உருவாகிய நாளிலிருந்தே முரண்பாடுகளுக்கும் பிரிவுகளுக்கும் குறையில்லாததாகத்தான் ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இருந்து வந்திருக்கிறது.

பொதுவாக நிலவும் நம்பிக்கைகள் பல உண்மையாக இருப்பதில்லை. சிலவேளைகளில் அவை வசதியான பிரசாரத்தின் விளைவாக, உண்மைக்குப் புறம்பாக சமூகத்தில் விதைக்கப்படுபவையாகக் கூட இருக்கலாம். அதில் ஒன்றுதான் கூட்டமைப்பை, விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள் என்பதாகும்.

கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. அப்படிச் சொல்வது அதன் உருவாக்கத்துக்காகப் பாடுபட்டவர்களுக்கு செய்கிற அநீதி. கூட்டமைப்பு என்பது அதன் உருவாக்கத்துக்குப் பின்னர், தமக்கான அரசியல் சந்தர்ப்பம் கருதி விடுதலைப் புலிகளால் தத்தெடுக்கப்பட்ட ஒன்றாகும்.

கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளாக தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன இருந்தன.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சியில் இலங்கை தமிழரசுக் கட்சி கிடையாது.

புலிகள் கூட்டமைப்பை ‘தத்தெடுத்த’ பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, 2004இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரிலும், சின்னத்திலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட அனுமதிக்கவில்லை.

அதன் பின்னர்தான், ஆனந்த சங்கரியோடு இணைந்து செல்லாது கூட்டணியினர், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் உயிர்கொடுத்து, ‘வீட்டு’ச் சின்னத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக தொடர்ந்து இயங்கினர்.

அதன் பின்னர் சில கட்சிகள் விலகின; சில கட்சிகள் இணைந்தன. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை’ உலகுக்கு மட்டுமல்ல, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நேற்று கூட்டமைபிலிருந்ததொரு கட்சி, இன்று இருக்காது. இன்று இருக்கும் கட்சி, நாளை இருக்காது என்பதுதான் கூட்டமைப்பின் கதையாக இருந்து வருகிறது.

இன்று கடைசியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சின்னமாகவும் முகமாகவும், முகவராகவும் இருந்த தமிழரசுக் கட்சி, நேரடியாக அன்றி மறைமுகமாக கூட்டமைப்பிலிருந்து விலகி, தனிவழி செல்கிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி, எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்ததோடு தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகாமல் விலகியிருக்கிறது.

தமிழரசுக் கட்சி ஏன் விலகியது என்பதற்கு ஆயிரம் வியாக்கியானங்கள் கற்பிக்கலாம். ஆனால், யதார்த்தத்தில் தமிழரசுக் கட்சி – கூட்டமைப்பு என்ற கூட்டணி மனப்பான்மையில் செயற்பட்டு பல ஆண்டுகளாகிறது. 2009 வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கட்டுப்படுத்தும் கையாக விடுதலைப் புலிகள் இருந்தார்கள்.

2009க்குப் பின்னர், தமிழரசுக் கட்சியை கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று இருக்கவில்லை. தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் ‘நாட்டாமை’யாகச் செயற்பட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

அந்த நாட்டாமையை விரும்பாத கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள், கூட்டமைப்பிலிருந்து தனிவழி போயின.

மற்றைய அங்கத்துவக் கட்சிகள், தமது பதவிகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பல்லைக்கடித்துக்கொண்டு இருந்தன.

கூட்டமைப்பின் தீர்மானங்கள், முடிவுகள், நிலைப்பாடுகள் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பல முடிவுகள், கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளோடு பேசாமல், தமிழரசுக் கட்சி சார் தனிநபர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளே என்ற குற்றச்சாட்டுகள் கூட முன்வைக்கப்பட்டன.

‘கூட்டமைப்பு’ என்ற பெயரில் வௌிநாடுகளுக்குப் போவது, இராஜதந்திரிகளைச் சந்திப்பது, அரசாங்க முக்கியஸ்தர்களைச் சந்திப்பது என எல்லாம் தமிழரசுக் கட்சியின் தனிநபர்களால்தான் நடத்தப்பட்டன என்பது பகிரங்க இரகசியம்!

இதையெல்லாம் கூட்டமைப்பில் தொடர்ந்திருந்த கட்சிகள் பொறுத்துக் கொண்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும்.

அது, அவர்கள் தேர்தலில் ஒன்றிரண்டு ஆசனங்களையேனும் வெல்வதற்கு தமிழரசுக் கட்சியுடனான தேர்தல் கூட்டு அவசியம் என்பதாகும்.

தமிழரசுக் கட்சிக்கும் இது நன்றாகவே தெரியும். அதனால்தான் எதுவித தயக்கமுமின்றி தமிழரசுக் கட்சி ‘நாட்டாமை’யாகச் செயற்பட்டு வந்தது.

தமிழரசுக் கட்சியுடனான தேர்தல் கூட்டான கூட்டமைப்பிலிருந்து பிரிந்த கட்சிகள் மற்றும் தரப்பினது தேர்தல் செயற்றிறன் கணிசமாகக் குறைந்தது என்பது தௌிவு. சீ.வி விக்னேஸ்வரனாலும், வியாழேந்திரனாலும் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தாலும், பாராளுமன்ற தேர்தலில் வெல்ல முடிந்தது.

ஆனால், இது தனிநபர் வாக்குவங்கி சார்ந்த விதிவிலக்கு. இவர்களால் அடுத்தமுறை இதே வெற்றியை மீளடைய முடியுமா என்பதும் கேள்விக்குறியே.

