கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேரிகை அருகே உள்ள நெரிகம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி.

கூலித் தொழிலாளியான இவரது மகள் பெயர் பிரியங்கா (வயது 22). இவர் கடந்த சில மாதங்களாக ஓசூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

இதனிடையே பிரியங்காவிற்கும், பேரிகை அருகே முதுகுறுக்கி என்னும் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் என்ற வாலிபருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்கள் முன்பாக தனது காதலி பிரியங்காவின் தந்தையான வெங்கடசாமியை போனில் தொடர்பு கொண்ட ஸ்ரீதர், மகளைக் கடத்தி விட்டோம் என்றும் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என்றும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது.

இதற்கு மத்தியில் பகலூர் ராமன் தொட்டி வனப்பகுதி அருகே இளம்பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக விசாரிக்க சம்பவ இடம் சென்ற போலீசார், இளம்பெண் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்து கிடந்த பெண் பிரியங்கா என்பது தெரிய வந்தது.

முன்னதாக, ஸ்ரீதர் மிரட்டுவது பற்றி பிரியங்காவின் தந்தையும் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதன் பின்னர், பிரியங்காவின் காதலரான ஸ்ரீதரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்கள் முன்பாக மாலை நேரத்தில் பிரியங்காவை வெளியே அழைத்துச் சென்ற காதலன் ஸ்ரீதர், அதன்பின்னர் காதலியின் தந்தை வெங்கடசாமிக்கு அழைத்து 10 லட்ச ரூபாய் பணம் கேட்டும் மிரட்டியதாகவும், ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்ததன் காரணமாக காதலியை கொலை செய்திருக்கலாம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

10 லட்ச ரூபாய்க்காக காதலியை இளைஞர் ஒருவர் கொலை செய்ததாக சிக்கியுள்ள இந்த செய்தி தற்போது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

காதலி வங்கியில் பணிபுரிந்து வந்ததால் அவரிடம் பணம் கேட்டு தகராறு உருவாகி இப்படி நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

Share.
Leave A Reply