உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததன் மூலம், இரா. சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) அறிவித்திருக்கின்றது.

புதிதாக கூட்டணி அமைத்துள்ள டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி ஆகியன தங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக முன்னிறுத்தத் தொடங்கி இருக்கின்றன.

புதிய கூட்டணிக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (D.T.N.A) என்கிற பெயரும், ‘குத்துவிளக்கு’ சின்னமும் இருக்கின்ற போதிலும், கூட்டமைப்பு (T.N.A) என்கிற அடையாளத்தை தம்மோடு வைத்துக் கொள்ள புதிய கூட்டணி விரும்புகின்றது.

அதன் மூலம், தமிழரசுக் கட்சியோடு ‘முட்டல் மோதலை’ தொடர்ந்தும் பேண முடியும். அது, தமிழ் மக்களிடத்தில் கவனம் பெறுவதற்கு உதவும் என்பது ஓர் அரசியல் உத்தி.

கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி 60 சதவீதமான பங்கையும் மற்றைய பங்காளிக் கட்சிகள் இரண்டும் 40 சதவீதமான பங்கையும் ஆசனப் பங்கீடுகள் தொடங்கி, தொகுதிப் பங்கீடுகள் வரையில் பேணி வந்திருக்கின்றன.

குறிப்பாக, டெலோவும், புளொட்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றின் போது, வேட்பாளர்களை தேடிக் கொள்வதில் சிக்கல்களைச் சந்திக்கும் போது, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் அந்தக் கட்சிகளின் பங்கீடுகளுக்கு ஊடாக கூட்டமைப்பில் போட்டியிட்டு இருக்கிறார்கள்.

அதனால், கூட்டமைப்பில் இருப்பவர்களில் 75 சதவீதமானவர்கள் தங்களது கட்சிக்காரர்கள் என்கிற எண்ணம் தமிழரசுக் கட்சியினருக்கு உண்டு.

அதனால்தான், கூட்டமைப்பின் தீர்மானங்களை சம்பந்தனும் எம்.ஏ சுமந்திரனும் ஏக நிலையில் நின்று எடுத்து வந்திருக்கிறார்கள்.

அந்தத் தீர்மானங்கள் மீது அதிருப்திகள் இருந்த போதிலும், டெலோவோ, புளொட்டோ எதிர்ப்பை வெளியிடுவதில்லை.

இந்த நிலையின் தொடர்ச்சி, கூட்டமைப்பு என்றால் தமிழரசுக் கட்சிதான்; ஏனைய இரு கட்சிகளும் இரண்டாம் நிலையில் இருப்பன என்பது சம்பந்தன் தொடங்கி, தமிழரசுக் கட்சியின் கடைநிலை ஆதரவாளர் வரையில் எண்ணமாக இருந்தது.

ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி கொண்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் டெலோ, புளொட் கட்சிகளுக்குள் இருந்து வந்தவர்கள்.

கூட்டமைப்புக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் உறுப்புரிமையை தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டது. அந்த உறுப்பினரும் இல்லை என்றால், தமிழரசுக் கட்சி சார்பில் ஐந்து உறுப்பினர்களே வெற்றி பெற்றிருப்பார்கள்.

இது, கூட்டமைப்புக்குள் கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சிக்கும் மற்றைய இரு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 50:50 என்கிற நிலையை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியது.

தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக ‘பெரியண்ணன்’ மனநிலையில் தங்களை கையாண்டு வந்திருக்கின்ற சூழலில், தற்போது கிடைத்திருக்கின்ற பிடியை வைத்துக் கொண்டு, கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்து, கூட்டுத் தலைமைக்கான சூழலை ஏற்படுத்திவிட வேண்டும் என்று டெலோ எண்ணியது.

அந்த எண்ணத்துக்கு புளொட்டும் இசைந்தது. அரசியல் என்பது சந்தர்ப்பங்களை கையாளும் வித்தை என்கிற நிலையில், டெலோவும், புளொட்டும் அந்த நகர்வை எடுத்தன.

ஆனால், கூட்டமைப்பு என்கிற பெயரில் தமிழரசுக் கட்சியின் ஊடாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு, பங்காளிக் கட்சிகள் குடைச்சல் கொடுத்து வருகின்றன என்பது, தமிழரசுக் கட்சியின் தொடர் எரிச்சல்.

அதனால், தனித்துப் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்காக அந்தக் கட்சி காத்திருந்தது. தமிழ்த் தேசிய பரப்பில் இப்போது இருக்கின்ற கட்சிகளில் மிகப்பெரிய கட்சி தமிழரசுக் கட்சிதான்.

அதற்குத்தான் பருத்தித்துறை தொடக்கம் பொத்துவில் வரைக்கும் கிளைக் கட்டமைப்புடன் கூடிய கட்சிக் கட்டமைப்பு பலமாக இருக்கின்றது.

அந்தக் கட்சியின் உறுப்பினர்களுக்கான அங்கிகாரம் என்பது, பங்காளிக் கட்சிகளால் பறிக்கப்படுவதான குற்றச்சாட்டு கீழ் மட்டத்திலேயே உண்டு.

அதனால், தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற எண்ணம் மேல் மட்டத் தலைவர்களிடத்தில் மாத்திரமல்ல, கீழ் மட்டத்திலிருந்தும் எழுந்து வந்த ஒன்று.

அந்தச் சுவடை கவனிக்காமல் டெலோவும் புளொட்டும் தங்களது பங்கைக் கோர முனைந்த போது, தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்.

சம்பந்தன் இருக்கும் வரையில் கூட்டமைப்பு என்கிற அடையாளத்திலிருந்து தமிழரசுக் கட்சி விலகி நிற்பதற்கோ, தனித்து தேர்தலில் போட்டியிடுவதற்கோ வாய்ப்புகள் இல்லை. அதற்கு அவர் அனுமதிக்க மாட்டார் என்று பங்காளிக் கட்சிகள் நினைத்தன.

