தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அவ்வியக்கத்தின் அனைத்துப் போராளிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், ஊடகத்துறையினர் ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு தசாப்தங்களுக்குப் பின்னர் முற்றாகக் குலைந்திருக்கின்றது.
2008இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், அதேயாண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டிருக்காத நிலையில் மேற்குறித்த காலப்பகுதியில் நடைபெற்ற ஏனைய அனைத்து வகை தேர்தல்களிலும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பேராதரவு பெற்ற தரப்பாகவே இருந்து வந்திருக்கிறது.
குறிப்பாக, ஜனாதிபதி தேர்தல்களில் கூட்டமைப்பு போட்டியிடாத போதும் பெரும்பான்மை வேட்பாளர் ஒருவருக்கே தமது ஆதரவை மட்டும் வெளிப்படுத்தி வந்தது.
அத்துடன் பாராளுமன்றத் தேர்தல்களில் பெறப்பட்ட மொத்த ஆசனங்களில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இருப்பினும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ‘கூட்டமைப்பு’ என்ற ‘ஐக்கிய கட்டமைப்பு’க்கே தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்றனர்.
2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘ஆயுதப்போராட்டத்தை’ அங்கீகரித்து, அவர்களே இலங்கைத் தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த அறிவிப்பு கூட்டமைப்புக்குள்ளே முதற்கட்டமாகப் பிளவுகளை ஏற்படுத்தியது.
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி 2004தேர்தலில் தமது சின்னத்தைப் பயன்படுத்த முடியாதென நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றது.
அடுத்து, கூட்டமைப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேறியது. அதன் பின்னர் அக்கட்சி மக்கள் ஆணையைப் பெறவில்லை.
அதன்பின்னர் பிரபாகரன், மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு அன்புரிமையுடன் எழுதிய கடிதத்தினை அடுத்து, சேனாதிராஜாவும், தமிழர்விடுதலைக் கூட்டணியில் இருந்து பிரிந்த சில உறுப்பினர்களும் தமிழரசுக்கட்சியை அரங்கிற்கு கொண்டுவந்தனர்.
அன்றிலிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியே கூட்டமைப்பின் தாய்க்கட்சியானது. அத்துடன், அதன் பெயரும், சின்னமும் தேர்தலுக்காக தொடர்ச்சியாக பயன்படுத்தப்படலானது.
இந்நிலைமையானது 2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்ததையடுத்து தமிழரசுக்கட்சியின் ஏகாதிபத்தியப் போக்கிற்கு வித்திட்டது.
அதன் விளைவாக, 2010 மார்ச்சில், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறினார்.
அவர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி மீண்டும் மக்கள் ஆணை பெறுவதற்கு ஒரு தசாப்தகாலம் எடுத்தது. அவரைத் தொடர்ந்து, 2019இல் சுரேஷ்பிரேமச்சந்திரன் வெளியேறினார். அவரது தரப்பும் 2020 பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணையை இழந்தது.
ஈற்றில் கூட்டமைப்பில் புளொட், ரெலோ எஞ்சியிருந்த நிலையில், கடந்த ஏழாம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களை பெறுதலையும், ஆட்சியைக் கைப்பற்றுதலையும் மையப்படுத்திய தேர்தல் வியூகம் என்ற தொழில்நுட்ப காரணத்தைக்காட்டி தமிழரசுக்கட்சியே தனிவழி செல்ல தீர்மானித்தது.
பின்னர், கொழும்பில் கடந்த பத்தாம் திகதி சம்பந்தன் தலைமையில் பங்காளிக்கட்சிகளுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தேர்தல் கூட்டுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனால் சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவர் பதவியையும், சுமந்திரன் பேச்சாளர் பதவியையும், சேனாதிராஜா பொதுச்செயலாளர் பதவியையும் இழந்திருக்கின்றார்களே தவிர தமிழரசின் தலைவர்களுக்கு வேறு சேதாரங்கள் எவையும் ஏற்படவில்லை.
“தேர்தலின் பின்னர் நாம் கூட்டமைப்பாக செயற்படுவோம்” என்று மாவை.சோ.சேனாதிராஜாவும், சுமந்திரனும் அச்சுலோகத்தை உள்ளீர்த்துக்கொண்டுள்ள ஏனைய தமிழரசுக்கட்சிக்காரர்களும் அறிவிப்புக்களைச் செய்தாலும் ‘சுட்ட மண் ஒட்டாது’ என்பது தான் நீண்டகால புரிதல்.
கூட்டமைப்பு சிதைந்து போகும் என்பது எதிர்பார்க்கப்பட்டதொன்று தான். ஆனால் சம்பந்தனின் வாழ்நாள் காலத்திலேயே அது நடைபெறும் என்பது எதிர்பார்க்கப்படாதவொன்று.
