♠ குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

கோழிக்கோடு : கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியா பவல் (வயது 21). ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை.

இதே மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாத் (23) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்.

இளம் பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி வசித்து வந்த இவ்விருவரும் காதல் வயப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.

இவர்கள், மற்றவர்களைப்போல தாங்களும், தங்கள் பெயர் சொல்ல ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினர்.

இவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றனர். பெண்ணாக இருந்து ஆணாக ஜஹாத் மாறியபோதும், அவரது கருப்பை அகற்றப்படாததால் அவர் கருத்தரிப்பது சாத்தியம் என டாக்டர்கள் தெரிவித்து, உரிய ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிலையில் ஜஹாத் கர்ப்பம் தரித்தார். தொடர்ந்து மருத்துவ ஆலோசனையும் பெற்று வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாங்கள் பெற்றோராக போகிற தகவலை ஜியா பவல் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருந்தார்.

இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஜஹாத்துக்கு நேற்று காலை சுமார் 9.30 மணிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

இது குறித்த தகவலை ஜியா பவல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜஹாத்தும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

ஆனால் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சொல்ல தம்பதியர் மறுத்துவிட்டனர். “எங்கள் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாங்கள் இப்போது பொதுவெளியில் கூற விரும்பவில்லை” என அவர்கள் கூறி விட்டனர்.

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஒருவர் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுக்கொண்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.

 

Share.
Leave A Reply