2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், கெய்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஹர் சலீம் தலைமையிலான குழு சிடி ஸ்கேனரை பயன்படுத்தி மம்மியை ஆய்வு செய்தபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இந்த உடலில் 21 வகையான 49 தாயத்துகள் இருந்தது இந்தச் சோதனையில் தெரியவந்துள்ளது.
அதில், பெரும்பாலானவை தங்கத்தால் ஆனவை. இதன் காரணமாகவே இந்த மம்மிக்கு `தங்க பையன்` என்று பெயரிட்டதாக ஃப்ரென்டியர்ஸ் இன் மெடிசின்(Frontiers in Medicine) என்ற சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் சலீம் கூறியுள்ளார்.
மறைந்திருந்த பொக்கிஷம்
ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகள் கொண்டுள்ள இந்தச் சிறுவனிடம் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது எந்தவித நோய் பாதிப்பும் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை.
மேலும், உயர்தரம் வாய்ந்த பதப்படுத்தல் செயல்முறை மூலம் அவரது உடலின் எச்சங்கள் பதப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ஸ்கேன் முடிவுகள் இந்தச் சிறுவன் உயர்வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை உறுதிசெய்துள்ளது.
அந்த இளைஞனின் உடலை மூடியிருந்த உறைக்குக் கீழே இரண்டு விரல்கள் அளவிற்கு நீளம் கொண்ட ஒரு பொருள் முன்தோல் நீக்கப்படாத ஆண்குறிக்கு அருகில் இருந்தது. மேலும், வாயில் ஒரு தங்க நாக்கு இருந்தது.
மறுபிறவியில் பாதுகாப்பு மற்றும் சக்தி கிடைப்பதற்காக இறந்தவர்கள் சடலத்தின்மீது தாயத்துகளை வைக்கும் பண்டைய எகிப்தியர்களின் சடங்கை சலீம் நினைவுகூர்ந்தார். இறந்தவருக்கு மறுபிறவியில் பேசும் திறன் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக தங்க நாக்குகள் வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தெற்கு எகிப்தின் எட்ஃபு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தாலமிக் கால பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் (கி.மு. 332-30) கருதப்படும் இந்த மம்மி, பிரிட்டிஷ் ஹோவர்ட் கார்ட்டரால் கிங்ஸ் பள்ளத்தாக்கில் துட்டகாமனின் கல்லறை கண்டுபிடிக்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது.
இந்த எச்சங்கள் இரண்டு சவப்பெட்டியால் பாதுகாக்கப்பட்டிருந்தன. உட்பகுதி மரத்தால் செய்யப்பட்டிருந்தது.
வெளிப்புறத்தில் கிரேக்க மொழியில் எழுத்துகள் இருந்தன. அதோடு, அதன் தலையில் தங்க முகமூடியும் இருந்தது.
முறையாக ஆய்வு செய்ய வேண்டும்
இந்தக் கண்டுபிடிப்பை பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான முன்னோட்டமாக சலீம் கருதுகிறார்.
“19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தில் நடந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் விளைவாக ஆயிரக்கணக்கான பண்டைய உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
அவற்றில் பல இன்னும் திறக்கப்படாமல் சவப்பெட்டிகளுக்குள் உள்ளன” என்கிறார் சலீம். ‘`1835ஆம் ஆண்டு கெய்ரோவில் தொடங்கப்பட்ட எகிப்து அருங்காட்சியகம் இது மாதிரியான கண்டுபிடிப்புகளின் களஞ்சியமாகச் செயல்பட்டு வருகிறது.
ஆனால், அதன் அடித்தளம் முறையாக ஆய்வு செய்யப்படாமல் அல்லது காட்சிப்படுத்தப்படாமல் பல தசாப்தங்களாக பூட்டிவைக்கப்பட்டிருக்கும் இது போன்ற மம்மிகளால் நிறைந்துள்ளது,“ என்றும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில், மம்மிகளில் இருந்து கவச உறைகள் அகற்றப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக அவை சிதைக்கப்பட்டதாக சலீம் கூறுகிறார்.
