இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த மூவர் சட்டத்தரணி ஊடாக நேற்று (25) சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் காரில் பயணித்த கனி என்றழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன் வாகனம் ஒன்றினால் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டது. விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீ வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்..

இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடிருந்தனர்.

ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலைத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து என்றழைக்கப்படும் மூவர் வவுனியாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளனர்.

மேலும் நான்கு பேர் குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புபட்டுள்ளனர் எனவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply