அதிகார பகிர்வு என்ற தற்கொலை அங்கியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அணிந்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் ஜனதிபதியும் அழிவார், நாடும் அழிவடையும். அதிகார பகிர்வு என்ற தீ பந்தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளார்.

வெகுவிரைவில் பதவி பறிபோகும். நாட்டை இரத்த வெள்ளக்காடாக்கும் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக சர்வகட்சி கூட்டத்தில் கூறியிருந்தார்.

தனது பாராளுமன்ற சிம்மாசன உரையில் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். சர்வக்கட்சி அரசாங்கத்தில் அன்று சிங்கம் போன்று கூறினாலும் சிம்மாசன உரையின் போது சிறிய கொக்கரிப்பு மட்டுமே இருந்தது.

நாங்கள் மேற்கொண்ட எதிர்ப்புகளை அவர் புரிந்துகொண்டுள்ளார் என்று நாங்கள் கருதுகின்றோம். அதன்படி அவர் புரிந்துகொண்டு தொடர்ந்தும் செயற்பாடுவார் என்று எண்ணுகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் காணி விடயத்தில் அது தொடர்பான ஆணைக்குழுவை அமைப்பதே எஞ்சியுள்ளது.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றிணைத்த தனியான மாகாண சபையை அமைத்தல் ஆகியனவும் எஞ்சியுள்ளன.

1987 ஆம் ஆண்டில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தின் ஊடாகவே வடக்கு மற்றும் கிழக்கு இணைப்பு நடந்தது.

அந்த சட்டம் நிறைவடைந்ததும் அந்த இணைப்பு செல்லுபடியற்றதாகியது. ஆனாலும் அந்த விடயம் அரசியலமைப்பில் இருக்கும் வரையில் அந்த இரண்டு மாகாணங்களும் ஒன்றிணையும் வாய்ப்பு உள்ளது. இதற்கு இணங்குகின்றீர்களா? என்று ரவூப் ஹக்கீம் போன்றோரை கேட்கின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருள் விடயத்தை ஒப்படைப்பதையும் அனுமதிக்க முடியாது. அது நரியிடம் கோழியை ஒப்படைப்பது போன்றது.

இதேவேளை பொலிஸ் அதிகாரங்கள் விடயத்தில் 7 ஜனாதிபதிகள் பதவி வகித்த காலத்திலும் சில காரணங்களுக்காக அந்த அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை.

ஏற்கனவே நாடு கடந்த தமிழ் ஈழம் இருக்கின்றது. நிலப்பரப்பு இல்லாவிட்டாலும் திபேத் போன்று இதனை வைத்திருப்பதற்கு திட்டமிடுகின்றனர்.

அன்று விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு நாடுகள் திருட்டுத் தனமாக ஆயுதங்களை வழங்கியிருந்தன. இவ்வாறான நிலைமையில் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் மீண்டும் இந்த நாடு இரத்த காடாகும் நிலைமை ஏற்படும்.

எம்மைப் போன்ற சிறிய நாட்டில் 10 பொலிஸ் பிரிவுகளை ஏற்படுத்தினால் நாட்டில் குற்றங்களை கட்டுப்படுத்தவும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் முடியாது போகும்.

அதேபோன்று அதிகார பகிர்வு தொடர்பாக கதைத்துக்கொண்டு சென்றால் இறுதியில் ஜனாதிபதி பதவிக்கே பாதிப்பாக அமையும். அதேபோன்று 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என்பதனையும் நாங்கள் கூறிக்கொள்கின்றோம்.

நாட்டில் பிரிவினைவாதம் காணப்படும் நிலையில் வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் போராட்டம் தோற்றம் பெறும்.

13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் விக்னேஷ்வரன் போன்ற பிரிவினைவாத கொள்கையுடையவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.

வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் இராணுவத்திற்கும், வடக்கு மாகாண பொலிஸ் தரப்பிற்கும் இடையில் முரண்பாடு தோற்றம் பெறும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த்தை முழுமையாக செயற்படுத்த 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த எந்த அரச தலைவர்களும் அவதானம் செலுத்தவில்லை.

பாரதூர தன்மையை விளங்கிக் கொள்ளாமல் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தால் அவரும் அழிய நேரிடும், அவருடன் சேர்ந்து நாடும் அழிவடையும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் அதிகார பகிர்வு தொடர்பில் அவதானம் செலுத்தினார்.

பெறுபேறு இரண்டரை வருட காலத்திற்குள் பதவி துறந்தார். 2015 ஆம் ஆண்டும் அதே தன்மை தொடர்ந்தது. அதிகார பகிர்வு என்ற விடயத்தை தோளில் சுமந்ததால் பிரதமர் பதவியை முழுமைப்படுத்தாமல் பதவி விலக நேரிட்டது. ஒரு தவறை தொடர்ந்து தொடர்ந்து செய்தால் அந்த நபரை பைத்தியம் என கருத வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பைத்தியம் பிடித்தால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் அதிகார பகிர்வு என்ற தீ பந்தை ஜனாதிபதி கையில் எடுத்துள்ளார், ஆகவே பதவி விலக நேரிடும். நாட்டை இரத்த வெள்ளக்காடாக்கும் 13 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல எவரும் முழுமையக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என்றார்.

 

Share.
Leave A Reply