இந்நிலை ஏற்படுவதற்கு தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள், பங்காளிக்கட்சிகளின் இரட்டைத்தோணிப் பயணங்கள் என்று பல காரணங்களை சுட்டிக்காட்ட முடியும். அவை பொதுப்படையானவை.
அவற்றுக்கெல்லாம் அப்பால் சுமந்திரன் என்ற தனிமனிதனின் ‘அமிலப்பரீட்சை’ தற்போது வெற்றி பெற்றிருக்கின்றது என்பது தான் உள்ளார்ந்த உண்மை.
சுமந்திரன், 2015இல் தேர்தல் அரசியல் களத்தில் இறங்கியபோது இப்பத்தியாளருக்கு வழங்கிய செவ்வியொன்றில் மிகத்தெளிவாக, ஒருவிடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.
அதில், ஆயுத இயங்கங்கள் மீது அவர்கொண்டிருக்கின்ற கொள்கை முரண்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியதோடு அதன் காரணமாகவே, வாய்ப்புக்கள் வந்தபோதும், விடுதலைப் புலிகள் மௌனிக்கப்படும் வரையில் தான் அரசியல் களத்திற்குள் வாரதிருந்ததாகச்சுட்டிக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்விதமானவர், தமிழரசுக்கட்சியின் தலைமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார். இதனை அவர் மறுக்கலாம். ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் அதற்காக இயங்க நிலையில் உள்ளனர்.
நிகழ்நிலை யதார்த்தமும் அதுவே. அப்படியிருக்க, அந்த இலக்கினை அவர் அடைகின்றபோது, கூட்டமைப்பின் தலைவராக அவரால் வரமுடியாது.
ஏனென்றால் பங்காளிகளாக ரெலோ, புளொட் கூட்டிலிருந்தால் நிச்சயமாக அவை அதனை எதிர்க்கும்.
அதேநேரம் கூட்டமைப்பின் தலைமை என்பது சுமந்திரனின் இலக்கும் அல்ல. ஆகவே கூட்டமைப்பாக தொடர்வதில் இருக்கும் நன்மைகளையும் விடவும் கூட்டமைப்பாக இல்லாமலிருந்தால் கிடைக்கும் நன்மைகளே அதிகம்.
குறிப்பாக சுமந்திரன் தமிழரசுக்கு தலைமை ஏற்கின்ற தருணத்தில் கூட்டமைப்பு உடைவு நிகழ்ந்தால் அந்த வரலாற்றுப்பழியை வாழ்நாள் பூராகவும் சுமக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும் என்பது அதில் முக்கியமானது.
அடுத்து, தமிழரசுக் கட்சியின் தலைமையை ஏற்பதற்கு உட்கட்சிக்குள் காணப்படும் சக பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனின் போட்டியைக்கூட சமாளித்து விடலாம்.
ஆனால், பங்காளிகளான சித்தார்த்தனும், செல்வமும் ‘ஆறு கட்சிகளின் கூட்டு’ என்ற போர்வையில் சேனாதிராஜாவை அவ்வப்போது அழைத்துச் செல்வது எதிர்காலத்தில் தலைவலியாக மாறிவிடும் என்பது சுமந்திரனால் நிச்சயம் உய்த்துணரப்பட்டிருக்கும்.
காரணம், முதலமைச்சர் பதவி அல்லது கூட்டமைப்பின் தலைமைத்துவப் பதவி ஆகியவற்றை மையப்படுத்தி செல்வமும், சித்தார்த்தனும் சேனாதிராஜாவை கையாள முனைகின்றபோது சுமந்திரனின் தலைமையை நோக்கிய அனைத்து நகர்வுகளுக்கும் ‘செக்’ வைக்கப்பட்டு விடும் என்பது அவராலோ அவரது ஆதரவு தரப்பினராலோ இலகுவாக உணர்ந்துகொள்ள முடியும் விடயமாகவுள்ளது.
ஆகவே, பங்காளிகளின் வலைகளுக்குள் தமிழரசின் தற்போதைய தலைமையை சிக்காது வைத்துக்கொள்வதே அவரது எதிர்கால இலக்கிற்கு பாதுகாப்பானது.
அதற்கு ஒரே வழி பங்காளிகளிடத்திலிருந்து சேனாதிராஜாவை நிரந்தரமாக அந்தியப்படுத்துவது தான்.
அதேநேரம், எதிர்காலத்தில் தலைமையை நோக்கி விரைவாக நகர்வதாக இருந்தால் கட்சியினுள் தனது செல்வாக்கு எவ்வாறு இருக்கின்றது என்பதை நாடிபிடித்துப் பார்ப்பது சுமந்திரனுக்கு மிகவும் அவசியமாகின்றது.
