இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர்.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய, நகைச்சுவையான மற்றும் பல சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.

இவை, சில நேரங்களில் நெட்டிசன்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெறும். அந்த வகையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சொகுசு ஆட்டோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக வாகனங்களின் மீது பலருக்கும் ஈடுபாடு அதிகமாக இருக்கும். அதிலும் தங்களுடைய வாகனத்தை தங்களுக்கு பிடித்தார் போல மாற்றி அமைத்துக் கொள்ளும் பழக்கம் சமீப காலங்களில் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அந்த வகையில் ஒருவர் தனது ஆட்டோ ரிக்ஷாவை சொகுசு கார் போல வடிவமைத்திருக்கிறார்.

முன்பக்கம் பார்க்கும்போது சாதாரண ஆட்டோ போலவே காட்சியளித்தாலும் அதன் பின்புறம் சொகுசு கார் போல அந்த ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது அதில் குறிப்பிடப்படவில்லை. அந்த வீடியோவில் ஆட்டோவை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தபடி நிற்க, சிலர் அதனை புகைப்படமும் எடுக்கின்றனர்.

இந்த வீடியோவை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒருவேளை விஜய் மல்லையா மலிவான விலையில் மூன்று சக்கர டாக்ஸியை டிசைன் செய்திருந்தால் இப்படித்தான் இருக்கும் என நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இதுவரையில் 16,000- ற்கும் மேற்பட்டோர் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.

மேலும் இந்த “ஆட்டோவை டிசைன் செய்தவரை பாராட்ட வேண்டும்” எனவும் “இந்த ஆட்டோவில் பயணிக்க ஆசையாக இருக்கிறது” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share.
Leave A Reply