மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அணு தொழில் நுட்பத்தை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டிருக்கும் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா என்று வியந்து கொண்டிருக்கும் வேளையில் கடந்த வாரம் ஈரான் இராணுவ தொழிற்சாலை மீது ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கீழ், இஸ்ரேலில் புதிதாக நிறுவப்பட்ட அதி தீவிர வலதுசாரி அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதலாகும்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த வாரம் நிகழ்ந்த பாலஸ்தீன ‘ஜெனின்’ படுகொலையைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் மீண்டும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையே பல காலமாக பனிப்போர் இருந்து வருகிறது.

அத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருவதாக இஸ்ரேல் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.

பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாததாலும், லெபனானில் நடைபெறும் நிகழ்வுகளாலும், ஏற்கனவே வெகுவாகக் குழம்பிப்போயுள்ள மத்திய கிழக்கின் ஸ்திரநிலை, ஈரானின் இராணுவ தொழிற்சாலை மீதான  ட்ரோன் தாக்குதலுடன் நெருக்கடிகளுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அணு வல்லரசாக மாற எத்தணிக்கும் வேளையில் இராணுவ தொழிற்சாலை மீதான ட்ரோன் தாக்குதல் இரண்டு நாடுகளுக்குமிடையே தொடர்ந்து பகைமையை வலுவாக உருவாக்கி வருகிறது.

 

ஈரானில் இராணுவ தொழிற்சாலைக் கட்டடத்தின் மீது ஆளில்லா விமானத்தாக்குதலை தொடர்ந்து சர்வதேச ரீதியில் கச்சாய் எண்ணெய் விலை உயர்வதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதென்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

US Secretary of State Antony Blinken (L) greets Israeli Prime Minister Benjamin Netanyahu following a joint press conference, on January 30, 2023 in Jerusalem.

மத்திய ஈரானில் இஸ்ஃபர்ஹான் நகரில் உள்ள இராணுவ தொழிற்சாலை மீதான தாக்குதலில், இஸ்ரேல் ஏவிய வெடிகுண்டுகளுடன் மூன்று ட்ரோன்கள் வந்துள்ளதாகவும் அதில் இரண்டு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் கூறப்படுகின்றது.

இருப்பினும், ஒரு ட்ரோன் மட்டும் இராணுவத் தொழிற்சாலை மீது விழுந்து வெடித்ததாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பெரியளவில் தீப்பற்றி எரிந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லையென்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இஸ்ஃபர்ஹான் நகரில் இருக்கும் இராணுவக் கட்டடத்தைக் குறிவைத்தே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரானியப் பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் அனேக நாடுகளுக்கு எரிபொருளை வழங்கிக் கொண்டிருக்கும் இப்பிராந்தியத்தில் ஏற்படும் ஸ்திரமற்ற நிலைமை, குறிப்பாக எரிபொருட்களின் விலையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.

அதுமட்டுமின்றி ஈரானின் அணுஆயுத திட்டங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தாலும் தன் நாட்டில் உள்ள அணு ஆயுத வளம் பற்றி எப்போதும் மூடி மறைத்தே வருகிறது.

இது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்தும் கடும் பனிப்போர் நீடித்துக்கொண்டிருக்கின்றது.

ஈரானின் முக்கிய அணு எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ‘யேவயணெ’ இஸ்பஹான் மாகாணத்தில்; நகரத்திலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ளது.

மேலும், இது சமீபத்திய தாக்குதல்களின் இலக்காகத் தெரியவில்லை. பெரிய விமானப்படைத் தளமும் ஈரான் விண்வெளி ஆராய்ச்சி மையத் தளமும், அவ்வாறு இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதப்படுகின்றது.

தாக்குதலைத் தொடர்ந்து, சி.ஐ.ஏ. இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெருசலேமுக்கு விஜயம் செய்ததை அடுத்து, இரண்டு நாள் உத்தியோகபூர்வக் கூட்டங்களைத் தொடங்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கனின் வருகையை அண்மித்தே இத்தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.

அதேநேரம், கிழக்கு மத்தியதரைக் கடலிலும் இஸ்ரேலியப் பகுதியிலும் 7,500க்கும் மேற்பட்ட துருப்புக்களைக் கொண்ட மிகப்பெரிய அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவப் பயிற்சிகளை தொடர்ந்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சியில் ஈரானுக்கு எதிரான பெரிய போரின் ஆரம்பக் கட்டங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகளை அகற்றுவதற்கான முன்கூட்டிய தாக்குதல்கள் மற்றும் போர் விமானங்களுக்கு வான்வழி எரிபொருள் நிரப்புதல் உட்பட, முக்கியமான விடயங்கள் நடைபெற்றிருந்தன.

இத்தாக்குதல் பற்றி இஸ்ரேல் பத்திரிகையான, ‘ஜெருசலேம் போஸ்ட்’ ‘அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் போன்ற இலக்குகளைத் தாக்குவதற்கு வாரம் முழுவதும் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு உடனடியாக அத்தகைய தாக்குதலை நடத்துவது அவர்களின் தீவிரத்தன்மைக்கு ஒரு செய்தியை அனுப்புவதை நோக்காக கொண்டதாகும்.

தாக்குதலுக்கு சற்று முன்பு சி.ஐ.ஏ. இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ் இஸ்ரேலுக்குச் சென்றமை, தாக்குதலைத் திட்டமிடும் சி.ஐ.ஏ. மற்றும் மொசாட் தலைவர்களுக்கு இடையே ஒரு சிறப்பு நேருக்கு நேர் சந்திப்பின் அவசியத்தை நிரூபிக்கும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இஸ்ரேலின் வரலாற்றில் நெதன்யாகு தலைமையிலான புதிய வலதுசாரி அரசாங்கம் பிற்போக்குத்தனமான விரிவாக்க நோக்கங்களை மிக அதிக அளவில் உறுதிப்படுத்தியே பதவியேற்றுள்ளது.

அதன் கொள்கைப் பிரகடன அறிக்கை, இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் யூதமக்களின் ‘பிரத்தியேக உரிமையை’ வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

நெதன்யாகு அவ்வாறு செய்யத் தேர்ந்தெடுக்கும் போது மேற்குக் கரையை முறையாக இணைப்பதற்கும், தற்போதைய இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் கூட சட்டவிரோதமான ஆயிரக்கணக்கான அங்கீகரிக்கப்படாத குடியேற்றங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கும் உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தக் கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமீப வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தை செயலற்றதாக்கி மற்றும் முழுமையான சர்வ அதிகாரத்தை பெறுவதற்கான இக்கூட்டணியின் அச்சுறுத்தலுக்கு எதிராக யூதர்கள் மற்றும் அரேபியர்கள் பங்கேற்ற மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஐங்கரன் விக்கினேஸ்வரா-

Share.
Leave A Reply