அதற்கு, உள்ளூராட்சி மன்றத்தேர்தலை தொழில்நுட்ப ரீதியான அடிப்படையில் தனித்தனியாக முகங்கொடுத்தல் என்பது பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்ததாத விடயமொன்றாக உள்ளது.
அதேநேரம், தமிழரசு தனிவழி என்பதன் ஊடாக கடந்த தடவை உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாக இருந்து நெருக்கடிகளைச் சந்தித்தவர்களின் பேராதரவைப் பெற்றுக்கொள்வதற்கும், புதிதாக தமக்குச் சார்ந்தவர்களை உள்ளீர்ப்பதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதாக அமையும் என்பது சுமந்திரனது கணிப்பாக இருக்கலாம்.
அதனடிப்படையில் தான், மட்டக்களப்பு மத்திய குழு கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிகள் தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்போம் என்ற முன்மொழிவை சுமந்திரன் பின்னணியில் இருந்து நகர்த்தியிருக்கின்றார்.
(இதனைக்கூட மத்தியகுழுவின் பெரும்பான்மையனவர்கள் முன்மொழிந்தார்கள் என்று சுமந்திரனால் பிரதிபலிப்புச் செய்ய முடியும்) இதனால் கூட்டமைப்பு உடையாது என்றும், அதிக உறுப்பினர்களை பெற்று, கூட்டமைப்பே அதிக சபைகளில் ஆட்சி அமைக்கும் அதனால் கூட்டமைப்பு மேலும் பலமடையும் என்றும் அவர் தர்க்கரீதியாக கூறியிருக்கின்றார்.
இதற்கு, அன்றைய தினம் பிரசன்னமான 34 மத்திய குழு உறுப்பினர்களில் வெறுமனே மூன்று பேர் தான் எதிர்ப்புக்களை வெளியிட்டிருக்கின்றனர்.
தலைவர் சேனாதிராஜா, அவருடைய புதல்வர் கலைஅமுதன், மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவிராசா ஆகியோரே அவர்கள்.
இதில் கே.வி.தவராசாவுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான பனிப்போரால் தவசராசா எதிர்த்தார் என்றும், தந்தை எதிர்த்ததால் புதல்வரும் எதிர்த்தார் என்றும் கூட எதிர்வரும் நாட்களில் வாதமொன்றை சுமந்திரன் தரப்பு வெளிப்படுத்தி மூவரின் எதிர்ப்பினைக் கூட மூன்றாம் நிலைக்குக் கொண்டு செல்வதற்கு ஏதுநிலைகள் இல்லாமலில்லை.
அதேநேரம், சேனாதிராஜாவுக்கு ஆதரவாக இருக்கும் சிறீதரனோ, சாள்ஸ் நிர்மலநாதனோ கூட்டத்திற்கு வருகை தந்திருந்தால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்காது என்றும் கூறிவிடமுடியாது.
ஏனெனில் கிளிநொச்சியில் சிறீதரனும், மன்னாரில் சாள்ஸ் நிர்மலநாதனும் தமது தரப்பு உறுப்பினர்களை களமிறக்குவதிலேயே தீவிரமாக உள்ளனர்.
குறிப்பாக, சிறீதரன் கடந்த தேர்தலிலேயே கிளிநொச்சியில் தன்னுடைய சிபார்சு உறுப்பினர்களை மையப்படுத்தியே வேட்பாளர் பட்டியலை தயாரித்து இருந்தார்.
புளொட், ரெலோவினை அவர் முழுமையாக நிராகரித்தும் இருந்தார். அவ்வாறிருக்கையில், அவர்கள் சுமந்திரன் நகர்த்திய தீர்மானத்தினை மாற்றியமைத்திருப்பார்கள் என்று கூறி விடமுடியாது.
எது, எவ்வாறாயினும், சுமந்திரனின் பின்னணியுடன் நகர்த்தப்பட்டதொரு தீர்மானத்திற்கு மத்தியகுழு அளித்துள்ள அங்கீகாரமானது அவருடைய தலைமைத்துவ பயணத்துக்கான முதற்கட்ட வெற்றியாகும். அத்துடன், அந்தவெற்றி அவருக்கான எதிர்காலச் சவால்கள் பலவற்றையும் தகர்த்திருக்கின்றது.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டு குலைந்தாலும் தன்னுடைய அமிலப்பரிசோதனையில் வெற்றிபெற்ற முதல் நபராகிறார் சுமந்திரன்.
இவ்வாறானதொரு பரிசோதனையைச்செய்த மற்றைய நபர் யார் என்பதையும் சுமந்திரனுக்கு கூட்டமைப்பின் தலைமையை வகிப்பதற்கும் இன்னமும் வயிலொன்று திறந்திருப்பதையும் அடுத்தவாரம் பார்க்கலாம்.