ரஷ்யாவை சமாளிக்க ஜெர்மனி தயாரிப்பான லெப்பர்ட்-2 பீரங்கியைக் கேட்கும் யுக்ரேனின் வேண்டுகோளை நிறைவேற்ற ஐரோப்பிய நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்த பீரங்கியை யுக்ரேன் கேட்பது ஏன்? அதன் வலிமை என்ன? போர்க்களத்தில் லெப்பர்டு பீரங்கியால் என்ன மாறுதலை கொண்டு வர முடியும்?

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டணியில் சேரும் யுக்ரேனின் முயற்சியால் ஆத்திரமடைந்த ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அந்நாட்டின் மீது படையெடுத்தது. யுக்ரைனின் முடிவு தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடிந்து விடும் என்பது ரஷ்யாவின் வாதம்.

 

யுக்ரேன் – ரஷ்யா போர் ஓராண்டை நெருங்குகிறது

ரஷ்யாவுக்கு எதிர்பார்த்த வேகத்தில் வெற்றி கிட்டவில்லை என்றாலும் போரின் தொடக்கத்தில் யுக்ரேனின் வடக்கிலும், கிழக்கிலும் ரஷ்யப் படைகள் முன்னேறி கணிசமான இடத்தைப் பிடித்தன.

ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேனால் சில நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிபுணர்களின் கணிப்புகளை பொய்யாக்கும் விதத்தில் யுக்ரேன் தீரத்துடன் போராடி ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட காலம் தங்களால் போரிட முடியும் என்று நிரூபித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொடுத்த ஆயுதங்கள் மற்றும் நிதியுதவியுடன் ரஷ்யாவை எதிர்கொண்ட யுக்ரேன் படைகள், அண்மைக் காலமாக போரின் போக்கையே மாற்றியுள்ளன. ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் கணிசமான இடங்களை யுக்ரேன் படைகள் மீட்டுள்ளன.

கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்க பாலம் தகர்க்கப்பட்ட காட்சி

ஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்த ஆயுதங்கள் அனைத்துமே தற்காப்புக்கானவை.

அதாவது, ரஷ்ய விமானப்படை. ஏவுகணை வீச்சை சமாளிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை மட்டுமே அந்நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கியுள்ளன.

கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்கு எதிராக போராடும் யுக்ரேன், போரை தனக்கு சாதகமாக்க, ஜெர்மனி தயாரிப்பான லெப்பர்ட்-2 பீரங்கிகளைத் தருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

போர்க்களத்தில் ரஷ்யா பிரதானமாக பயன்படுத்தும் டி-90 பீரங்கிகளின் தாக்குதலை லெப்பர்ட்-2 பீரங்கிகளை கொண்டு சமாளித்து விட முடியும் என்று யுக்ரேன் நம்புகிறது.
யுக்ரேன்

ரஷ்யாவின் டி-90 பீரங்கி

லெப்பர்ட்-2 பீரங்கியின் வலிமை என்ன?

வரலாற்று ரீதியாகவே, நிலத்தில் வல்லரசாக திகழும், உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, தனது மிக நீண்ட எல்லையை பாதுகாக்க ராணுவத்தில் பீரங்கிகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. ரஷ்யப் படையில் பிரதான தாக்குதல் ஆயுதமாக திகழும் டி-90 பீரங்கிகளை எதிர்கொள்ளும் வகையிலேயே லெப்பர்ட்-2 பீரங்கிகள் வடிவமைக்கப்பட்டன.

பனிப்போர் காலகட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த கிராஸ் – மஃபே வெக்மன்(Krauss-Maffei Wegmann) என்ற நிறுவனம் 1979-ம் ஆண்டு லெப்பர்ட்-2 பீரங்கியை அறிமுகப்படுத்தியது.

லெப்பர்ட்-1 பீரங்கிகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இது அமைந்தது. ஆயுத தளவாடங்கள் குறித்த மிலிட்டரி-டுடே இணையதளம் அளித்துள்ள தகவல்படி, அதிகபட்சம் மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் நகரக் கூடிய இந்த பீரங்கிகளைக் கொண்டு 550 கி.மீ. தொலைவு வரையுள்ள இலக்குகளை தாக்கி அழிக்க முடியும்.

இதன் எடை 67 டன். ரஷ்யாவின் டி-90 பீரங்கிகளைக் காட்டிலும் இது அதிகம். கமாண்டர் உள்பட 4 பேர் உள்ளிருந்து செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிரிகளின் நடமாட்டத்தை 360 டிகிரி கண்காணிக்கும் வசதி உண்டு. கண்ணி வெடிகள், பீரங்கிகளை அழிக்கும் எறிகணைகள் போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அம்சங்களும் உள்ளன.

லெப்பர்ட்-2 பீரங்கி
ஐரோப்பாவில் 13 நாடுகளிடம் லெப்பர்ட்-2 பீரங்கிகள் கையிருப்பு

போர்க்களத்தில் மிகச்சிறந்த பீரங்கிகளாக கருதப்பட்ட லெப்பர்ட்-2 பீரங்கிகள் ஆப்கன் போர்க்களத்தில் தனது வலிமையை நிரூபித்துள்ளன.

அன்றைய மேற்கு ஜெர்மனி தயாரிப்பில் உருவான இந்த பீரங்கிகள், ஐரோப்பாவில் மற்ற நேட்டோ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

தற்போதைய நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெப்பர்ட்-2 பீரங்கிகள் ஜெர்மனி உள்பட பல நாடுகளின் ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன.

ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, ஜெரமனி, கிரீஸ், ஹங்கேரி, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 13 ஐரோப்பிய நாடுகளில் லெப்பர்ட்-2 பீரங்கிகள் பயன்பாட்டில் இருப்பதாக ஐரோப்பிய கவுன்சிலின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

லெப்பர்ட்-2 பீரங்கியை யுக்ரேனுக்கு வழங்க போலந்து தயார்

ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்தில் அதிக அளவில் லெப்பர்ட்-2 பீரங்கிகள் புழக்கத்தில் இருப்பதால், கையிருப்பில் சிறு பகுதியை மட்டும் அந்நாடுகள் அளித்தாலே போதும் என்கிறது யுக்ரேன்.

அவ்வாறு, மொத்தம் 300 பீரங்கிகளைக் கொடுத்தாலே போரில் ரஷ்யாவை தோற்கடித்து விடுவோம் என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போரின் தொடக்கம் முதலே ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டுள்ள போலந்து, யுக்ரேனின் வேண்டுகோளை நிறைவேற்ற தயாராகவே இருக்கிறது.

யுக்ரேனுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவி வரும் போலந்து, லெப்பர்ட்-2 பீரங்கிகளை வழங்கவும் முன்வந்துள்ளது. இதேபோல் பின்லாந்தும் யுக்ரேனுக்கு உதவ உறுதியளித்துள்ளது.

போலந்தும், பின்லாந்தும் சேர்ந்து 25 லெப்பர்ட்-2 பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க தயாராகி வருகின்றன.
யுக்ரேனுக்கு லெப்பர்ட்-2 பீரங்கியை போலந்து வழங்குவதில் என்ன சிக்கல்?

யுக்ரேனுக்கு லெப்பர்ட்-2 பீரங்கியை வழங்க போலந்து தயாராக இருந்தாலும், அந்த பீரங்கியைத் தயாரித்த நாடு என்ற வகையில் ஜெர்மனியின் அனுமதியைப் பெறுவது அவசியம் என்ற விதிதான் இதுகாறும் அந்நாட்டை தடுத்து வைத்துள்ளது.

அண்மையில் பிரான்சைச் சேர்ந்த எல்.சி.ஐ. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இந்த தருணம் வரை எங்களிடம் அனுமதி கேட்கப்படவில்லை. ஒருவேளை கேட்கப்பட்டிருந்தால் நாங்கள் அதற்கு குறுக்கே நின்றிருக்க மாட்டோம்,” என்று ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னா பேர்பக் தெரிவித்தார்.

ஜெர்மனி அனுமதி தராவிட்டாலும் பீரங்கிகளை தருவோம் – போலாந்து

இதையடுத்து, லெப்பர்ட்-2 பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க அனுமதி வேண்டி ஜெர்மனியிடம் உடனே விண்ணப்பிக்கப் போவதாக போலந்து பிரதமர் மத்தேவுஸ் மொராவியட்ஸ்கி மறுநாளே தெரிவித்தார்.

ஒருவேளை ஜெர்மனி அனுமதி தராமல் போனாலும் கூட யுக்ரேனுக்கு லெப்பர்ட்-2 பீரங்கிகளை போலந்து வழங்கும் என்று அவர் கூறினார்.

“ஜெர்மனியின் ஒப்புதல் கிடைக்காமல் போனாலும், கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் மற்ற நாடுகளுடன் சேர்ந்து, எங்கள் பீரங்கிகளை உக்ரைனுக்கு அளிப்போம்,” என்றார் மத்தேவுஸ் மொராவியட்ஸ்கி.

போலந்து பிரதமர் மத்தேவுஸ் மொராவியட்ஸ்கி

லெப்பர்ட்-2 பீரங்கி யுக்ரேனுக்கு எந்த வகையில் உதவும்?

ரஷ்ய பீரங்கிகளைக் காட்டிலும் மேற்கத்திய தயாரிப்புகள் மிகவும் கனமானவை. இதனால் போர்க்களத்தில் அனைத்து சூழலிலும் அதனை பயன்படுத்த முடியாது என்கிறார் பாதுகாப்பு நிபுணரான முனைவர் ஜாக் வாட்லிங். அவர், ராயல் யுனைடெட் சர்வீசஸ் கல்வி நிறுவனத்தில் தரைவழிப் போர் குறித்து ஆராயும் மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார்.

“மேற்கத்திய நாடுகள் தயாரித்துள்ள பீரங்கிகள் கனமானவை என்பதால் உக்ரைனில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்களை கடக்க முடியாது.

ஆகவே, அவற்றிற்கென பிரத்யேக மேம்பாலங்களை உடனுக்குடன் அமைக்க வல்ல வாகனங்களும் உடன் அணிவகுத்துச் செல்ல வேண்டியிருக்கும்,” என்பது அவரது கருத்து.

“யுக்ரேனில் ஆறுகள் குறுக்கிடாத இடங்களில் மட்டுமே இந்த வகை பீரங்கிகளை பயன்படுத்த முடியும். மேலும், சதுப்பு நிலம் மற்றும் சகதியில் சிக்கிக் கொள்ளும் என்பதால் அத்தகைய இடங்களிலும் இந்த பீரங்கிகளை பயன்படுத்த முடியாது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

அதேநேரத்தில், யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கும் பீரங்கிகளை உடனே தாக்கி அழிக்க ரஷ்யா முனையும் என்பதால், அவை ரஷ்யப் படைகளின் உடனடி இலக்குகளாகி விடக் கூடும் என்றும் ஜாக் வாட்லிங் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply