2 நாள்கள் நீடித்த ஆழ்கடல் தேடல்; நடுக்கடலில் வீசப்பட்ட 17 கிலோ தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டது எப்படி?

சிக்கிய மூட்டைகளில் சுமார் 10.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 17.74 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்திருக்கிறது.

மேலும், இதேபோல் தங்கக்கட்டிகள் அடங்கிய மூட்டைகள் கடலில் வீசியிருக்கக்கூடும் என மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தங்கக் கடத்தல் நடைபெறவிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் மண்டபம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியிலிருந்து மண்டபம் நோக்கி இரண்டு அதிக திறன்கொண்ட இன்ஜின்கள் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு வேகமாக வந்திருக்கிறது.

அதை ரேடார் மூலம் கண்டுபிடித்த இந்திய கடற்படை, அந்தப் படகை பின்தொடர்ந்து சென்று, படகை நிறுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தது. ஆனால், படகு நிற்காமல் வேகமாகச் சென்றிருக்கிறது.

மேலும், கடற்படையினர் அருகில் நெருங்குவதை அறிந்து, படகில் இருந்தவர்கள் சில மூட்டைகளைக் கடலில் வீசியபடி சென்றிருக்கின்றனர்.

பின்னர் அந்த நாட்டுப்படகைச் சுற்றிவளைத்த கடற்படையினர், அதிலிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான், அன்வர் அலி, மன்சூர் அலி ஆகிய மூன்று பேரைப் பிடித்து கரைக்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில்வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகளைக் கடத்திவந்ததும், அது இந்திய கடற்படையிடம் சிக்கிவிடாமலிருக்க கடலில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகளை மீட்க ஆழ்கடலுக்குள் செல்லும் திறன் பயிற்சிபெற்ற ஸ்கூபா டைவிங் எனப்படும் நீர்மூழ்கி வீரர்களைக்கொண்டு தேடும் பணி நேற்று முழுவதும் நடைபெற்றது. இருந்தும், தங்கக்கட்டிகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இன்று தூத்துக்குடியிலிருந்து முத்துக்குளிக்கும் குழுவினர் வரவழைக்கப்பட்டு, கடத்தல்காரர்களையும் அழைத்து வந்து, தங்கத்தை வீசிய இடத்தை அடையாளம் காட்டச் சொல்லியிருக்கிறார்கள்.

அதனடிப்படையில், ஆழ்கடலுக்குள் இறங்கித் தேடியதில் தங்கக்கட்டிகள் அடங்கிய மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டன.

சிக்கிய மூட்டைகளில் சுமார் 10.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 17.74 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்திருக்கிறது.

மேலும், இதேபோல் தங்கக்கட்டிகள் அடங்கிய மூட்டைகளைக் கடலில் வீசியிருக்கக்கூடும் என மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதன் காரணமாக தொடர்ந்து நீச்சல் வீரர்கள் கடலில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றனர்.

மீட்கப்பட்ட தங்கக்கட்டிகள்

இலங்கையிலிருந்து இந்தத் தங்கக்கட்டிகளைக் கொடுத்து அனுப்பிய கும்பல் குறித்து, கடத்தல்காரர்கள் மூன்று பேரிடமும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 17.74 கிலோ தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Share.
Leave A Reply