரும்புள்ளி அவர்களுக்கு இடையூறாக அமையும்.

இந்த தடையை இலங்கை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த மாதம், அமெரிக்கா மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் கொமாண்டர் சந்தன ஹெற்றியாராச்சி ஆகியோருக்கு எதிராக தடைகளை விதித்த போது, அரசாங்கம் அடக்கி வாசித்தது.

தனிநபர்களை இலக்கு வைத்த விவகாரங்களில் அரசாங்கம் அதிகம் கவனம் செலுத்தாது என்றும், சம்பிரதாய ரீதியாக எதிர்ப்பை பதிவு செய்யும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தார்.

ஆனால் கனடா தடைகளை அறிவித்தவுடன், கொழும்பிலுள்ள கனடியத் தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்திருந்தார் அலி சப்ரி.

கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் கொழும்பு வந்து கடமைகளை பொறுப்பேற்றிருந்தாலும், அவர் தனது ஆவணங்களை வெளிவிவகார அமைச்சின் நெறிமுறை அதிகாரியிடம் கையளித்திருந்தாலும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவரை அதிகாரபூர்வமாக இன்னும் சந்திக்கவில்லை.

அத்துடன், அவரது ஆவணங்களை பரிசீலித்து, ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவிடம் நேரடியாக அவற்றைக் அதிகாரபூர்வமாக கையளிக்க ஏற்பாடு செய்யவுமில்லை.

இதனால் அவர் சந்திப்புக்குச் செல்லவில்லை. துணை உயர்ஸ்தானிகர் டானியல் பூட் வெளிவிவகார அமைச்சரை புதன்கிழமை சந்தித்திருந்தார்.

அந்தச் சந்திப்பின் போது, கனடாவின் தடைக்கு எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார் அலி சப்ரி.

அத்துடன், குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த விசாரணையுமின்றி, தங்களுடன் கலந்துரையாடாமல் கனடா இந்த தடைகளை அறிவித்திருப்பது, இராஜதந்திர நெறிமுறைகளை மீறிய செயல் என்று விமர்சித்துள்ளார்.

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை தன்னிச்சையாக குற்றம்சாட்டும் பொறுப்பற்ற செயல் என்றும், குறிப்பிட்டிருக்கிறார்.

பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடைவதற்கும், பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களிலும் நாடு ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது  சமூகங்களை துருவப்படுத்தும் என்றும் அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடைகளினால் இருதரப்பு நட்புறவு கடுமையாக பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர், புலம்பெயர்ந்த தீவிரவாதிகளை சமாதானப்படுத்தும் கனடாவின் முயற்சி இது என்றும் சாடியிருக்கிறார்.

இதன் மூலம், உள்ளூரில் ராஜபக்ஷவினரை நீதிமன்றங்களில் பிணையெடுக்கும் சட்டத்தரணியான அலி சப்ரி, சர்வதேச அளவில் அவர்களை பாதுகாக்க முற்பட்டிருக்கிறாரே தவிர, இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நடந்து கொள்ளவில்லை.

கனடாவும் அமெரிக்காவும் ஒத்திசைந்து செயற்படும் நாடுகள். ராஜபக்ஷ சகோதரர்கள் மீதான இந்த தடை, அவர்களுக்கு அமெரிக்கா கொடுத்திருக்கும் முன்னெச்சரிக்கையாகவே கருதப்படத்தக்கது.

அடுத்து அவர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதிக்கலாம் என்ற சூழலில் தான், பதற்றமடையத் தொடங்கியிருக்கிறது அரசாங்கம்.

தம்மால் தடை செய்யப்பட்டவர்கள், மனித உயிர்களின் அர்த்தமற்ற இழப்புகளுக்கு காரணமானவர்கள் என்று குறிப்பிட்டிருக்கும் கனடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அட்ரியன் பிளான்சாட், பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் அவர்கள் ஏற்படுத்திய துன்பங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்ற தெளிவான செய்தியை நாங்கள் அனுப்பியிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அரசாங்கத்துக்கு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும், ராஜபக்ஷவினரின் அரசாங்கமாகத் தான் நீடிக்கிறது. எனவே அவர்களின் நலன்களுக்கு சிறிய கீறல் கூட வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜொலி தடை குறித்து வெளியிட்ட அறிக்கையில், மிகத் தெளிவாகவே, பொறுப்புக்கூறலுக்கான அழைப்பை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை, வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதாவது நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் தான் தடைகளை விதிப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது நம்பகமான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்க கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலான காலஅவகாசம் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டது.

அதனை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளாத நிலையில் தான், தடைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காலத்தை இழுத்தடிப்பதை தப்பிக்கும் ஒரு உத்தியாகவே ராஜபக்ஷவினரும் அரசாங்கமும் கையாண்டு வந்தன. ஆனால் இப்போது அதுவே அவர்களுக்கு பொறியாக மாறியிருக்கிறது.

இது அவர்கள் எதிர்பாராத ஒன்று. கனடாவை அடுத்து அமெரிக்காவும் இதே முடிவை எடுக்கலாம். பிரித்தானியாவும் அந்த நிலைப்பாட்டுக்கு வரலாம்.

இது ராஜபக்ஷவினரை இருள் சூழத் தொடங்கியிருப்பதற்கான ஒரு அறிகுறி.  இந்த இருளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள், நம்பகமான விசாரணைப் பொறிமுறை என்ற வெளிச்சத்தை தேடுவதை தவிர வேறு வழியிருக்காது.

-சுபத்திரா-

Share.
Leave A Reply