அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை அரசாங்கம் இரு வருடங்களில் கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தும் என்று யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு கடந்த வருடத்தைய ‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சியை அடுத்து சில மாதங்களாக பதுங்கியிருந்த ‘கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் வெளிக்கிளம்புவதற்கு எதிர்பார்த்திராத ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதை காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கை அதன் வரலாற்றில் முன்னென்றும் காணாத பொருளாதார நெருக்கடிக்கும் அரசியல் குழப்பநிலைக்கும் காரணமான தவறான ஆட்சிமுறைக்கு பொறுப்பான ராஜபக்சாக்கள் பல வருடங்களாக முன்னெடுத்த பெரும்பான்மையினவாத அணிதிரட்டலுக்கு உறுதுணையாக செயற்பட்ட இந்த சக்திகள் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு எதிராக வீதியில் இறங்கத்தொடங்கியிருக்கின்றன.
பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து தனது கொள்கை விளக்க உரையை விக்கிரமசிங்க நிகழ்த்திய கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குமார் பொலிசாருடன் மல்லுக்கட்டியவண்ணம் 13 வது திருத்தத்தின் பிரதிகளை தீயில் பொசுக்கினார்கள்.
முன்னைய ஜனாதிபதிகள் எவரும் முழுமையாக நடைமுறைப்படுத்த முற்படாத சர்ச்சைக்குரிய அந்த திருத்தத்தை விக்கிரமசிங்கவும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக அவருக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில் ஒட்டுமொத்தத்தில் மகாசங்கத்தின் முழுமையான ஆதரவு பாராளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பிக்கு குழுவினருக்கு இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கக்கூடிய சகல முயற்சிகளையும் எதிர்த்துவரும் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகளின் ‘முன்னரங்கப் படைகளாக ‘ பிக்குமார் செயற்பட்டுவருவது தென்னிலங்கை அரசியலில் பாரம்பரியமான ஒரு போக்காகும்.இலங்கையை பாதிக்கும் எந்தப் பிரச்சினையும் இந்தப் போக்கை மாற்றிவிடாது.
மகாசங்கத்தின் நிலைப்பாடுகளில் பெரும்பாலும் நியாயப்பாடு இருக்கும் என்ற ஒரு (தவறான ) நம்பிக்கை சிங்கள பௌத்த சமுதாயத்தில் வேரூன்றியிருப்பது சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்கு அனுகூலமான முறையில் பிக்குமாரை அரசியல் விவகாரங்களில் பயன்படுத்த உதவுகிறது.
என்னதான் இவர்கள் 2500 வருடகால பௌத்த பாரம்பரியம் பற்றி பேசினாலும் இலங்கையில் பௌத்தம் அடிப்படையில் அரசியல் மதமாகவே இருக்கிறது.
ஆனால்,மற்றைய சிங்கள அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும்போது ஜனாதிபதி விக்கிரமசிங்க வெளிவெளியாக மகாசங்கத்தை தூண்டிவிடுகின்ற அரசியலைப் பேசுபவராக பெரும்பாலும் அடையாளம் காணப்பட்டவரல்ல.
ஆனால், அவர் தேசிய இனப்பிரச்சினைக்கு தற்போதைய அரசியலமைப்பு ஏற்பாடுகளின் வரையறைக்குள் அரசியல் தீர்வு காண்பதற்கான தனது முயற்சிகளை கடும்போக்கு தேசியவாத சக்திகளினதும் மகாசங்கத்தினதும் எதிர்ப்புக்களையும் மீறி முன்னெடுக்கக்கூடியவராக துணிவாற்றலை வரவழைத்துக்கொள்வார் என்று நம்புவது கஷ்டமாக இருக்கிறது.
ஜனாதிபதி விக்கிரமசிங்க அவரது மாமனார் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியல் பாதையை பெருவிருப்புடன் பின்பற்றுபவர்.
தனது பேச்சுக்களில் அவரின் அணுகுமுறைகளை அடிக்கடி புகழ்ந்து பேசுபவர். 1987 ஜூலையில் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிறகு அதன் தொடர்ச்சியாக மாகாணசபைகளை அறிமுகப்படுத்துவதற்கு 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை எதிரணி அரசியல் கட்சிகளினதும் சிங்கள தேசியவாத சக்திகளினதும் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும் கூட ஜெயவர்தன பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
சமாதான உடன்படிக்கையை விரும்பாத தனது பிரதமர் பிரேமதாசவைக் கொண்டே அந்த திருத்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்கவைத்தார்.
