அமெரிக்க நீதித்துறையின் புலனாய்வாளர்கள் டெலவேரில் இருக்கும் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் 13 மணிநேரம் நடத்திய சோதனையின்போது, ஆறு ரகசிய ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளனர் என்று பைடனின் வழக்கறிஞர் கூறுகிறார்.

வெள்ளிக்கிழமையன்று வில்மிங்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் அவர் செனட்டராக இருந்த காலத்தைச் சேர்ந்தவை. சில பரக் ஒபாமாவின் அரசாங்கத்தில் துணை அதிபராக இருந்த காலத்தைச் சேர்ந்தவை.

“தனிப்பட்ட முறையால் கையால் எழுதப்பட்ட குறிப்புகள்”, மற்றும் “அது சம்பந்தப்பட்ட பொருட்கள்” ஆகியவையும் உடன் எடுத்துச் செல்லப்பட்டதாக வழக்கறிஞர் பாப் பாயர் கூறினார்.

இந்தச் சோதனையின்போது ஜோ பைடனும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை.

“சாத்தியமான துணை அதிபர் பதிவுகள், சாத்தியமான வகைப்படுத்தப்பட்ட பொருட்களுக்காக முழு வீட்டையும் சோதனையிடுவதற்கு நீதித்துறையை அதிபர் அனுமதித்ததாக” பயர் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில் பைடனின் வழக்கறிஞர்கள், நவம்பர் 2ஆம் தேதியன்று வாஷிங்டன் டிசியில் அதிபரால் நிறுவப்பட்ட ஒரு சிந்தனைக் குழுவான பென் பைடன் மையத்தில் முதல் தொகுதி ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர்.

 

இரண்டாவது தொகுதி பதிவுகள் டிசம்பர் 20ஆம் தேதியன்று, அவரது வில்மிங்டன் வீட்டிலுள்ள வாகன பழுது பார்க்கும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. அதேநேரத்தில் மற்றோர் ஆவணம் ஜனவரி 12ஆம் தேதியன்று வீட்டிலுள்ள சேமிப்பு ஸ்டோரேஜ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிபரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஆவணங்களைக் கண்டுபிடித்த பிறகு, தனது குழு உடனடியாக அவற்றை தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் நீதித்துறையிடம் ஒப்படைத்ததாக அதிபர் கூறினார். ஜோ பைடன் அவற்றை ஏன் வைத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதிபர் அலுவலக ஆவணங்கள் சட்டத்தின்கீழ், வெள்ளை மாளிகையின் ஆவணங்கள் ஓர் அரசின் நிர்வாகக் காலம் முடிந்ததும் ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு அவை பாதுகாப்பாகச் சேமிக்கப்படும்.

முக்கிய ஆவணங்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு ராபர்ட் ஹர் என்ற சிறப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டில் பைடன் போட்டியிடுவாரா என்பதை அறிவிக்கத் தயாராகி வரும் அதிபருக்கு இந்தச் சோதனைகளும் பல ஆவணங்கள் கிடைத்திருப்பதும் அரசியல் தலைவலியாக மாறியுள்ளது.

பைடனும் அவரது மனைவியும் டெலவேரில் உள்ள கடலோர நகரமான ரெஹோபாத் கடற்கரையில் வார இறுதியைக் கழிக்கிறார்கள்.

அங்கு அவர்களுக்கு மற்றொரு வீடு உள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் அங்கு சோதனையிடப்பட்டது. ஆனால், அங்கு ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இடைக்காலத் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது, இரண்டு மாத கால இடைவெளி விட்டு ஜனவரியில் அந்தச் செய்தி வெளியாவது போன்றவை அதிபரின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புவதாக பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் அந்தோனி ஜர்ச்சர் கூறுகிறார்.

நீதித்துறை விசாரணைக்கு அதிபர் முழுமையாக ஒத்துழைத்ததாக பைடனின் குழு வலியுறுத்துகிறது.

நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக சில ரகசிய கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதை பகிரங்கமாக வெளியிடாதது குறித்து தனக்கு “வருத்தமில்லை” என்று கூறிய பைடன் இந்த விவகாரத்தை அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஃப்ளோரிடா மார்-ஏ-லாகோ இல்லத்தில் நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதாகக் கூறப்படும் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில் இது நடந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் எஃப்.பி.ஐ அவரது ஃப்ளோரிடா விடுமுறை இல்லத்தைச் சோதனை செய்யும் வரை டிரம்ப் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள் ஆவணங்களை ஒப்படைப்பதை எதிர்த்தனர். எஃப்.பி.ஐ அதிபர் பைடனுக்கு சாதகமாக நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

 

Share.
Leave A Reply