பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்துவிட்டது. இன்னும் இரு தினங்களில் (ஞாயிற்றுக்கிழமை) அந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இறுதிப்போட்டியை நெருங்கியுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களாக இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் இல்லத்திற்கு வந்து இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், 100 நாள் நினைவுகளை அசைபோடும் பலவித நிகழ்வுகள், போட்டி மனப்பான்மை அற்ற பலவித விளையாட்டுகள் என பிக் பாஸ் இல்லமே களைகட்டி வருகிறது.

போட்டியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் இடையே சிறு சிறு வாக்குவாதங்களும் அவ்வப்போது அரங்கேறித்தான் வருகின்றன

அதன் உச்சமாக, இரு தினங்களுக்கு முன் வீட்டில் தற்போது உள்ள போட்டியாளர்கள், விருந்தாளிகளாக வந்த போட்டியாளர்களுக்கு சாப்பிடுவதற்கு முட்டைகள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில் மகேஸ்வரி – அசீம் – மணிகண்டன் மூவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதனிடையே, இறுதி வாரத்தில் எப்போதும் போல வழக்கமாக பணப்பெட்டியும் பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தது. இதை எடுத்துக்கொள்ள விரும்பும் போட்டியாளர் அதை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறலாம்.

இரு தினங்களுக்கு முன்பு 3 லட்ச ரூபாய் அடங்கிய பணமூட்டை பிக் பாஸ் இல்லத்திற்குள் கட்டப்பட்டிருந்தது.

அதுகுறித்து பிக்பாஸ் அறிவித்தவுடனேயே கதிரவன் அந்த பணமூட்டையை அவிழ்த்து அதை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினார். இதை சக போட்டியாளர்கள் விரும்பாத நிலையில், கதிரவனின் முடிவு ‘அவசரகதியில்’ எடுக்கப்பட்டது என விமர்சித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம், புதன்கிழமை மீண்டும் மூன்று லட்ச ரூபாய் அடங்கிய பணப்பெட்டி பிக் பாஸ் இல்லத்திற்குள் வைக்கப்பட்டது.

அதை இதுவரை யாரும் எடுக்காத நிலையில், பணப்பெட்டியில் உள்ள பணத்தொகையின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒருவேளை, 20 லட்ச ரூபாய் வரை அதன் மதிப்பு உயர்ந்தால் அதை எடுத்துக்கொண்டு வெளியேறுவது குறித்து “யோசிப்பேன்” என அமுதவாணன் கூறியுள்ளார்.

இதனிடையே, தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு ஆதரவாக தினந்தோறும் சமூக ஊடகங்களில் அவர்களின் பெயர்களை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், விக்ரமனுக்கு வாக்களிக்குமாறு ட்விட்டரில் நேரடியாகவே கேட்டுக்கொண்டார். அவருடைய பதிவுக்கு ஒருபுறம் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.

நம்மைச் சேர்ந்தவர்களை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமனை திருமாவளவன் நேரடியாக ஆதரித்ததில் தவறில்லை என ஆதரவுக் குரல்கள் எழுந்தன.

இதுநாள் வரை தனியாக விளையாடிய விக்ரமன், ஒருவேளை போட்டியில் வென்றால் திருமாவளவனின் பதிவாலேயே இது நிகழ்ந்தது என்ற பேச்சு எழலாம் என்பது திருமாவளவனின் பதிவை எதிர்ப்பவர்களின் வாதமாக உள்ளது.

சமூக ஊடகங்களிலும் விக்ரமன் – அசீம் ஆதரவாளர்கள் இடையிலான வாக்குவாதங்களும் போட்டியுமே நிறைந்து காணப்படுகின்றன.

எனினும், திருமாவளவனின் பதிவுக்குப் பின்னர் விசிகவை சேர்ந்த பலரும் வெளிப்படையாக விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸும் விக்ரமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


விக்ரமனுக்கு மட்டுமல்லாது, பிக் பாஸ் இல்லத்தில் ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசனிடம் இருந்து அறிவுரைகளைப் பெறும் அளவுக்கு தன் எல்லை மீறிய கோபத்தால் சக போட்டியாளர்களின் எதிர்ப்பை பெருமளவில் சம்பாதித்த அசீமுக்கும் நெட்டிசன்கள் பலர் ஆதரவான கருத்துகளைத் தெரிவிப்பதைப் பார்க்க முடிகிறது.

அசீமுக்கு ஆதரவாக பதிவிடுபவர்களுள் பலர், விக்ரமனின் அரசியல் சார்பை கேள்வி கேட்டும் அரசியல் சார்பாலேயே அவர் இதுவரை போட்டிக்குள் பயணித்ததாகவும் கூறி வருகின்றனர்.

விக்ரமனின் ஆதரவாளர்கள் அசீம் கோபத்தால் பேசும் வார்த்தைகளைப் பதிவிட்டு அவருக்கு எதிராகப் பதிவிட்டு வருகின்றனர். இந்த சீசனில் அசீம் – விக்ரமன் இடையே பலமுறை வாக்குவாதங்கள் முற்றியதையே இவை காட்டுகின்றன.

 

ஷிவின்

மேலும், திருநங்கை போட்டியாளரான ஷிவினுக்கும் சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகி வருகிறது. அவர் வெற்றி பெறுவது அவர் சார்ந்த சமூகத்திற்கே முக்கியத்துவம் வாய்ந்தது என அவருடைய ஆதரவாளர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அமுதவாணன்

இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்திற்குள் வைக்கப்பட்டுள்ள பணப்பெட்டியின் மதிப்பு 10 லட்ச ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டதாகவும் அதை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

அமுதவாணனின் முடிவு சாதுர்யமானது எனவும் பெரும்பாலானோர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு வாரமாக நடைபெற்ற கடுமையான போட்டிகளை வென்று இறுதிப்போட்டியில் நுழைவதற்கான டிக்கெட்டை வென்ற அமுதவாணன், பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அமுதவாணன் வெளியேறினாரா என்பது அநேகமாக இன்று(வெள்ளிக்கிழமை) தெரியவரலாம்.

 

Share.
Leave A Reply