வடக்கு,கிழக்கில் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னம், அன்றைய இந்திய அரசாங்கத்தின் நெருக்குதல்கள்,இனநெருக்கடியில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை அவர் எதிர்த்து நிற்பதற்கு சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆதரவு இல்லாதமை என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக இது காலவரையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் மாகாணசபைகள் முறையாவது (பெருவாரியான போதாமைகளுக்கு மத்தியிலும் ) இன்று வரை நிலைத்து நிற்பதற்கு எதிரணியினரை மாத்திரமல்ல தனது அரசாங்கத்துக்குள் இருந்த எதிர்ப்பாளர்களையும் சமாளிப்பதில் ஜெயவர்தன காட்டிய ஒருவித துணிச்சலே காரணமாகும்.
அவரின் அரசியலை நியாயப் படுத்துவதாக இதை அர்த்தப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.
தமிழ் தலைவர்கள் அரசாங்கங்களுடன் செய்துகொண்ட முன்னைய ஒப்பந்தங்கள் எல்லாமே கைவிடப்பட்ட நிலையில் 13 வது திருத்தத்தில் மாத்திரம் கைவைப்பதற்கு அரசாங்கங்கள் துணிச்சல் கொள்ளாததற்கு சமாதான உடன்படிக்கையே பிரதான காரணம் என்றபோதிலும், அதிகாரப்பரவலாக்கத்துக்கான ஒரு அடிப்படை அலகாக மாகாணங்கள் அமையக்கூடியதாக இருந்தது ( முன்னைய ஒப்பந்தங்களை எதிர்த்த வரலாற்றைக் கொண்ட) ஜெயவர்தனவின் அரசாங்க காலத்தில் என்பதும் அதற்கு வழிவகுத்த 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து அவரின் மருமகன் சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு பேசப்புறப்பட்டதும் உண்மையில் ஒரு விசித்திரம்தான்.
பாராளுமன்ற கட்சிகளின் இரண்டாவது சுற்று மகாநாட்டை ஜனவரி 26 ஆம் திகதி கூட்டிய ஜனாதிபதி விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் தனது யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதிநிதிகளுக்கு பதிலளிக்கும்போது ஒன்றில் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது பாராளுமன்றத்தில் 22 வது அரசியலமைப்பு திருத்தத்தை தனிநபர் சட்டமூலமாகக் கொண்டுவந்து அதை ஒழிக்கவேண்டும் என்று கூறியதுடன் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்து தான் நிகழ்த்தவிருந்த கொள்கை விளக்க உரையில் இது தொடர்பில் முறைப்படியான அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு வசதியாக யோசனைகளை சுதந்திரதினத்துக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு கட்சிகளைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், எந்த கட்சியுமே யோசனைகளை அனுப்பவில்லை.13 வது திருத்தத்தை எதிர்க்கின்ற கட்சிகள் மாத்திரமல்ல, ஆதரிப்பதாக கூறுகின்ற கட்சிகளும் கூட அதைச் செய்யவில்லை.
தைப்பொங்கல் அறிவிப்புக்கு பிறகு 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் தனது யோசனை குறித்து மீண்டும் கூறுவதற்கு ஜனாதிபதிக்கு இரு முக்கிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
ஒன்று சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை.மற்றையது பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிகழ்த்திய கொள்கை விளக்க உரை.
இரண்டிலுமே அவர் 13 வது திருத்தம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.இனநெருக்கடியை தீர்க்கவேண்டிய அவசியம் குறித்து தனது வழமையான பாணியில் கருத்துக்களை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
” ஆர்.சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டோம்.
நம் இருவருக்கும் பொதுவான கனவொன்று உண்டு.நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இருக்கின்றபோதே இனநெருக்கடிக்கு நிலைபேறான தீர்வைக் காணவேண்டும் என்ற அந்த கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகிறோம்.
முயற்சி செய்கிறோம்.முன்னைய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
ஆனால் இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம்.அதற்காக உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கிறோம்.
“பெருந்தோட்டத்துறைக்காக பாரியளவு சேவையாற்றிய சௌமியமூர்த்தி தொண்டமானும் நானும் ஒன்றாக அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டோம்.நாம் இருவரும் பெருந்தோட்ட
மக்களின் நலன்களுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட்டோம்.தற்போது பெருந்தோட்ட மக்களின் சட்டரீதியான அனைத்து உரிமைகளையும் நாம் வழங்கியிருக்கிறோம்.
