“விடுதலைப் புலிகள் நீண்டகால இலக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கினர். அந்த இலக்கை அடைவதற்கு முன்னரே, பங்காளிகள் ஒவ்வொன்றாக வெளியேறிய நிலையில் இப்போது தாய்க்கட்சியும், தன்பொறுப்பை உதறிவிட்டு நிற்கிறது”

தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடத் தீர்மானித்த பின்னர், அதன் பங்காளிக் கட்சிகளாக இருந்த ரெலோவும், புளொட்டும் மற்றொரு கூட்டை அமைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை பயன்படுத்தாமல் தனித்தனியாகவோ வேறு கூட்டுகள் அமைத்தோ போட்டியிடலாம் என்றே கடைசியாக நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது, அந்த உறுதிமொழியை ரெலோவும், புளொட்டும் மீறுகின்றன என்று கூறியிருந்தார் சுமந்திரன்.

ஆனால், அவ்வாறான எந்த வாக்குறுதியையும் தாங்கள் இரா.சம்பந்தனிடம் கொடுக்கவில்லை என்று கூறியிருக்கின்றனர் செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும்.

இதுவரை காலமும் தமிழ் அரசுக் கட்சியே தாய்க்கட்சியாக நீடித்து வந்தது. அதனுடன் சரிசம அந்தஸ்து கோரிய ரெலோவும் புளொட்டும், இப்போது தாங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறிக் கொள்கின்றன.

ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டு தங்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று அவை கூறியுள்ளன.

அது தொடர்பாக கையெழுத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டை எடுத்துக் கொண்டால், சுழற்சி முறைத் தலைமைத்துவம் போன்ற விடயங்கள் உள்ளடக்கியிருப்பதை காணலாம்.

ரெலோ கூட்டமைப்புக்கு தலைமை பதவியை அடைய வேண்டும் என்று நீண்டகாலமாக காத்திருந்த கட்சி. இந்தப் புதிய கூட்டின் மூலம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முற்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து  போட்டியிடத் தயாராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், ரெலோ, புளொட் சேர்ந்து அமைத்த புதிய கூட்டணியில் இடம்பெறாமல் போனதற்கு சின்னம், பொதுச்செயலாளர் பதவி போன்ற விடயங்கள் மாத்திரம் காரணமல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்றும் ரெலோ, புளொட்டின் திட்டத்துக்கு தன்னையும் ஒரு பகடையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற சந்தேகமும் கூட அதற்கு இன்னொரு காரணம்.

கூட்டமைப்பை தான் உடைக்கமாட்டேன் என அவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றினாரா இல்லையா என்பது வேறு விடயம்.

தற்போதைய சூழலில், ரெலோ, புளொட் ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்க அவர் தயாராக இருந்தாலும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பெயரிடுவதை அவர் ஏற்கத் தயாராக இருக்கவில்லை.

அது சம்பந்தனுக்கு நேரடியாகச் செய்யப்படும் துரோகம் என்பதை விக்னேஸ்வரன் உணர்ந்திருந்தார்.

அதேவேளை, அவர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி விடயத்திலும், அதன் சின்னம் தொடர்பாக விடயத்திலும் கடைப்பிடித்த அணுகுமுறைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

2008ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இருந்த போது, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் போட்டி அணி என்பன சேர்ந்து உருவாக்கியது தான் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி.

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அப்போது புளொட் உள்வாங்கப்படவில்லை. அதனை விடுதலைப் புலிகள் விரும்பவில்லை.

பின்னர் விடுதலைப் புலிகள் போரில் பலவீனப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த போது, வடக்கு, கிழக்கு அரசியலில் கூட்டமைப்புக்குக் போட்டியான ஒரு கூட்டணியை உருவாக்கும் நோக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது.

அதனை உருவாக்கிய நிகழ்ச்சி நிரலில், தனியே புளொட் மட்டும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பது வெளிப்படை.

கூட்டமைப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தான், இப்போது தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிறது.

ஆங்கிலத்தில் ‘TNA’ என்று அழைக்கப்பட்டது கூட்டமைப்பு. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆங்கில சுருக்கம் ‘DTNA’ ஆகும்.

ஐந்து கட்சிகளின் புதிய கூட்டணியின் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட அன்று, காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதையில் தொலைவில் இருந்து பார்த்தால், தெரியாத வகையில் ‘D’ என்ற எழுத்து மிகச் சிறியதாகவும், ‘TNA’ என்பது பெரிய எழுத்துக்களிலும் எழுதப்பட்டிருந்தது.

இந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளராக இருப்பவர் புளொட்டின் ராகவன்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, உள்வாங்கப்படாத புளொட்டின் வசம், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கிக் கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் கனவு பற்றிப் பேசுகின்றவர்கள் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்கு ஏன் ரெலோவையோ ஈ.பி.ஆர்.எல்.எவ்வையோ ஏன், தமிழ்க் காங்கிரஸையோ நியமிக்கவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்கவில்லை.

ஆரம்பத்தில் தாய்க்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனந்தசங்கரியின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், ஏனைய கட்சிகளை வைத்து அவர்கள் கூட்டமைப்பை கொண்டு நடத்தியிருக்கலாம்.

அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அப்போது தூசி படிந்து போயிருந்த தமிழ் அரசுக் கட்சியை மீள செயற்பட வைத்து அதனையே தாய்க் கட்சியாக்கியிருந்தனர்.

ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். என்பன பங்காளி கட்சிகளாக இருக்க வேண்டும், அவற்றையும் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியிருந்தாலும், அவர்களின் வசம், கூட்டமைப்பை ஒப்படைக்கும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை.

அப்போது சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்ற மூத்த தலைவர்கள் இருந்தனர். அவர்களை புறந்தள்ளி செல்வம் அடைக்கலநாதனையோ, சுரேஷ் பிரேமச்சந்திரனையோ தலைவராக்க முடியாது என்ற நடைமுறை சிக்கல் இருந்ததை மறுக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் காலத்தில், தாய்க்கட்சி இல்லாமல் போனபோது, புதிய தாய்க்கட்சியை புலிகள் ஏன் உருவாக்கினார்கள்? புதிய சின்னத்தை ஏன் அவர்கள் அறிமுகம் செய்தனர்?

அப்போது பங்காளிகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ். மலர் சின்னத்தையும், ரெலோ கலங்கரை விளக்கம் சின்னத்தையும், தமிழ்க் காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தையும் கொண்டிருந்தன.

அவற்றில் எந்த சின்னத்தையும் தவிர்த்து விட்டு, வீட்டுச் சின்னத்தை புலிகள் ஏன் அறிமுகம் செய்தனர்? இது சிந்திக்க வேண்டிய கேள்வி.

இவ்வாறான நிலையில், தாங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் உண்மையான வாரிசுகள் என்றும் உரிமை கோருகின்ற தகைமை இந்தக் கட்சிகளுக்கு இருக்கிறதா?

விடுதலைப் புலிகள் ஒரு நீண்டகால இலக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கினர். அந்த இலக்கை அடைவதற்கு முன்னரே, பங்காளிகள் ஒவ்வொன்றாக வெளியேறினர்.

இப்போது தாய்க்கட்சியும், தன்பொறுப்பை உதறிவிட்டு வெளியே நிற்கிறது. எஞ்சிய பங்காளிக் கட்சிகளும் தங்களுக்கு பலம் தேவை என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கையில் வைத்திருக்க விரும்புகின்றனவே தவிர, தமிழர்களின் நலன் நோக்கி அதனை செயற்படுத்தும் எண்ணம் அவர்களிடம் இல்லை.

தாங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறிக் கொண்டு வாக்குகளை கைப்பற்றும் இலக்கு மட்டும் அவர்களிடம் காணப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிய எந்த தரப்புக்குமே அதனை உரிமை கோருகின்ற அருகதை இல்லை.

தனிநபர் அல்லது, சொந்தக் கட்சி நலனுக்காக கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைத்த எவருக்கும் விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்கு சொந்தம் கொண்டாடும் அருகதை கிடையாது.

அவ்வாறு உரிமை கோருகின்ற- ஒருபக்கம் குத்துவிளக்காகவும் இன்னொரு பக்கம் கூட்டமைப்பாகவும் முகம் காட்டும் தரப்புகளை விட, கூட்டமைப்பை பயன்படுத்தாமல் தனித்துப் போட்டியிடும் தமிழரசுக் கட்சியோ, கூட்டமைப்பை தவறாக பயன்படுத்த முனையாத விக்னேஸ்வரன் தரப்போ, தமிழ்க் காங்கிரசோ ஒரு படி மேல் என்று சிந்திக்கின்ற நிலை தான் காணப்படுகிறது.

-கபில்
Share.
Leave A Reply