அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் மாண்ட்ரே பார்க் நகரில் நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாச்சுச் சூடு சம்பவத்தில் 10 பலியாகி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை இரவு 10.20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சந்திர புத்தாண்டை கொண்டாடுவதற்காக கலிஃபோர்னியாவின் மாண்ட்ரே பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான நபர்கள் கூடியிருந்தனர்.
அப்போது நபர் ஒருவர் கண்மூடித்தனமாக தூப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 10 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனினும், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்றும் யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீஸ் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஆண் என லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறை தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே சுமார் எட்டு மைல் (13 கிமீ) தொலைவில் அமைந்துள்ள நகரத்தில் ஏராளமான போலீசார் இருப்பதை சமூக ஊடகத்தில் உள்ள காணொளிகள் காட்டுகின்றன.
மூன்று நபர்கள் தனது உணவகத்துக்குள் ஓடி வந்து கதவை பூட்டிக்கொள்ளும்படியும், இயந்திர துப்பாக்கியுடன் நபர் ஒருவர் சுற்றித்திரிவதாகவும் தன்னிடம் கூறியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
வருடாந்த சீன புத்தாண்டு விழா என்பது ஒரு வார இறுதி நிகழ்வாகும். கடந்த முறை ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
மாண்ட்ரே பார்க் பகுதியில் 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஆசிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் இது உள்ளது.