மெம்ஃபிஸ் காவல்துறை அதிகாரிகளான டெமிட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர், எமிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன் ஆகியோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய விளக்கங்கள் உள்ளன.

அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் டயர் நிக்கோல்ஸ் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதில், போலீஸார் அவரை அடித்துத் துன்புறுத்துவது, மிளகு ஸ்பிரே தெளிப்பது, நிக்கோல்ஸ் “அம்மா” எனக் கதறுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரைச் சேர்ந்த டயர் நிக்கோல்ஸ் என்பவரை ஜனவரி 7ஆம் தேதியன்று, இரவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

கவனக் குறைவாக வாகனத்தை இயக்கியதாகக் கூறி, அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தியதோடு, மிளகு ஸ்பிரேவையும் போலீசார் தெளித்துள்ளனர்.

போலீஸாரின் தாக்குதலில் படுகாயம் அடைந்த நிக்கோல்ஸ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும், மூன்று நாட்கள் கழித்து சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட டிமெட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ், எமிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன் ஆகிய 5 காவலர்களும் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கடந்த 26ஆம் தேதி அவர்கள் கைது செய்யப்பட்டதோடு, கொலை, கடத்தல், ஒழுங்கீனம் போன்ற பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், டயர் நிக்கோல்ஸ் மீது போலீஸார் நடத்திய தாக்குதலின் காட்சிகள் இடம்பெற்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட வீடியோ, உடல் கேமராக்கள் மற்றும் ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

வன்முறை நிறைந்த இந்த வீடியோ காட்சிகளை பிபிசி ஆய்வு செய்தது. இந்தக் கட்டுரையில் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படக்கூடிய விளக்கங்கள் உள்ளன.

வெள்ளிக்கிழமை பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்பாக நிக்கோல்ஸ் குடும்பத்தினர்,

அவர்களது சட்டக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் எனக் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே இந்த வீடியோக்களை பார்த்திருந்தனர்.

பகுதி ஒன்று: போலீஸார் உடலில் பொருத்தியிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது என்ன?

முதல் வீடியோவில், நிக்கோல்ஸை போலீசார் தடுத்து நிறுத்துவது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. எந்த வீடியோவிலும், நிக்கோல்ஸ் எதற்காக தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது காட்டப்படவில்லை.

ஆனால் அவர் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு நிமிடத்திற்குள், அதிகாரிகள் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதையும் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகக் கத்துவதையும், அவரது காரில் இருந்து அவரை வெளியேற்ற உத்தரவிடுவதையும் கேட்கலாம்.

“நான் எதுவும் செய்யவில்லை ” என நிக்கோல்ஸ் கூறுகிறார்.

தான் குற்றமற்றவன் என்று அவர் கூறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது, அவரை தரையில் முட்டிபோட வைத்த போலீஸார், அவரது கைகளை உடைத்துவிடுவதாக மிரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

போலீசாரிடம் இருந்து அவர் தன்னை விடுவித்துக்கொண்டு செல்ல முயன்றபோது கைகலப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் மிளகு ஸ்பிரேவை தெளிக்கின்றனர். ஒருமுறை டேசர் துப்பாக்கியை பயன்படுத்தவும் முயன்றுள்ளனர்.

எனினும் அதிகாரிகள் மீதே மிளகு ஸ்பிரே பட்டுள்ளது. இந்த வீடியோவின் முதல் பகுதியில் அவர் மீண்டும் காணப்படவில்லை. மீதமுள்ள காட்சிகளில், பெப்பர் ஸ்பிரே அடித்த பிறகு அதிகாரிகள் கண்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதைக் காட்டுகிறது.
அமெரிக்காவில் போலீஸ் தாக்குதலில் இளைஞர் உயிர் இழப்பு

பகுதி இரண்டு: கம்பத்தில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது என்ன?

நிக்கோல்ஸை மடக்கிப் பிடிக்கும் போலீஸார் அவரை தரையில் தள்ளுகின்றனர். இரண்டு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மூன்றாவது அதிகாரி அவரை நோக்கிச் சென்று தலையில் இருமுறை உதைப்பதைக் காணலாம்.

உடனே, 4வது அதிகாரி தனது லத்தியால் நிக்கோல்ஸை தாக்கினார். அவர் பலமுறை நிக்கோல்ஸுக்கு குத்தும் விட்டுள்ளனர்.

இதில் தடுமாறிய நிக்கோல்ஸ் மேற்கொண்டு எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஒருகட்டத்தில் அவர் தரையில் சுருண்டு இருப்பதும் போலீஸார் அவரைத் தாக்காமல் இருப்பதும் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து நிக்கோல்ஸை போலீஸ் வாகனத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவர் மீது டார்ச் விளக்கை அடித்துப் பார்க்கின்றனர். அவர் பதிலளிக்கும் நிலையில் இருந்தாரா என்பது தெளிவாகவில்லை.