ஆனாலும் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இன்னமும் எஞ்சியிருக்கி்ன்றன.
இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பெருந்தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்று அவர் பாராளுமன்ற உரையில் கூறினார்.
மேலும், ஒற்றையாட்சிக்குள் அதிபட்ச அதிகாரப்பரவலாக்கத்தைச் செய்து இனநெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என்று கூறிய ஜனாதிபதி போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
அதிகாரப் பரவலாக்கல் செயன்முறையை உரியமுறையில் நடைமுறைப்படுத்த குறிப்பிட்ட சில சட்டங்களுக்கான திருத்தவரைவுகள் தயாரிக்கப்படும்.
இதற்கான முயற்சிகள் பாராளுமன்றத்தின் தேசிய சபை ஊடாக முன்னெடுக்கப்படும் .
மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கிடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக மாவட்ட அபிவிருத்தி சபைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படமாட்டாது.மத்திய அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக கல்வி,சுகாதாரம் போன்ற துறைகளில் குறைவடைந்துள்ளதாக கூறப்படும் மாகாணங்களின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
13 வது திருத்த நடைமுறைப்படுத்தல் என்ற சொல்லைப் பயன்படுத்துவதை தனதுரையில் தவிர்த்துக்கொள்வதில் விக்கிரமசிங்க மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார்.
அரசியலமைப்பில் மூன்றரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இருந்துவரும் திருத்தம் ஒன்றின் நடைமுறைப்படுத்தல் பற்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பேசமுடியாத அளவுக்கு அதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற ஆதரவில் ஆட்சியை நடத்திக்கொண்டு 13 வது திருத்தத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் பற்றி பேசுவதில் உள்ள பொருத்தப்பாட்டை ஜனாதிபதி முன்கூட்டியே உணர்ந்திருக்கவில்லையா?
அல்லது அவரே கூறுவது போன்று எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையக்கூடிய பொருளாதார நெருக்கடியில் இருந்து கவனத்தைத் திருப்பும் ஒரு தந்திரோபாயமாக அதைச் செய்தாரா என்று கேட்கவேண்டியிருக்கிறது.
எது எவ்வாறிருந்தாலும், முன்னரும் இந்த பத்தியில் குறிப்பிடப்பட்டதைப் போன்று ஜனாதிபதி இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான தனது முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கக்கூடியதாக இருக்குமோ இல்லையோ கடும்போக்கு சிங்கள தேசியவாதிகள் சமூகங்கள் மத்தியில் குரோதங்களை வளர்க்கும் தங்களது நச்சுத்தனமான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
இதைச் சாத்தியமாக்கியதில் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற சக்திகளுக்கு நிச்சயமாக பங்கு இருக்கிறது எனலாம்.
தற்போது தோன்றியிருக்கும் சூழ்நிலை 13 வது திருத்தத்துக்கு ஆதரவாக பேசிய அரசியல் சக்திகளையும் ‘ அடக்கிவாசிக்க ‘ வைத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இலங்கை அரசியலில் குறிப்பாக தேசிய இனநெருக்கடிக்கு தீர்வைக்காண்பதற்கான முயற்சிகள் என்று வரும்போது பிரதான அரசியல் விவாதத்தின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற வல்லமையைக் கொண்டவையாக கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் விளங்குகின்றன.
இந்த சக்திகளின் முன்னரங்கத்தில் தற்போது நிற்கும் விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில மற்றும் யுத்துகம அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க போன்ற அரசியல்வாதிகள் பிரதான கட்சி ஒன்றுடன் அணிசேராமல் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடியளவுக்கு மக்கள் செல்வாக்கைக் கொண்டவர்கள் அல்ல.
இனவாதத்தை தவிர அவர்களிடம் வேறு எந்த அரசியல் ஆயுதமும் இல்லை.மகாசங்கத்தின் ஆதரவுடன் இந்த சிறிய எண்ணிக்கையான அரசியல்வாதிகளினால் தேசிய நெருக்கடியில் பிரதான அரசியல் கட்சிகளினதும் தலைவர்களினதும் செயற்பாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பது சிங்கள பௌத்த அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில் ஒழுக்கநியாயம் இல்லாத ஒரு பாரம்பரியத்தின் வெளிப்பாடேயாகும்.
இதுவே இன்றுவரை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணமுடியாமல் இருப்பதற்கு பிரதான காரணமாகும்.
-வீரகத்தி தனபாலசிங்கம்-