அத்தோடு, சம்பந்தனின் காலத்துக்குள் தங்களுக்கான தலைமைத்துவ பங்கீட்டை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அந்தக் கணக்கு ஆரம்பத்தில் இருந்து பிழையாகவே இருந்தது.

ஏனெனில், சம்பந்தன் தமிழினத் தலைவராக தன்னை அடையாளப்படுத்துவதற்காக மாத்திரமே கூட்டமைப்பின் தலைவர் என்கிற நிலையில் தன்னை வைத்துக் கொண்டாரே அன்றி, கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய அரசியல் வளர வேண்டும் என்றோ, பங்காளிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றோ அல்ல!

சம்பந்தனைப் பொறுத்தளவில், அவர் எப்போதுமே தன்னையொரு பாரம்பரிய தமிழரசுக் கட்சிக்காரனாகவே நினைத்து வந்திருக்கிறார்.

அதுபோலவே, முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஜனநாயக அரசியலுக்குள் வருவதற்கு தகுதியற்றவர்கள் என்பது அவரது எண்ணம். அதனை, அவர் பொது வெளியிலும் காட்டியிருக்கின்றார்.

டெலோவின் செல்வம் அடைக்கலநாதனுக்கோ, புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கோ, கடந்த காலத்தில் கூட்டமைப்பில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சுரேஷ் பிரேமசந்திரனுக்கோ அது தெரியாதது அல்ல.

ஆயுதப் போராட்ட இயக்கங்களை எல்லாம் இணைத்துக் கொண்டு, இயங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி, சம்பந்தன் எரிச்சலடைந்து இருக்கிறார்.

ஓர் ஒப்பீட்டு உதாரணமாகக் கூறினால், சித்தார்த்தன் மீதான சம்பந்தனின் அணுகுமுறை என்பது, புளொட்டின் தலைவர் என்ற நிலையைத் தாண்டி, தமிழரசுக் கட்சியின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கத்தின் மகன் என்கிற அளவிலேயே இருந்திருக்கின்றது. சம்பந்தனுக்கு தமிழரசு கட்சி சார்புதான் மிகப்பெரிய பிணைப்பு.

இப்படியான எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஒருவரிடத்தில் சென்று, தமிழரசுக் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் விடயங்களை பங்காளிக் கட்சிகள் கோரினால், அதற்கு அவர் இணங்குவார் என்பதெல்லாம் அபத்தமானது.

அதுவும், சம்பந்தனோடு கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலம் பயணிக்கும் செல்வத்துக்கு அது தெரியவில்லை என்பதையெல்லாம் எப்படி புரிந்து கொள்வது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடிப் பிரசார நடவடிக்கைகளால் கூட்டமைப்பு 2004 பொதுத் தேர்தலில் பெருவெற்றி பெற்றது. அன்று முதல் இன்று வரை, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக சம்பந்தன் பதவி வகித்து வருகிறார்.

கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாகவோ, கூட்டணியாகவோ பதிவு செய்யப்பட்டு, சொந்தச் சின்னத்தைப் பெற்றுக் கொண்டிராத நிலையில், தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிட்டு வந்திருக்கின்றது.

அதனால், பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியின் ஊடாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள். அதனால், சம்பந்தன் தன்னை 2014 பிற்பகுதி வரையில், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்ற அடையாளத்தினூடாகவே முன்னிறுத்தினார். அப்போதும் அவர்தான் கூட்டமைப்பின் தலைவர்.

ஆனால், அவர், உத்தியோகபூர்வ மற்றும் மரபார்ந்த விடயங்களில் ஒழுகும் ஒருவராக தன்னை தமிழரசுக் கட்சி அடையாளங்களினூடாக முன்னிறுத்துவதில் கவனமாக இருந்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளாகத்தான், கூட்டமைப்பின் தலைவர் என்ற அடையாளத்தை அவர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். ஆவணங்களிலும் அப்படி எழுத முனைந்தார்.

இப்படிப்பட்ட மனநிலையோடு இருக்கின்ற ஒருவரை நோக்கி, நீங்கள் கூட்டமைப்பின் தலைவர் இல்லை; உங்களது பதவி வறிதாகி விட்டது என்று டெலோவோ, புளொட்டோ கூறினால், அது பற்றி அலட்டிக் கொள்ளும் நிலையில் சம்பந்தன் இல்லை.

புதிய கூட்டணி அமைத்து, தங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக டெலோவும் புளொட்டும் அறிவித்துக் கொண்டமை தொடர்பில், ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தன் அளித்த பதில், பங்காளிக் கட்சிகளை அவர் எந்த நிலையில் வைத்திருந்தார் என்பதை உணரப் போதுமானது.

அதாவது, “தேர்தலில் மக்கள், யார் கூட்டமைப்பு என்பதை புரியவைப்பார்கள்; மற்றப்படி எதற்கும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை” என்றார்.

அதுபோலத்தான், தமிழரசுக் கட்சிக்குள் சி.வி.கே சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர யாரும், புதிய கூட்டணி தங்களை கூட்டமைப்பாக முன்னிறுத்துவது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

ஏனெனில், சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் தொடங்கி பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சியாக அடையாளம் பெறுவதையும், வளர்வதையுமே குறியாகக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால், கூட்டமைப்பு உரிமை கோரலின் ஊடாக, அரசியல் சர்ச்சையை தோற்றுவித்து கவனம் பெறலாம் என்று நினைத்த புதிய கூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முயற்சி, பெரியளவில் எடுபடவில்லை என்பதுதான் யதார்த்தம்.

Share.
Leave A Reply