பகுதி மூன்று: அம்மா என்று கதறி அழுத நிக்கோல்ஸ்

போலீஸார் உடலில் இருந்த கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவில் இதே சம்பவம் மற்றொரு கோணத்திலும் குரல்களுடனும் பதிவாகியிருந்தது.

அதிகாரிகள் இருவர் நிக்கோல்ஸை தாக்குவது, மிளகு ஸ்பிரே தெளித்துவிடுவேன் என மிரட்டுவது ஆகியவை பதிவாகியுள்ளன.

வலியில் நிக்கோல்ஸ் “அம்மா” என்று கதறுகிறார்.

கையைக் கொடுக்கும்படி நிக்கோல்ஸிடம் போலீசார் கூறி மற்றொரு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உடலில் கேமரா அணிந்திருந்த அதிகாரி, மோதலின்போது பெப்பர் ஸ்ப்ரேவால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பின்னணியில், அதிகாரிகள் கத்துவதைக் கேட்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து, உடலில் கேமரா அணிந்திருந்த அதிகாரி, நிக்கோல்ஸை நோக்கி கத்துவதும் தனது லத்தியால் பலமுறை அவரைத் தாக்குவதும் பதிவாகியுள்ளது.

தாங்கள் இருந்த இடத்திற்கு, மேலும் சில அதிகாரிகளை உடலில் கேமரா அணிந்திருந்த அதிகாரி அழைக்கிறார்.

இதேபோல், நிக்கோல்ஸ் தன்மீது தானே ஸ்பிரேவை தெளித்துக்கொண்டதாக ஓர் அதிகாரி மற்றொருவரிடம் சொல்வதையும் கேட்க முடிகிறது.

உடலில் கேமரா அணிந்திருந்த அதிகாரி களைப்பினால் மூச்சிறைக்க நடந்து செல்வதுடன் வீடியோ முடிகிறது.

இடதுபுறத்தில் இருந்து: டெமிட்ரியஸ் ஹேலி, டெஸ்மண்ட் மில்ஸ் ஜூனியர், எம்மிட் மார்ட்டின் III, ஜஸ்டின் ஸ்மித், டடாரியஸ் பீன்

பகுதி நான்கு: ரத்தக்களரியாக காட்சியளிக்கும் நிக்கோல்ஸ்

பெயர் வெளியிடப்படாத மற்றோர் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த இறுதி வீடியோவில், மூன்றாவது வீடியோவில் இடம்பெற்றிருந்த காட்சிகளே உள்ளன.

நிக்கோல்ஸை அதிகாரிகள் துரத்துவதில் தொடங்கும் வீடியோ, அவரை அதிகாரிகள் சமாளிப்பதுடன் முடிகிறது.

முதல் சில நிமிடங்களுக்குப் பிறகு அதிகாரியிடம் இருந்து கேமரா பிடுங்கப்பட்டதுபோல் தெரிவதால், எந்தக் காட்சிகளும் இடம்பெறவில்லை. குரல் மட்டுமே கேட்கிறது.

நிக்கோல்ஸ் மீண்டும் அம்மா என்று கூறுவதும், அதிகாரிகள் அவரைத் தகாத வார்த்தைகளில் வசைபாடுவதும் கேட்கிறது.

ஒருகட்டத்தில், நிக்கோல்ஸ் போதை மருந்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று நினைத்ததாகக் கூறுவதும் கேட்கிறது.

மீண்டும் போலீசாரிடம் கேமரா வந்ததும், நிக்கோல்ஸ் போலீஸ் காரை நோக்கி அழைத்துச் செல்லப்படும் காட்சி தெரிகிறது.

அவர் காயமடைந்து, தலையில் ரத்தம் வழிந்துகொண்டிருந்த நிலையில் காணப்படுகிறார். அவர் எதுவும் பேசவில்லை.

காணொளியின் கணிசமான பகுதி அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசுவதையும் சம்பவத்தின் விவரங்களை விவரிப்பதையும் காட்டுகிறது.

ஒருசில அதிகாரிகள் நிக்கோல்ஸ் தங்களது துப்பாக்கியைப் பறிக்க முயன்றதாகக் கூறுகின்றனர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு வீடியோவில் எந்த ஆதாரமும் தென்படவில்லை.

மொத்தத்தில், சுமார் 10 அதிகாரிகள் நிற்கிறார்கள். ஆனால், காயமடைந்து காணப்படும் நிக்கோல்ஸுக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

வீடியோவின் கடைசி நிமிடங்களில் சில மங்கலாக உள்ளன. சில பகுதிகள் மாநிலத்தின் பொதுப் பதிவுகள் சட்டங்களின்படி திருத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share.
Leave A Reply