துருக்கியிலும், சிரியாவிலும் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,900 ஐ கடந்துள்ளது.
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலையில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.
ரிச்டர் அளவுகோலில் 7.8 பதிவான இந்த பூகம்பம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது.
இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.
பூகம்ப மையப்பகுதிக்கு தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் தரை மட்டமாகி இருக்கின்றன.
இவ்விரு நாடுகளிலும் தீராத சோகமாக, நெஞ்சை நொறுக்கும் துயரமாக மாறி இருக்கிறது. இடிபாடுகளில் படுகாயங்களுடன் குற்றுயிராக கிடந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,900-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 5,894 பேர் மண்ணோடு புதைந்து மரணத்தை தழுவி உள்ளனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளிலும் 2,032 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே துருக்கியில் ஒரு வார கால தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அந்த நாட்டின் ஜனாதிபதி தாயிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.