ராபர்ட் திகைக்கிறான். முன்பின் அறியாத தன்னிடம் இவர்கள் ஏன் இத்தனை அன்பு செலுத்த வேண்டும்? விரைவில் காரணம் வெளிப்படுகிறது.
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது.
சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும்.
அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.
இப்படியும் நடந்ததா?
ராபர்ட் என்ற ஒருவன் நியூயார்க் கல்லூரியில் மாணவனாகச் சேர்கிறான். அவனை சக மாணவர்கள் வரவேற்கிறார்கள். அவனுக்கு ஹைஃபையும் பறக்கும் முத்தங்களையும் அளிக்கிறார்கள். ஆசிரியர்கள்கூட தானாக வந்து பேசுகிறார்கள்.
ராபர்ட் திகைக்கிறான். முன்பின் அறியாத தன்னிடம் இவர்கள் ஏன் இத்தனை அன்பு செலுத்த வேண்டும்? விரைவில் காரணம் வெளிப்படுகிறது. இரு வருடங்களுக்கு முன் அதே கல்லூரியில் படித்த எட்டி என்ற மாணவன்தான் அவன் என்று தவறாக நினைத்துக் கொண்டனர்.
பிறர் எட்டியைப் பற்றிப் பேசப் பேச, ராபர்ட்டுக்கு வியப்பு மேலும் மேலும் அதிகமாகிறது. தோற்றத்தில் மட்டுமின்றி பல குணநலன்களிலும் தன்னையே ஒத்திருக்கும் அந்த எட்டி எங்கு இருக்கிறான் என்று தேடத் தொடங்குகிறான்.
ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்கிறார்கள். தங்கள் குடும்பங்களைப் பற்றி ஆராய்கிறார்கள்.
இருவருமே தத்துப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது. ஒரே தாய் வயிற்றிலிருந்து இரட்டைக் குழந்தைகளாக தாங்கள் பிறந்திருக்க வேண்டும் என்பதையும் வெவ்வேறு குடும்பங்களுக்குத் தத்தளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அறிகிறார்கள்.
இந்தச் செய்தி பரவுகிறது. நாளிதழில் இதைப் படித்து விட்டு டேவிட் என்பவன் அவர்களை அணுகுகிறான்.
அந்த இருவரைப் போலவே தோற்றம் கொண்டிருக்கிறான். தனக்கும் அதே பிறந்தநாள் என்கிறான். முதல் இருவரைப் போலவே மூன்றாமவரின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.
மேலும் ஆராய்ச்சிகள் தொடர, மூவரும் ஒரே தாய் வயிற்றில் ஒரே சமயத்தில் பிறந்தவர்கள் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
தாங்கள் இணைந்ததைப் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள். ஊடகங்கள் அவர்களை மொய்க்கின்றன. பல ரியாலிட்டி ஷோக்களில் அவர்கள் இடம்பெறுகிறார்கள். பின் மூவருமாகச் சேர்ந்து ஒரு உணவகத்தைத் தொடங்குகிறார்கள். நல்ல வியாபாரம்.
ஆனால் காலப்போக்கில் இந்த மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அவை பெரிதாகின்றன.
இதன் விளைவாக அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு சிக்கலாகி மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஒரு கட்டத்தில் எட்டி, 1995-ல் தற்கொலை செய்து கொள்கிறான்.
மேற்படி, இந்த மூவர் குறித்தும் இரு மனவியல் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
மூவரையும் தத்தெடுத்த பெற்றோர்கள் அந்த ஆராய்ச்சியாளர்களைச் சந்தித்து தங்கள் மூன்று தத்துக் குழந்தைகளின் உண்மையான பெற்றோர் யார் என்பதைக் கேட்கிறார்கள். (அந்த மூவரும் ஒரு தத்தெடுக்கும் ஏஜென்சியிலிருந்து பெறப்பட்டவர்கள். எனவே தத்து எடுத்தவர்களுக்குக் குழந்தையின் உண்மையான பெற்றோர் யார் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை).
மனவியல் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்கிறார்கள். தத்துக்கு ஏற்பாடு செய்த அந்த ஏஜென்சியைக் கண்டறிகிறார்கள்.
மூன்று பேரையும் ஒரே குடும்பத்துக்குத் தத்தளிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு குடும்பத்துக்குத் தத்து கொடுத்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் உண்மை வேறு. ஒரு ஆராய்ச்சிக்கு இவர்களை உட்படுத்துவதற்காகத்தான் மூன்று குழந்தைகளும் மூன்று விதமான பின்னணி கொண்ட குடும்பங்களுக்குத் தத்தளிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கியது. ஒன்று நடுத்தர குடும்பம். ஒன்று பணக்கார குடும்பம். ஆக, பிறந்த மூவரின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும், அவர்கள் வளர்க்கப்பட்ட பின்னணியின் வேறுபாடு காரணமாக, மாறுபடுமா மாறுபடாதா என்ற ஆய்வுக்கு அந்த மூவரும் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது ‘த்ரீ ஐடென்டிக்கல் ஸ்ட்ரென்ஜர்ஸ்’ (Three Identical Strangers) என்ற படத்தின் கதை. ஆனால் இது ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர்கள், சம்பவங்கள் அனைத்துமே உண்மை. ஆக, தான் ஒரு ஆராய்ச்சி என்ற பெயரில் நடைபெறும் சதிப் பின்னலின் பகுதியாக இருக்கிறோம் என்பதை அறியாமலேயே எட்டி இறந்திருக்கிறார்.
நிஜ வாழ்வில் பிற இரு சகோதரர்களின் வாழ்க்கை எப்படிப் போகிறது? டேவிட்டுக்குத் திருமணமாகி விட்டது.
இப்போது அவர் இரண்டு பெண்களுக்குத் தந்தை. காலப்போக்கில் டேவிட் விவாகரத்து செய்து விடுகிறார்.
இப்போது நியூ ஜெர்சியில் வசிக்கிறார். தற்கொலை செய்து கொண்ட எட்டியின் குடும்பத்துடன் நட்பு பாராட்டி வருகிறார் ராபர்ட். எட்டியின் மகளும் டேவிட் மகளும் நட்பாக இருக்கிறார்கள்.
என்ன காரணத்தினாலோ டேவிடும் ராபர்ட்டும் முன்பு அதிகம் நட்பு பாராட்டுவதில்லை. ஆனால், இப்போது இருவரும் நட்புடன் இருக்கிறார்கள்.
இருவருமாகச் சேர்ந்து அவ்வப்போது கோல்ப் விளையாடுகிறார்கள். ராபர்ட் ப்ரூக்ளினில் வசிக்கிறார்.
வழக்கறிஞர் தொழிலைச் செய்கிறார். 2011-ல் நடைபெற்ற விபத்து காரணமாக இப்போது பகுதி நேரமாகத்தான் வழக்கறிஞர் பணியைச் செய்கிறார்.
இந்த மூவரின் பெற்றோர் யார் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.
– மர்ம சரித்திரம் நிறைவடைந்தது