ஆனால், தற்போதுள்ள கம்ப்யூட்டட் டோமோகிராஃபி (computed tomography) நுட்பம், மம்மிகளை சேதப்படுத்தாமல் ஆய்வு செய்ய ஒரு சிறந்த கருவியாக மாறும் என்றும், இது பண்டைய கால மனிதர்களின் ஆரோக்கியம், நம்பிக்கைகள் மற்றும் திறன்கள் குறித்து கூடுதலாக ஆராயவும் உதவும் என்கிறார் சலீம். “கம்ப்யூட்டட் டோமோகிராஃபி கதிரியக்க துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
ஒரு படத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதன் மூலம் உடலின் சிறு பகுதிகளின் நூற்றுக்கணக்கான கணிப்புகளை ஒன்றிணைத்து முழுமையான முப்பரிமாண மாதிரியை உருவாக்க முடியும்” என்றும் சலீம் கூறுகிறார்.
தங்க இலையால் மூடப்பட்ட மம்மி
சக்காரா
4,300 ஆண்டுகளாக திறக்கப்படாத சவப்பெட்டியில் இருந்து தங்க இலையால் மூடப்பட்ட மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழனன்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஹெகாஷெப்ஸ் என்ற மனிதரின் எச்சமான இந்த மம்மி, இதுவரை எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான மற்றும் அரசர் அல்லாதவரின் சடலமாகக் கருதப்படுகிறது.
இது, தெற்கு கெய்ரோவில் சக்காரா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் இடுகாட்டில் 15 மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அங்கு வேறு மூன்று கல்லறைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரகசியக் காப்பாளரின் கல்லறை.
பண்டைய நெக்ரோபோலிஸில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் மிகப் பெரிய மம்மி, க்னும்ட்ஜெடெஃப் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. இவர் பாதிரியார் மற்றும் அரண்மனைகளின் மேற்பார்வையாளர்.
மற்றொரு கல்லறை மெரி என்பவருக்குச் சொந்தமானது. இவர் அரண்மனையில் ரகசியக் காப்பாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்தவர்.
மற்றொரு கல்லறை நீதிபதியும் எழுத்தாளருமான ஃபெடெக் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது.
இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப்பெரிய மம்மிகளாக கருதப்படும் பல மம்மிகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கல்லறைகளோடு மண்பாண்டங்கள் உட்பட பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்தின் முன்னாள் தொல்லியல் துறை அமைச்சரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஜாஹி ஹவாஸ், இவை அனைத்தும் கிமு.25 முதல் 22 காலகட்டத்தைச் சேர்ந்தது என்கிறார்.
“அரசர்களை அவர்களைச் சுற்றியுள்ள மக்களுடன் இணைப்பதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது,” என்கிறார் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலி அபு தேஷிஷ்.
சக்காரா 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்பாக இயங்கிய இடுகாடாகும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற இந்தத் தளம், பண்டைய எகிப்து தலைநகர் மெம்பிஸில் அமைந்துள்ளது.
ஸ்டெப் பிரமிடு உட்பட ஒரு டஜனுக்கும் மேலான பிரமிடுகள் இங்கு உள்ளன. தெற்கு எகிப்திய நகரமான லக்சரில் ரோமானிய காலத்தைச் சேர்ந்த ஒரு முழுமையான குடியிருப்பு நகரத்தைக் கண்டுபிடித்ததாக வல்லுநர்கள் கூறியதற்கு மறுநாள், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்களது சுற்றுலாத்துறையைப் புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அண்மைய ஆண்டுகளில் பல முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்புகளை எகிப்து அறிவித்துள்ளது.
இந்தாண்டு திறக்கப்பட உள்ள பிரமாண்ட எகிப்து அருங்காட்சியகம், 2028ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
ஆனால், விரிவான ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஊடக கவனம் பெறும் கண்டுபிடிப்புகளில் எகிப்து கவனம் செலுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.