ஆனால், 2010இல் கூட்டமைப்பிலிருந்து பிரிந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மீண்டும் பாராளுமன்ற ஆசனங்களை வெல்ல 10 வருடங்களானது. ஈ.பி.ஆர்.எல்.எஃப், தமிழர் விடுதலைக் கூட்டணியால் கூட்டமைப்பிலிருந்து விகிய பின்னர் தலையெடுக்க முடியவில்லை.

இந்த யதார்த்தம் தமிழரசுக் கட்சியினருக்கும் தெரியும். இதுவும் அவர்களது செருக்குக்கு முக்கிய காரணமாகும்.

மேலும், இதே காலப்பகுதியில், தமிழரசுக் கட்சிக்குள் கூட்டமைப்பு தேவையில்லை; நாம் தனித்துச் செயற்படுவோம் என்ற குரலும் உருவாகத் தொடங்கியது.

இவற்றின் தொடர்ச்சியாக, இன்று 2001இற்குப் பின்னர் முதன்முறையாக, தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் ஒரு தேர்தல் நடக்கவிருக்கிறது.

கூட்டமைப்பை உடைக்கவேண்டும், தமிழர் ஒற்றுமையைச் சிதைக்க வேண்டும் என கங்கணங்கட்டிக்கொண்டிருந்த எல்லாத் தரப்புகளுக்கும் அவர்கள் விரும்பிய அடைவு கிடைக்கப்பெற்றுவிட்டது. சினிமா மொழியில் சொன்னால், கூட்டமைப்பு ‘டமால்’.

ஆனால், தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து விலகி, கூட்டமைப்பின் சின்னமாக இருந்த தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை தான் எடுத்துக் கொண்டு போன பின்னர், கூட்டமைப்பில் எஞ்சியிருந்த டெலோ, புளொட் ஆகிய கட்சிகளும், கூட்டமைப்பின் முன்னாள் அங்கத்தவரான ஈ.பி.ஆர்.எல்.எவ்உம், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியனவும் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ‘குத்துவிளக்கு சின்னத்தில் ஒன்றாகியிருக்கின்றன.

இந்தக் கூட்டணியில் இணையாமல் சீ.வி விக்னேஸ்வரனும், அவரோடு கைகோர்த்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்த மணிவண்ணனும் தனிவழி பயணிப்பதாகத் தெரிகிறது.

ஆகவே, தமிழ்த் தேசிய அரசியலில் முழுமையானதோர் ஒற்றுமையை ஏற்படுத்த இன்னமும் முடியாமல் இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுதல் அவசியமாகிறது. இந்தப் பிரிவுக்கு தமிழரசுக் கட்சி காரணமல்ல என்று வியாக்கியானப்படுத்த இங்கு பெரும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

புதிதாக ஜனநாயக கூட்டமைப்பாக இணைந்திருக்கும் கட்சிகளை ‘வங்குரோத்து’ அரசியலாக வரைவிலக்கணப்படுத்த கடும் பிரசார பிரயத்தனங்களை தமிழரசுக் கட்சி சார் தரப்பு முன்னெடுப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

இது, கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சிதைத்தது யார் என்ற கேள்வியை மீளஎழுப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

கூட்டமைப்பாக, ஒன்றுபட்டு நிற்கும் டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியனதான் ஒற்றுமையைச் சிதைக்கின்றனவா, அல்லது தமிழ் மக்களின் அடையாள பிரதிநிதியாக இருந்த ‘கூட்டமைப்பை’ விடுத்து, நாம் தனியாகப் போட்டியிடுவோம் என்று அறிவித்த தமிழரசுக் கட்சி, ஒற்றுமையைச் சிதைத்திருக்கிறதா என்பதை தமிழ் மக்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஒரு கூட்டணி என்றால், அதற்குள் விட்டுக்கொடுப்புகள் தேவை. விட்டுக்கொடுப்பு இல்லாமல் ஒற்றுமை என்பது சாத்தியமில்லை.

ஒரு கூட்டணிக்குள் ஒருவர் நாட்டாமை நடத்திக்கொண்டிருப்பது கூட்டணிக்கு ஆரோக்கியமானது அல்ல. அன்று எப்படி ஆனந்த சங்கரி கூட்டமைப்பின் சின்னத்தை எடுத்துக்கொண்டு வௌியேறினாரோ, அதுபோல இன்று தமிழரசுக் கட்சி கூட்டமைப்பின் சின்னத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறது.

ஆகவே, கூட்டமைப்பின் பிளவுக்கு மற்றைய கூட்டணிக் கட்சிகளை குற்றம் சுமத்துவது தர்மமாகாது. ஆனால், தமது தெரிவு யார் என்பது தற்போது தமிழ் மக்களின் கையில்தான் இருக்கிறது.

ஒற்றுமை தேவையில்லை; எமக்கு ஒரு கட்சிதான் வேண்டும் என்று தமிழ் மக்கள் எண்ணி, அதற்கு அங்கிகாரம் அளிப்பார்களேயானால், தமிழ் மக்கள் விரும்பித் தெரிந்தெடுத்த வழி அதுதான் என்று எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை தேசிய அரசியலுக்கான மக்களாணையாகக் கொள்ளவும் முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும்.

ஆனால், அது வாக்குவங்கியின் அசைவையும், ஊடாட்டங்களையும் மேலோட்டமாக உணர்த்தும்.

அடுத்த பாராளுமன்றத் தேர்தல்தான், தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதாக அமையும். தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்களா, இல்லையா என்பதை வௌிப்படுத்தவேண்டியது தமிழ் மக்கள்தான்!

-என்.கே அஷோக்பரன்

Share.
Leave A Reply