பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவிக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலால், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவிலிருந்து பன்னீர்செல்வம் பின்வாங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் அணி வேட்பாளருக்கே இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க உத்தரவிட வேண்டுமென, எடப்பாடி பழனிசாமி அணி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுடைய ஒப்புதலைப் பெற்று, வேட்பாளர் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

இதனால் வேட்பாளரைத் தேர்வுசெய்து, தேர்தல் ஆணையத்தில் விவரங்களைச் சமர்ப்பிக்கவேண்டிய பொறுப்பு, எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு சென்றிருக்கிறது.

இதையடுத்து, வேட்பாளர் விவரங்கள்கொண்ட சுற்றறிக்கையை அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறும் பணியை தமிழ்மகன் உசேன் தொடங்கிவிட்டார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் படிவங்கள், அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்டச் செயலாளர்கள் வாயிலாக, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டிருக்கிறது.

சென்னையிலுள்ள மாவட்டச் செயலாளர்கள் மட்டும் படிவங்களை நேரில் பெற்றுச் செல்கின்றனர்.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எந்த வேட்பாளருக்கு என்ற விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கை, நாளை இரவுக்குள் தயார்செய்யப்பட்டு, பிப்ரவரி 6-ம் தேதி சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதிமுக-வின் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களுக்கும் படிவங்கள் அனுப்பப்பட்டாலும், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்கப்போகிறது என்பதால், பழனிசாமி அணியின் வேட்பாளரான தென்னரசுவே தேர்வுசெய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

இதனால் பன்னீர்செல்வம் அணி போட்டியிலிருந்து விலகுவது என முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏனெனில், பொதுக்குழுவில் மிகச்சொற்ப எண்ணிக்கையில்தான் ஆதரவு இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிடும் என்று பன்னீர்செல்வம் தரப்பு கருதுகிறதாம். இது ஒற்றைத் தலைமை என்ற பழனிசாமி அணியின் வாதத்துக்கு வலு சேர்த்துவிடும் என்றும் பன்னீர்செல்வம் அணியினர் கருதுவதாகக் கூறப்படுகிறது.

பன்னீர்செல்வம்

ஒருவேளை பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில், பழனிசாமி அணியின் வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்டால், இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது அரசியல் விபரீதங்களுக்கு வழிவகுத்துவிடும் என்பதும் பன்னீர்செல்வம் தரப்பின் அச்சம்.

எனவேதான் போட்டியிலிருந்து விலகுவது என்ற முடிவுக்கு பன்னீர்செல்வம் தரப்பு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இடைத்தேர்தல்தானே… விட்டுப் பிடிக்கலாம் என பன்னீருக்கு நெருக்கமானவர்களும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

பன்னீர்செல்வம் தரப்பு போட்டியிலிருந்து விலகிவிட்டாலே அதிமுக முழுமையாகத் தங்கள் வசம் வந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என பழனிசாமி அணி உற்சாகத்தோடு காணப்படுகிறதாம்.

அதே உற்சாகத்தோடு தேர்தல் பணிகளிலும் அனல் பறக்க ஈடுபட முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்மகன் உசேன் நியமனமே செல்லாது என்றபோது, அவரால் வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்டு அனுப்பிவைப்பதை மட்டும் எப்படி ஏற்க முடியும் என வாதங்களை முன்வைக்க பன்னீர்செல்வம் தரப்பு ஆயத்தமாகிவருகிறது.

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடந்த பொதுக்குழுவில், தமிழ்மகன் உசேன் அதிமுக-வின் அவைத்தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர், ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில்தான் பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார்.

அந்தப் பொதுக்குழுவில்தான் பன்னீர்செல்வம் அதிமுக-விலிருந்து நீக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி

எனவே அந்தப் பொதுக்குழுவே செல்லாது என உத்தரவிடக் கோரியே பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.

தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஏற்கெனவே வாதங்களை முன்வைத்துள்ளனர்.

அதேபோல, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களைப் பொதுக்குழுவிலிருந்து நீக்கிவிட்டு, ஏராளமான புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதனால் பொதுக்குழுவில் பழனிசாமி ஆதரவாளர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கி, போட்டியிலிருந்து விலகியதற்கான காரணங்களைப் பட்டியலிடவும் பன்னீர்செல்வம் தரப்பு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அண்ணாமலை

இதற்கிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் ஒரே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதுதான் பாஜக-வின் வேண்டுகோள்.

இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவது கூடுதல் பலம் கொடுக்கும். எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றே நேற்று ஓபிஎஸ்-ஸை சந்தித்துக் கேட்டுக்கொண்டோம்.

கூட்டணி தர்மத்தைக் கருதி, பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடாது. கூட்டணியின் வேட்பாளர் குறித்து இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

ஒரு கட்சிக்குள் சண்டையை ஏற்படுத்தி, பிரித்து, அதன் மூலம் குளிர்காய்வது பாஜக-வின் நோக்கம் இல்லை.

எங்கள் பலத்தில் நாங்கள் வளர வேண்டும் என்றே விரும்புகிறோம். மற்றொரு கட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி எங்கள் கட்சி வளர வேண்டும் என நினைத்தால் அது நிலைக்காது.

அதிமுக-வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் எப்போது தலையிட மாட்டோம்’’ என்றார். பன்னீர் தரப்பு வாபஸ் பெற முடிவெடுத்தால், பாஜக கோரிக்கையையும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்!

Share.
Leave A Reply