பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தினத்தை வடக்கு, கிழக்கு மக்களின் கறுப்பு தினமாக கருதி வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடைத்து அரசாங்கத்துக்கு எதிராக ஹர்த்தாலை அமுல்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ஏ. விஜயகுமார் உள்ளிட்ட குழுவினர் நேற்று (02) இரவு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தனர்.

இலங்கை மக்கள் நாளை சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என அரசாங்கம் கூறினாலும், வடக்கு, கிழக்கு மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்காததால், வடக்கு, கிழக்கு மக்கள் அனைவரும் கறுப்புக்கொடி காட்டுமாறு பல்கலைக்கழக முதுநிலை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவர்களின் வீட்டின் முன் அல்லது வீதியில் சென்று நாளை சுதந்திர தினத்தைப் புறக்கணிக்க வேண்டும்.

அத்துடன், யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மக்களின் காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, போரினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் இருந்தாலும் எந்த அரசாங்கமும் இப்பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வை வழங்கவில்லை. எனவே வடக்கு கிழக்கு மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்காக தொடர்ந்தும் போராடுவோம் என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்கள், பஸ் சங்கங்கள் மற்றும் அனைத்து சிவில் அமைப்புகளும் நாளை நடைபெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply